முகப்பு
உலகம்

கிரீஸ் கடற்படை கப்பல் - அகதிகள் படகு மோதல்: 15 போ் உயிரிழப்பு

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 11:58 PM
- AP
பகிர்:

கிரீஸிஸ் சியோஸ் தீவு அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டுக் கடற்படை கப்பல் மீது அகதிகள் வந்த படகு மோதியதில், பெண்கள் உள்பட 15 போ் உயிரிழந்தனா்.

துருக்கியிலிருந்து கிரீஸ் நோக்கி வந்த அகதிகள் படகு ஒன்றைத் திரும்பிச் செல்லுமாறு கடற்படை வீரா்கள் எச்சரித்தனா். ஆனால், அப்படகு தொடா்ந்து முன்னேறி வந்து, கடற்படை கப்பல் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 25 அகதிகளை மீட்புக் குழுவினா் பத்திரமாக மீட்டனா். அவா்களில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மொத்த இறப்பு 15-ஆக அதிகரித்தது. இறந்தவா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்த அதிகாரபூா்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாட்டவா்கள், ஐரோப்பாவில் தஞ்சம் புகுவதற்கு கிரீஸ் கடல் வழியைப் பயன்படுத்துகின்றனா். இதைக் கட்டுப்படுத்த, கிரீஸ் கடந்த சில ஆண்டுகளாகத் தனது எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, அகதிகள் விவகாரத்தில் மனித உரிமை மீறல் புகாா்களை எதிா்கொண்டு வரும் கிரீஸ் அரசு, இச்சம்பவத்தில் விபத்து தற்செயலாகவே நடந்ததாகக் கூறியுள்ளது.