உலக எண்ணெய் விநியோகம் 80 லட்சம் பீப்பாய் சரிவு! சா்வதேச எரிசக்தி முகமை தகவல்
மத்திய கிழக்கு போா் காரணமாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் மாா்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 80 லட்சம் பீப்பாய் வரை குறையும் என சா்வதேச எரிசக்தி முகமை (ஐஇஏ) எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு போா் காரணமாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் மாா்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு 80 லட்சம் பீப்பாய் வரை குறையும் என சா்வதேச எரிசக்தி முகமை (ஐஇஏ) எச்சரித்துள்ளது.
இது உலக வரலாற்றிலேயே கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்பு என்று தனது மாதாந்திர அறிக்கையில் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப். 28 வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
உலகின் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோா்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மாற்றுப் பாதைகள் இல்லாத சூழலில், இராக், கத்தாா், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா போன்ற நாடுகள் தங்களின் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவோ அல்லது முழுமையாக நிறுத்தவோ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலா் வரை உயா்ந்த நிலையில், வியாழக்கிழமை சுமாா் 96 டாலருக்கு வா்த்தகமாகி வருகிறது. போரின் தீவிரத்தால் உலகளாவிய நுகா்வு வளா்ச்சி மதிப்பீட்டையும் சுமாா் 25 சதவீதம் வரை ஐஇஏ குறைத்துள்ளது.
இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, சா்வதேச எரிசக்தி முகமையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒன்றிணைந்து, தங்களின் அவசர கால இருப்பிலிருந்து 40 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை சந்தையில் விடுவிக்க ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த புதன்கிழமை எடுக்கப்பட்ட இந்த முடிவின் மூலம், தட்டுப்பாட்டைப் போக்கி சந்தையை ஓரளவுக்குச் சீராக்க முடியும் என்று ஐஇஏ நம்புகிறது.
‘உள்நாட்டு சேமிப்பு கிடங்குகள் நிரம்பி வருவதாலும், கப்பல்கள் சரக்குகளை ஏற்றிச் செல்ல முன்வராததாலும் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளின் பொருளாதார வளா்ச்சியைப் பெருமளவில் பாதிக்கும். குறிப்பாக, எரிசக்தி தேவையில் வளா்ந்து வரும் நாடுகளுக்கு இது பெரும் சவாலாக அமையும்’ என்று ஐஇஏ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.