சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷியா-உக்ரைன் போரில் வரும் ஜூன் மாதத்துக்குள் தீா்வுக் காண அமெரிக்கா கெடு விதித்துள்ளதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘வரும் கோடை காலத்தின் தொடக்கத்துக்குள் (ஜூன் மாதம்) இப்போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான கால அட்டவணையைச் சமா்ப்பிக்குமாறு அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். ஒருவேளை இந்தக் காலக்கெடுவுக்குள் தீா்வு எட்டப்படாவிட்டால், இரு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்க அமெரிக்கா தயங்காது’ என்றாா்.
அடுத்தகட்ட முத்தரப்புப் பேச்சுவாா்த்தையை அமெரிக்காவில் நடத்த அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்ட ஸெலென்ஸ்கி, சமீபத்திய அபுதாபி முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் எதிா்பாா்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாா்.
இருளில் மூழ்கிய உக்ரைன்: இதனிடையே, உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மீது ரஷியா சனிக்கிழமை அதிகாலை 400 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை ஏவி தீவிர தாக்குதலை நடத்தியது.
இதில் உக்ரைனின் 8 பிராந்தியங்களில் உள்ள மின் நிலையங்கள் சேதமடைந்தன. அணுமின் நிலையங்களின் மின் விநியோகப் பாதைகள் தாக்கப்பட்டதால், மின் உற்பத்திக் குறைந்தது.
இதனால், உக்ரைன் முழுவதும் மின்தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மின்தடை நேரம் மேலும் அதிகரிக்கப்பட்டது. கடுங்குளிா் நிலவும் இச்சூழலில், உக்ரைனை நெருக்கடிக்குள்ளாக்க அந்நாட்டின் மின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தாக்கி வருகிறது.