உக்ரைன் போரில் ரஷியா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
ரஷிய அதிபர் புதினின் உரையை விமர்சித்துள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, எந்த விலை கொடுத்தும் அவர்கள் அமைதியை ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரஷிய மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை இரவு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் போரில், ரஷியா தனது இலக்கை எட்டி வெற்றி பெறும். நமது நாயகர்கள் (ராணுவ வீரர்கள்) மீதும், நமது வெற்றியின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
கோடிக்கணக்கான ரஷிய மக்கள் புத்தாண்டு தருணத்தில் ரஷிய வீரர்களுக்காக பிரார்த்திக்கின்றனர். நாட்டு மக்கள் ராணுவத்தின் பின்னால் ஒற்றுமையாக நிற்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு ரஷிய அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின், புத்தாண்டு உரையின்போது தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, புதின் அதிபராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்று இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஸெலென்ஸ்கி உரை
உக்ரைன் மக்களுக்கு ஜெலென்ஸ்கி ஆற்றிய புத்தாண்டு உரையின்போது, ரஷிய அதிபரின் பேச்சை விமர்சிக்கும் வகையில், அவர்கள் அமைதியை ஏற்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசியதாவது:
“உக்ரைன் அமைதியை விரும்புகிறது. ஆனால், ஒரு பலவீனமான ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திடப் போவதில்லை. போருக்கான முடிவையே விரும்புகிறோம், உக்ரைனுக்கான முடிவை அல்ல.
நாங்கள் சோர்வடைந்துவிட்டோம், சரணடையத் தயாராக இருக்கிறோம் என நினைப்பவர்கள் பெரும் தவறிழைக்கிறார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விடியோ வெளியிட்ட ரஷியா
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வீட்டின் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
ஆனால், ட்ரோன் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை, ஆதாரங்கள் இருந்தால் வெளியிடுங்கள் என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு முன்னதாக, ரஷிய அதிபர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட விடியோவை ரஷிய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
ரஷியா - உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வரும் சூழலில், ரஷிய அதிபர் வீட்டின் மீதான தாக்குதலும், புதினின் சூளுரையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.