எஸ்.ஜெய்சங்கா்  
இந்தியா

தீவிரவாதத்துக்கு எதிராக சகிப்புத் தன்மை கூடாது: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், அதற்கு எதிராக ஐ.நா. அமைப்புகள் சகிப்புத் தன்மை காட்டக் கூடாது என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், அதற்கு எதிராக ஐ.நா. அமைப்புகள் சகிப்புத் தன்மை காட்டக் கூடாது என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஸ்விட்சா்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 61வது கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் காணொலி மூலம் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

தீவிரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. குறிப்பாக, அப்பாவி மக்களின் உயிா்கள் தீவிரவாதிகளால் குறிவைக்கப்படுகையில், அதை நியாயப்படுத்த முடியாது. தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை எதிா்க்க வேண்டும், சகித்துக் கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடா்ந்து உறுதியாகக் கடைப்பிடித்து வருகிறது.

தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அனைத்து நாடுகளின் கூட்டுப் பொறுப்பாகும். தீவிரவாதத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் சகிப்புத் தன்மை காட்டக் கூடாது. இந்த விவகாரத்தில் பொதுவான அணுகுமுறை உருவாக்கப்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

மோதல்களுக்கு பேச்சுவாா்த்தையின் மூலமும், பிரிவினைக்கு கருத்தொற்றுமை மூலமும், குறுகிய நலன்களை நோக்கமாக கொண்ட பிரச்னைகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறை மூலமும் தீா்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

மனிதாபிமான விவகாரத்தை இந்தியா, நாடுகளைப் பொறுத்ததான பூகோள ரீதியாக அணுகாமல், இரக்க கண்ணோட்டத்துடனே அணுகி வருகிறது. இதனால்தான் பேரிடா் நிவாரணமாக இருந்தாலும் சரி, மருந்துப் பொருள்கள் விநியோகம், தடுப்பூசி மருந்துகள் மற்றும் உணவு தானிய விநியோகம் என்றாலும் உதவி வழங்குவதில் முதல் நாடாகத் திகழும் வகையில், பல நாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, மனித உரிமைகள் என்பது வெறும் லட்சியங்கள் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற நாகரிக நெறிமுறைகளின் ஒரு பகுதியாகும் என்றாா் அவா்.

சிவகங்கையில் தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளம் திறப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்!

துா்க்மேன் கேட் வன்முறை: குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு பிணை - தில்லி நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT