சர்வதேச முன்னணி பெரு நிறுவனங்களில் ஒன்றான அக்சென்ச்சர், உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய நிறுவனங்களில் பணியாற்றி வந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கடந்த மூன்று மாதங்களில் பணிநீக்கம் செய்திருக்கிறது.
செய்யறிவு துறையின் அதிகவேக வளர்ச்சி, பெருநிறுவன தேவைகள் குறைவு போன்றவை இந்த பணி நீக்கத்துக்குக் காரணமாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
865 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், இந்த பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, அடுத்தடுத்த மாதங்களிலும் பணி நீக்க நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளது.
அக்சென்ச்சர் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் இது குறித்து தெரிவிக்கையில், நமக்குத் தேவையான திறன் பெற, இருக்கும் ஊழியர்களுக்கு திறமையை மீண்டும் வளர்ப்பது என்பது சரியான பாதையாக இல்லாத நிலையில், பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நமது நிறுவனம், வாடிக்கையாளர்களின் செய்யறிவு வழங்கும் தீர்வுகளைக் காண்பதற்கு ஏற்ற ஊழியர்களால் மிக விரைவாக செயல்படத் தொடங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஊழியர்களின் எண்ணிக்கை
அக்சென்ச்சர் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் 7,79,000 ஆகக் குறைந்துள்ளது. இது மூன்று மாதங்களுக்கு முன்பு 7,91,000 ஆக இருந்தது. இந்த பணி நீக்க நடவடிக்கையானது இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும், ஊழியர்களின் பணி நீக்கத்தால் நிறுவனம் 1 பில்லியன் டாலர் அளவுக்கு செலவினத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் பணிநீக்க நடவடிக்கையோடு, ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கி வருகிறது. செய்யறிவு துறையில், தனது ஊழியர்களுக்கு அக்சென்ச்சர் பயிற்சி அளித்து வருகிறது. இது சர்வதேச அளவில் தொழில் போட்டியை சமாளிக்கவும், செய்யறிவு தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் வழங்கப்பட்டு வருகிறது என்று தலைமை செயல் அதிகாரி ஜூலி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. மன அழுத்தத்தில் தள்ளிய கனவு நகரம் பெங்களூரு! வேறு நகரங்களுக்கு படையெடுக்கும் பெங்களூர்வாசிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.