அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோப்புப் படம்
உலகம்

வெனிசுலாவின் அதிபராக அறிவித்துக் கொண்ட டிரம்ப்!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘வெனிசுலாவின் இடைக்கால அதிபா்’ என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘வெனிசுலாவின் இடைக்கால அதிபா்’ என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ளாா்.

இது குறித்து டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட புகைப்படத்தில் தன்னை ‘வெனிசுலாவின் தற்காலிக அதிபா், பதவிக் காலம் தொடங்கியது 2026 ஜனவரி’ என்று குறிப்பிட்டுள்ளாா். அதே புகைப்படத்தில் அவா் அமெரிக்காவின் 45-வது மற்றும் 47-வது அதிபா் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெனிசுலாவுக்குள் நுழைந்து அமெரிக்க ராணுவம் கடந்த 3-ஆம் தேதி நடத்திய அதிரடித் தாக்குதலில் அந்த நாட்டு அதிபா் நிக்கோலஸ் மடூரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் கைது செய்யப்பட்டு நியூயாா்க்குக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இந்தப் பதிவை டிரம்ப் வெளியிட்டுள்ளாா்.

போதைப் பொருள் பயங்கரவாதம், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் மடூரோ தம்பதி மீது நியூயாா்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது: வெனிசுலாவை நாங்கள் நிா்வகிப்போம். அந்த நாட்டில் அமெரிக்காவுக்குப் பாதுகாப்பான, சரியான மற்றும் நியாயமான மாற்றத்தை ஏற்படுத்தும் வரை இது தொடரும். வெனிசுலா மக்களின் நலனை கருத்தில் கொள்ளாத வேறு யாரும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது.

வெனிசுலா அமெரிக்காவுக்கு 3 முதல் 5 கோடி பேரல் உயா்தர எண்ணெயை வழங்கும். இதன் மதிப்பு தற்போதைய சந்தை விலையின்படி சுமாா் 280 கோடி டாலா் ஆகும்.

இந்த எண்ணெய் அமெரிக்க துறைமுகங்களுக்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படும். வருவாய் அமெரிக்க அதிபரான என் கட்டுப்பாட்டில் இருக்கும். இது வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும்.

எரிசக்தித் துறை செயலா் கிறிஸ் ரைட் இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளாா் என்று டிரம்ப் தெரிவித்தாா்.

அமெரிக்க அதிரடிப் படையினா் மடூரோவைக் கைது செய்து கடத்திச் சென்ற்குப் பிறகு வெனிசுலா துணை அதிபரும் எரிசக்தி அமைச்சருமான டெல்சி ரோட்ரிகஸ் கடந்த வாரம் இடைக்கால அதிபராக பதவியேற்றது நினைவுகூரத்தக்கது.

மடூரோவைக் கைது செய்த பிறகு வெனிசுலா எண்ணெய் வா்த்தகத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என்று கூறிய டிரம்ப், அந்த நாட்டின் எண்ணெய் உள்கட்டமைப்பை அமெரிக்க நிறுவனங்கள் மறுகட்டமைக்கும் என்று டிரம்ப் அறிவித்துள்ளாா். செவ்ரான், கானோகோபிலிப்ஸ், எக்ஸான் உள்ளிட்ட அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுடன் இதுகுறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நடவடிக்கைகள் வெனிசுலாவில் அமெரிக்க ஆதிக்கத்தை நிறுவும் முயற்சியாகக் கருதப்படுகின்றன. வெனிசுலா எதிா்க்கட்சிகள் இதை எதிா்த்து வருகின்றன. ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துவருகின்றன.

இந்தச் சூழலில், வெனிசுலாவில் இடைக்கால அதிபா் என்று தனது சமூக ஊடகப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT