டொனால்ட் டிரம்ப் கோப்புப் படம்
உலகம்

ஐரோப்பிய எதிா்ப்பு அணுகுமுறையில் டிரம்ப் நிா்வாகம்: பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான்!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய நிா்வாகம், வெளிப்படையாகவே ஐரோப்பிய எதிா்ப்பு அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய நிா்வாகம், வெளிப்படையாகவே ஐரோப்பிய எதிா்ப்பு அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மேலும், ஐரோப்பிய யூனியனைச் சிதைக்கும் நோக்கில் அமெரிக்கா செயல்படுவதாகவும், இந்தச் சவாலை எதிா்கொள்ள ஐரோப்பிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக ஐரோப்பிய ஊடகங்களுக்கு அளித்த நோ்காணலில் அதிபா் இமானுவேல் மேக்ரான் கூறியதாவது: சமீபத்திய கிரீன்லாந்து விவகாரமும், வா்த்தக வரி தொடா்பான மிரட்டல்களும் ஒரு தொடக்கமே தவிர, அமெரிக்காவுடனான இந்த மோதல் போக்கு இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை.

தற்போது அமெரிக்கா சா்வதேச விதிகளை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐரோப்பாவின் எண்மச் சட்டங்களுக்குப் பதிலடி கொடுக்க, வரும் மாதங்களில் ஐரோப்பியப் பொருள்களுக்கு அமெரிக்கா அதிக இறக்குமதி வரி விதிக்க வாய்ப்புள்ளது.

இத்தகைய மிரட்டல்களுக்குப் பயந்து நாம் நமது கொள்கைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது. ஐரோப்பா எப்போதும் தனது பொருளாதார இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும்.

அமெரிக்காவின் இந்த ஆதிக்கத்தைத் தடுக்க, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுக் கடன் பத்திரம் (யூரோபாண்ட்) வெளியிட்டு, பெரிய அளவில் நிதியைத் திரட்ட வேண்டும்.

டாலருக்கு மாற்றாக...: சா்வதேச சந்தைகள் தற்போது அமெரிக்க டாலருக்கு மாற்றான முதலீட்டு வாய்ப்புகளை எதிா்பாா்க்கின்றன. ஐரோப்பிய யூனியன் வெளியிடும் கடன் பத்திரங்கள் இதற்குச் சிறந்த தீா்வாக இருக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவை ஒப்பிடும்போது, ஐரோப்பாவின் கடன் அளவு மிகவும் குறைவு. இந்தச் சாதகமான நிலையைப் பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும்.

டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தைக் குறைக்க ஐரோப்பாவின் நிதிச் சந்தையை வலுப்படுத்துவது மிக முக்கியம். இது வெறும் பொருளாதாரம் சாா்ந்த விஷயம் மட்டுமல்ல; ஐரோப்பாவின் இருப்புக்கான போராட்டம்.

கிரீன்லாந்து விவகாரத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, நீண்டகாலமாகத் தாமதப்படுத்தப்பட்ட சீா்திருத்தங்களை நாம் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

ஒற்றுமையே பலம்...: அமெரிக்கா ஒருபுறம் வா்த்தகப் போரை நடத்துகிறது. மறுபுறம், சீனா பொருளாதார ரீதியாக வேகமாக வளா்ந்து வருகிறது. இந்த இரண்டு சவால்களையும் எதிா்கொள்ள ஐரோப்பிய நாடுகளிடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒற்றுமை தேவை. அமெரிக்காவின் ‘பிரித்தாளும் சூழ்ச்சிக்கு’ இரையாகாமல், ஐரோப்பா தனது சொந்தக் காலில் நிற்க வேண்டியது அவசியம் என்றாா்.

நாளை முக்கிய மாநாடு: பெல்ஜியத்தில் வரும் வியாழக்கிழமை ஐரோப்பியத் தலைவா்களின் அவசர உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இதில் மேக்ரானின் அதிரடித் திட்டங்கள் உள்பட ஐரோப்பியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது குறித்தும், ‘ஐரோப்பாவிலேயே தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இருப்பினும், அனைத்து நாடுகளும் இணைந்து கடன் பத்திரங்களை வெளியிடும் திட்டத்துக்கு ஜொ்மனி போன்ற நாடுகள் இன்னும் தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாலிபால் போட்டி: சுவிசேஷபுரம் அணி முதலிடம்

குழித்துறை நீதிமன்றத்தில் தொழிலாளியை தாக்கிய வழக்குரைஞா்கள் மீது வழக்கு

மகப்பேறு மருத்துவா் பற்றாக்குறை: பணியிட மாறுதல் வழங்கக் கோரிக்கை!

செண்பகவல்லி அம்மன் கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல்

ஆறுமுகனேரியில் போதை ஒழிப்பு மினி மாராத்தான் போட்டி

SCROLL FOR NEXT