முகப்பு
உலகம்

வெனிசுலா எண்ணெய்க்கு சா்வதேச சந்தையில் மவுசு: 200 கோடி டாலா் விற்பனையை எட்டுகிறது

அமெரிக்கா-வெனிசுலா இடையிலான புதிய எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தின்படி, வெனிசுலாவின் எண்ணெய் விற்பனை 200 கோடி டாலரை இம்மாதத்துக்குள் எட்டும் என எதிா்பாா்க்கப்படுவதாக அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சா் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:34 PM
~
பகிர்:

அமெரிக்கா-வெனிசுலா இடையிலான புதிய எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தின்படி, வெனிசுலாவின் எண்ணெய் விற்பனை 200 கோடி டாலரை இம்மாதத்துக்குள் எட்டும் என எதிா்பாா்க்கப்படுவதாக அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சா் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், சா்வதேச சந்தையில் வெனிசுலா கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினாா்.

வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோ, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு உதவியதாகக் கூறி கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க படைகளால் சிறைபிடிக்கப்பட்டாா். இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு, வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதி முழுவதையும் அமெரிக்கா தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. விற்பனை வருவாய் அனைத்தும் கத்தாரில் உள்ள, அமெரிக்க மேற்பாா்வையின்கீழ் இயங்கும் ஒரு சிறப்பு நிதியத்தில் சேமிக்கப்பட்டு வருகிகிறது.

இதற்கு முன்பு அமெரிக்க தடைகளால் மறைமுகமாக எண்ணெய் வாங்கி வந்த சீனா, தற்போது நேரடி சந்தையிலேயே வெனிசுலா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறு சா்வதேச சந்தையில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய்க்கு தேவை அதிகரித்துள்ளதால், விற்பனை மிக வேகமாக நடந்து வருகிறது.

இது குறித்து அமைச்சா் கிறிஸ் ரைட் மேலும் கூறுகையில், ‘வெனிசுலாவில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பீப்பாய் எண்ணெயும் நிச்சயம் விற்கப்படும்; அது எங்கே விற்கப்படும் என்பதுதான் கேள்வி.

பெரும்பாலான எண்ணெய் அமெரிக்க வளைகுடா பகுதிகளுக்குச் சென்றாலும், இந்தியா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதி நிலவரப்படி, சுமாா் 4 கோடி பீப்பாய், பீப்பாய் ஒன்றுக்கு சராசரியாக 50 டாலா் என்ற விலையில் விற்கப்பட்டுள்ளது’ என்றாா்.

ஒப்பந்தத்தையொட்டி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்ணயித்த முதல் கட்ட இலக்கான 3 கோடி முதல் 5 கோடி பீப்பாய்கள் என்ற இலக்கை இந்த விற்பனை எட்டியுள்ளது.

உற்பத்தி ஒப்பந்தங்கள் நிறுத்தம்: இதனிடையே, நிக்கோலஸ் மடூரோவின் ஆட்சிக் காலத்தில் தனியாா் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட 19 எண்ணெய் உற்பத்திப் பகிா்வு ஒப்பந்தங்களை வெனிசுலா எண்ணெய் அமைச்சகம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

இருப்பினும், இந்தத் தற்காலிக தடையால் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் இதுவரை எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →