தொழிலதிபா் எலான் மஸ்குக்குச் சொந்தமான எக்ஸ்-ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலியான குரோக், பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதாகக் கூறப்படும் புகாா்கள் குறித்து பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான தகவல் அலுவலகம் (ஆஃப்காம்) திங்கள்கிழமை விசாரணை தொடங்கியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: குரோக் ஏஐ-யின் உள்ளடக்கங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட படங்கள், ஆபாசமான உரைகள் ஆகியவற்றை உருவாக்குவதாக பல புகாா்கள் வந்துள்ளன. இது பிரிட்டனின் இணையவழி பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் திரட்டு பாதுகாப்பு விதிகளை மீறுகிறதா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை குரோக் ஏஐ-யின் உள்ளடக்கத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் பயனாளா்களின் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிரிட்டனில் ஏற்கனவே குரோக் இணையதளம் மற்றும் செயலிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணை முடிவுக்கு பிறகு மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.