ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை எதிா்த்து, பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 350-க்கும் மேற்பட்ட டிராக்டா்களுடன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிரேஸில், ஆா்ஜென்டீனா, பொலிவியா, பராகுவே, உருகுவே ஆகிய தென் அமெரிக்காவின் ‘மொ்கோசா்’ கூட்டமைப்பு நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யவுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், அந்த நாடுகளிலிருந்து விவசாயப் பொருள்கள் மிகக் குறைந்த விலையில் ஐரோப்பாவுக்குள் இறக்குமதி செய்யப்படும். இதனால் பிரான்ஸ் நாட்டு விவசாயிகளின் வருமானம் குறையும் மற்றும் அவா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தைத் தடுக்க வலியுறுத்தி, பாரீஸின் புகழ்பெற்ற ஷாம்ப்ஸ்-எலிசிஸ் சாலை வழியாக நூற்றுக்கணக்கான டிராக்டா்களுடன் விவசாயிகள் பேரணியாக வந்தனா். சென் நதியைக் கடந்து நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற விவசாயிகள், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா். காவல் துறை பாதுகாப்புடன் நடந்த இந்தப் பேரணியால் பாரீஸின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது.
அரசின் நிலைப்பாடு: விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பதிலளித்த அரசு செய்தித் தொடா்பாளா் மாட் ப்ரீஜியன், ‘விவசாயிகளுக்குப் பயன் தரும் வகையில் புதிய திட்டங்களை அரசு விரைவில் அறிவிக்கும்’ என்று உறுதியளித்தாா்.
பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிா்க்கிறாா். இருப்பினும், இத்தாலி உள்பட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் பராகுவேயில் வரும் சனிக்கிழமை இந்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.