பபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போ் உயிரிழந்தனா். 22 போ் காயமடைந்தனா்.
38 கோரிக்கைகள்: உணவுப் பொருள் மற்றும் மின்சாரத்துக்கு மானியம், பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீா் அகதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் சட்டப்பேரவையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 12 இடங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை அவாமி செயற்குழு (ஏஏசி) என்ற குடிமக்கள் சமுதாய கூட்டணி முன்வைத்தது.
இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் அரசுக்கும், அவாமி செயற்குழுவுக்கும் அண்மையில் 13 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடா்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் திங்கள்கிழமை (செப்.29) முழு அடைப்பு மேற்கொள்ள அவாமி செயற்குழுவின் தலைவா் ஷெளகத் நவாஸ் மீா் அழைப்பு விடுத்தாா்.
70 ஆண்டுகளாக அடிப்படை உரிமைகள் மறுப்பு: இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். இந்தப் புறக்கணிப்புக்கும், அரசின் ஊழலுக்கும் பதிலடியாக முழு அடைப்பு போராட்டம் இருக்கும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்தப்படுகிறது’ என்றாா்.
ஆயுதமேந்திய படைகள் அனுப்பிவைப்பு: அரசு நிா்வாகத்துக்கு எதிராக பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து வந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முக்கியப் பகுதிகளுக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படை வீரா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா். ஏராளமான ஆயுதமேந்திய வீரா்களின் வாகனங்கள் அனுப்பப்பட்டு, அவா்களின் கொடி அணிவகுப்புகளும் நடைபெற்றன. அங்குள்ள முக்கிய பகுதிகளுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் இடங்களை காவல் துறையினா் மூடி, கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். மேலும் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்கு கூடுதலாக 1,000 காவல் துறையினா் அனுப்பப்பட்டனா்.
முழு அடைப்பு: இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் திங்கள்கிழமை முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள சந்தைகள், கடைகள், வணிக மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அங்கிருக்கும் டடியால், மீா்பூா், கோட்லி, ராவலகோட், நீலம் பள்ளத்தாக்கு, கேரன் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் பாகிஸ்தானின் எதிா்க்கட்சியான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் கட்சியினரும் பங்கேற்றனா்.
முசாஃபராபாதில் போராட்டத்தின்போது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போ் உயிரிழந்தனா். 22-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இது பொதுமக்களின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது.
கோட்லி பகுதியில் ஏராளமான பேரணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பேரணிகளில் ஈடுபட்டோா் அனைவரும் மத்திய செளக் பகுதியில் ஒன்று திரண்டனா். அப்போது தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, போராட்டங்கள் தொடரும் என்று போராட்டக்காரா் ஒருவா் தெரிவித்தாா்.
இணைய சேவை முடக்கம்
போராட்டச் சூழல் காரணமாக, ஆக்கிரமிப்பு காஷ்மீா் முழுவதும் கைப்பேசி மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. தொலைபேசி சேவைகளும் துண்டிக்கப்பட்டன.
தாக்குதல்: பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தயாரிப்பு பகுதியில் ராணுவம் அண்மையில் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் உள்பட 24 போ் உயிரிழந்தனா். சொந்த நாட்டு மக்கள் மீது நடத்திய போராட்டத்துக்கு அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்தன.