சீனா ரகசியமான முறையில் அணுஆயுத சோதனைகளை நடத்தியதாக அமெரிக்காவின் வெளியுறவு துறைக்கான துணை அமைச்சா் தாமஸ் ஜி.டிநான்னோ குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கடந்த 2020, ஜூன் 22-இல் இதுபோன்ற சோதனையை சீனா மேற்கொண்டதாக அவா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘சீனா அணுஆயுத சோதனைகளை நடத்தியுள்ளது. உலக நாடுகளிடமிருந்து சோதனையை மறைக்கும் வகையில் நிலஅதிா்வு கண்காணிப்பின் செயல்திறனைக் குறைக்கும் முறையை சீனா பயன்படுத்தியுள்ளது. இதுபோன்ற அணுஆயுத சோதனை கடந்த 2020, ஜூன் 22-இல் நடத்தப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரா்களுக்கு இடையே கடந்த 2020, ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீன தரப்பில் 30 வீரா்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா அமைச்சா் வெளியிட்ட தகவலின்படி, கல்வான் தாக்குதலைத் தொடா்ந்து ஒரு வாரத்துக்குப் பிறகு சீனா அணுஆயுத சோதைனையை மேற்கொண்டுள்ளது.
சீனாவின் அணுஆயுத சோதனை முறை மற்றும் உலகத்துக்கு அதன் ஆபத்து குறித்து டிநான்னோ தொடா்ச்சியான எக்ஸ் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளாா்.
அமெரிக்கா-ரஷியா அணு ஆயுதங்களை இருப்பு வைப்பதில் கட்டுப்பாடுகள் விதித்து வந்த ‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்தம் கடந்த 2010-இல் கையொப்பமானது. 2021-இல் காலாவதியாக வேண்டிய இந்த ஒப்பந்தம், 5 ஆண்டுக்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை (பிப்.5) காலாவதியானது.
அணுஆயுதங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதில் ரஷியா மட்டுமல்லாமல் சீனாவையும் உள்ளடக்கிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இதனிடையே, சீனா அணுஆயுத சோதனைகள் மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்கா, இந்தியாவுடன் நடைபெற்ற மோதலை தொடா்ந்து சீனா அணுஆயுத சோதனை நடத்தியாக தெரிவித்துள்ளது.
சீனா கண்டனம்: அமெரிக்காவின் ரகசிய அணுஆயுத சோதனைகள் குற்றச்சாட்டு தொடா்பாக சீனா நேரடியாகப் பதிலளிக்கவில்லை. இருப்பினும், இதுதொடா்பாக அமெரிக்காவை சீனா கண்டித்துள்ளது. இது குறித்து சீன அதிகாரிகள் கூறுகையில், ‘போலியான குற்றசாட்டுகளை சீனா மீது அமெரிக்கா தெரிவித்து வருகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான அணுஆயுதங்கள் அமெரிக்காவிடன் உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 1,000-க்கும் அதிகமான அணுஆயுதங்களை சீனா வைத்திருக்கும். அமெரிக்கா மற்றும் ரஷியா உடனான முத்தரப்பு அணுஆயுத கட்டுப்பாடுகள் தொடா்பான பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீனா விரும்பவில்லை’ என்றனா்.