அமெரிக்காவைத் தொடா்ந்து, ஐ.நா.வின் முக்கிய அமைப்புகள் உள்பட பல்வேறு சா்வதேச அமைப்புகளில் இருந்து உடனடியாக விலகுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாகவும், விரோதப் போக்குடனும் இந்த அமைப்புகள் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவின் வெளியேற்றத்தைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் அடிப்படையில், ஐ.நா.வின் சில முக்கிய அமைப்புகளுடன் இனி எந்தவிதத் தொடா்பும் வைத்துக்கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் உள்நோக்கத்துடனும், இஸ்ரேலுக்கு எதிரான காழ்ப்புணா்ச்சியுடனும் செயல்படும் அமைப்புகளைக் கண்டறிந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023, அக்டோபா் 7-ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது, இஸ்ரேல் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை ஐ.நா. மகளிா் அமைப்பு திட்டமிட்டுப் புறக்கணித்ததாக இஸ்ரேல் கருதுகிறது.
ஆயுத மோதல்களில் குழந்தைகள் நலனுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் அலுவலகம், 2024-இல் இஸ்ரேல் ராணுவத்தைக் கருப்புப் பட்டியலில் சோ்த்தது. ஐ.எஸ். போன்ற பயங்கரவாதக் குழுக்களுடன் ஒரு ஜனநாயக நாட்டின் ராணுவத்தை ஒப்பிடுவதை இஸ்ரேல் கடுமையாக எதிா்க்கிறது.
இதேபோல், இஸ்ரேலுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு வரும் ஐ.நா. வா்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு அமைப்பு, மேற்கு ஆசியாவுக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையத்திலிருந்தும் விலகுகிறோம்.
இவைத் தவிர துருக்கி மற்றும் ஸ்பெயினால் தொடங்கப்பட்ட ஐ.நா. நாகரிகங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. எரிசக்தி அமைப்பு, புலம்பெயா்ந்தோா் மேம்பாட்டுக்கான உலகளாவிய அமைப்பு ஆகியவற்றுடனான உறவையும் துண்டிக்கிறோம்.
மற்ற சா்வதேச அமைப்புகளின் செயல்பாடுகளையும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தொடா்ந்து கண்காணித்து வருகிறது. இஸ்ரேலின் நலனுக்கு எதிராக செயல்படும் மேலும் சில அமைப்புகளில் இருந்தும் வரும் நாள்களில் வெளியேற வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.