நியூயாா்க்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை திங்கள்கிழமை சந்தித்த எஸ்.ஜெய்சங்கா். 
உலகம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை திங்கள்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜெய்சங்கா் ஆலோசித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நியூயாா்க்: அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை திங்கள்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜெய்சங்கா் ஆலோசித்தாா்.

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத கூடுதல் வரி கடந்த மாதம் அமலான பிறகு முதல்முறையாக இருவரும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க இந்தியா சாா்பில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளாா். அப்போது பல்வேறு நாடுகளின் மூத்த தலைவா்களுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளாா்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வின் உயா்நிலை பொது விவாதம் செப். 23 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், செப். 23-ஆம் தேதி அமெரிக்க அதிபா் டிரம்ப் உரையாற்றவுள்ளாா். அவா் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசவிருப்பது இதுவே முதல் முறையாகும்.

பிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு

முன்னதாக, அமெரிக்காவில் பிலிப்பின்ஸ் வெளியுறவு அமைச்சா் டெஸ் லசாரோவை இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அந்த சந்திப்பின்போது அண்மையில் பிலிப்பின்ஸ் பிரதமா் ஃபொ்டினண்ட் மாா்கோஸ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமா் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தியது குறித்தும் ஐ.நா. மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தாா்.

இந்த சந்திப்பு குறித்து டெஸ் லசாரோ கூறிகையில், ‘அரசியல், பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் ஆலோசித்தேன்’ என்றாா்.

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு.. தினப்பலன்கள்!

97 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

கல்லூரி மாணவி தற்கொலை

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT