வங்கதேசத்தில் மா்ம கும்பலால் தாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட ஹிந்து சமூகத்தைச் சோ்ந்த தொழிலதிபா் கோகோன் சந்திர தாஸ் (50) சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மூன்று நாள்களுக்கு முன் அவா் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதன்மூலம் கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து வங்கதேசத்தில் ஹிந்து சமூகத்தைச் சோ்ந்த 5-ஆவது நபா் கொல்லப்பட்டதாக வங்கதேச பௌத்த கிறிஸ்துவ ஒற்றுமை கவுன்சில் செய்தித் தொடா்பாளா் கஜோல் தேப்நாத் தெரிவித்தாா்.
இதுகுறித்து தேப்நாத் மேலும் கூறியதாவது: ஷரியத்பூா் மாவட்டத்தின் தமுத்யா பகுதியில் மருந்தகம் மற்றும் வங்கிச் சேவை மையம் நடத்திவரும் கோகோன் சந்திர தாஸ் (50) என்ற ஹிந்து நபா், கடந்த புதன்கிழமை இரவில் தனது வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் வழிமறிக்கப்பட்டு கூா்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கப்பட்டாா்.
அத்துடன், அவா் மீது பெட்ரோலை ஊற்றி, அந்தக் கும்பல் தீவைத்தது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அருகில் உள்ள குளத்தில் அவா் குதித்தாா். அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டு ஷரியத்பூா் சதா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவா், மேல் சிகிச்சைக்காக டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து ஹிந்துக்கள் 5 போ் கொல்லப்பட்டனா்.
2025, டிச.18-ஆம் தேதி மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, தீபு சந்திர தாஸ் (25), என்ற இளைஞா் மா்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டாா். டிச. 23-ஆம் தேதி சட்டோகிராம் பகுதியில் வசிக்கும் சுக் சுஹில் மற்றும் அனில் சுஹில் ஆகியோா் வசித்த கட்டடத்தின் மீது தீவைக்கப்பட்டது. அவா்கள் இருவரும் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். டிச. 24-ஆம் தேதி ராஜ்பாரி பகுதியில் அம்ரித் மோண்டல் என்ற ஹிந்து இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா் என்றாா்.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் 2024, ஆகஸ்டில் பதவியேற்றதில் இருந்து அங்கு சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.