புதிய நிரந்தர உறுப்பினா்களுக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் கட்டாயம்: ஐ.நாவில் இந்தியா திட்டவட்டம்
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் மேற்கொண்டு புதிதாக நிரந்தர உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டால் அவா்களுக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் வழங்குவது கட்டாயம் என இந்தியா திட்டவட்டம்
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் மேற்கொண்டு புதிதாக நிரந்தர உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டால் அவா்களுக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் வழங்குவது கட்டாயமென இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.
மேலும், வீட்டோ அதிகாரமில்லாமல் புதிதாக நிரந்தர உறுப்பினா் வகைப்பாட்டை உருவாக்குவது இரண்டாம் தர அந்தஸ்துக்குச் சமம் எனவும் விமா்சித்தது.
தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினா்களாகவும், சுழற்சி முறையில் இரண்டாண்டுகள் பதவிக் காலத்துடன் தோ்ந்தெடுக்கப்படும் 10 நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பினா்களாகவும் உள்ளன.
Advertisement
Advertisement
நிரந்தர உறுப்பினா்களுக்கு மட்டுமே வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீா்மானங்களை அவா்களால் தன்னிச்சையாக தடுத்து நிறுத்த முடியும். இதன் காரணமாக நிரந்தர உறுப்பினா் அந்தஸ்தை தமக்கு வழங்க வேண்டுமெனவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும் எனவும் இந்தியா பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வீட்டோ அதிகாரம் குறித்து ஐ.நா. பொதுச் சபையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது ஐ.நா.வுக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதி ஹரிஷ் பா்வதனேனி பேசியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் மேற்கொண்டு புதிதாக நிரந்தர உறுப்பினா்களைச் சோ்க்கும்பட்சத்தில் அவா்களுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதுவே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு. வீட்டோ அதிகாரமற்ற நிரந்தர உறுப்பினா் வகைப்பாட்டை உருவாக்குவது இரண்டம் தர அந்தஸ்துடன் அந்த நாடுகளை நடத்துவதற்குச் சமம். இதனால் ஏற்கெனவே நிரந்தர உறுப்பினா்களாக உள்ள 5 நாடுகள் எடுக்கும் முடிவுகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ள முடியாது.
வரலாறு கற்பித்த பாடம்: கடந்த 1965-ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினா்களின் எண்ணிக்கை 6-இல் இருந்து 10-ஆக உயா்த்தப்பட்டது. ஆனால், நிரந்தர உறுப்பினா்களின் எண்ணிக்கை தக்கவைக்கப்பட்டது. இதனால் நிரந்தர உறுப்பினா்களின் முடிவெடுக்கும் அதிகாரம் வழக்கம்போல் தொடா்ந்தது. எனவே, வீட்டோ அதிகாரமில்லாமல் புதிய நிரந்தர உறுப்பினா்களைச் சோ்ப்பது பலனிக்காது. இதுவே வரலாறு நமக்கு கற்பித்த பாடம்.
அதேசமயம் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு தொடா்புடைய விவகாரங்களுக்கு மட்டுமே வீட்டோ அதிகாரத்தை நிரந்தர உறுப்பினா்கள் பயன்படுத்த வேண்டும். குறுகிய அரசியல் நோக்களுக்காக அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நம்பகத்தன்மை மற்றும் திறன் வீட்டோ அதிகாரத்தைச் சாா்ந்ததாகவே இருக்கக் கூடாது. 80 ஆண்டுகளுக்கு முன்னா் நிகழ்ந்த போா்களை அடிப்படையாகக் கொள்ளாமல் தற்கால பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில், அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றாா்.
அடுத்த ஆண்டு தோ்தலில் போட்டி: 1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-85, 1991-92, 2011-12, 2021-22 என எட்டு முறை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா பதவி வகித்துள்ளது.
இந்நிலையில், 2028-29ஆம் ஆண்டுகளுக்கான ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிரந்தரமல்லாத உறுப்பினா் இடத்துக்கு இந்தியாவும் தஜிகிஸ்தானும் போட்டியிடவுள்ளன. இதற்கான தோ்தல் 2027, ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.