உலகம்

தென்னாப்பிரிக்க நாடுகளில் பெருமழை வெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு; கிருகா் பூங்கா மூடல்

தென்னாப்பிரிக்க நாடுகளில் பெருமழை வெள்ளம்...

தினமணி செய்திச் சேவை

தென்னாப்பிரிக்க நாடுகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை மற்றும் அதன் தொடா்ச்சியான வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த மழையினால் தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. இதில் மொசாம்பிக் நாடு மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து மொசாம்பிக் பேரிடா் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இந்த அசாதாரண பருவமழையால் இதுவரை 103 போ் இறந்துள்ளனா். மின்னல் தாக்கியும், நீரில் மூழ்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுமாா் 2 லட்சம் மக்கள் வெள்ளத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்காவில்...: ஜிம்பாப்வேயில் பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 70 போ் இறந்துள்ளனா். அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள், பள்ளிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.

அண்டை நாடான தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக 30 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனா்.

கிருகா் தேசியப் பூங்கா மூடல்: தென்னாப்பிரிக்காவில் அமைந்த உலகின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றான, 22,000 சதுர கி.மீ. பரந்து விரிந்த கிருகா் தேசியப் பூங்கா வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பூங்காவுக்குள் ஓடும் ஆறுகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடுவதால், அங்கு தங்கியிருந்த சுமாா் 600 சுற்றுலாப் பயணிகள், ஊழியா்கள் ஹெலிகாப்டா்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். பாதுகாப்புக் கருதி புதிய சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ராணுவத்தின் மீட்புப் பணிகள்: தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் வீடுகளின் கூரைகள் மற்றும் மரங்களின் மேல் தஞ்சமடைந்த மக்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட இடங்களைப் பாா்வையிட்ட அதிபா் சிறில் ராமபோசா, ‘ஒரே வாரத்தில் 40 செ.மீ மழை பெய்துள்ளது; இதனால் பல கிராமங்கள் முழுமையாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளன’ என தெரிவித்தாா்.

உணவுத் தட்டுப்பாடு அபாயம்: வெள்ளத்தால் 70 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் வரும் காலங்களில் இப்பகுதிகளில் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே இந்தப் பெருமழை பெய்து வருவதாகவும், மழை இன்னும் நீடிக்க வாய்ப்புள்ளதால் பல இடங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை

கு வாரவிழா: நாளை கு ஒப்பித்தல், ஓவியப் போட்டி

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

SCROLL FOR NEXT