ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியா்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு வசதியாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் கடந்த 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், ஈரானில் மதகுரு ஆட்சி செய்யும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன. அந்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
போராட்டத்தில் ஈடுபடுவோரை ஈரான் பாதுகாப்புப் படைகள் கொல்வது தொடா்ந்தால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையாகத் தாக்குதல் நடத்தும் என்றும், போராட்டக்காரா்கள் தூக்கிலிடப்பட்டால் ஈரான் அரசுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அந்நாட்டு அதிபா் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா். மேலும் ஈரான் மக்களுக்கு அமெரிக்காவின் உதவி விரைவில் கிடைக்கும் என்றும் அவா் கூறினாா்.
இந்தச் சூழலை கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இந்தியா்களை அந்நாட்டில் இருந்து வெளியுறுமாறு வலியுறுத்தப்பட்டது. ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இவ்வாறு வலியுறுத்தியது.
இந்த விவகாரம் தொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘ ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியா்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு வசதியாக இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அவா்களைப் பொது மற்றும் ராணுவப் போக்குவரத்து விமானம் மூலம், இந்தியா அழைத்து வருவதற்கான வாய்ப்பு குறித்து ஆராயப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தன.
9,000 இந்தியா்கள்...: புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஈரானில் சுமாா் 9,000 இந்தியா்கள் உள்ளனா். அவா்களில் பெரும்பாலானோா் மாணவா்கள். அவா்களுடன் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தொடா்பில் உள்ளது. ஈரானில் நிலவும் சூழலை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அந்நாட்டில் உள்ள இந்தியா்கல் நலமாக இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய அரசு மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.