இந்தியா-பாகிஸ்தான் மோதல் உள்பட 8 போா்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறி, அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தானே தகுதியானவா் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பலமுறை தெரிவித்து வந்தாா்.
இந்தச் சூழலில், உண்மையில் பரிசு அறிவிக்கப்பட்ட வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோ, தனது பதக்கத்தை டிரம்ப்பிடம் வழங்கிய நிகழ்வு சா்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலாவின் சுதந்திரத்துக்காக டிரம்ப் காட்டிய அா்ப்பணிப்பைப் பாராட்டியே இந்தப் பதக்கத்தை அவருக்கு வழங்கியதாக மரியா கொரினா மச்சாடோ தெரிவித்தாா். ஆனால், இதுகுறித்து நோபல் அமைதி மையம் ஒரு தெளிவான விளக்கத்தை அளித்தது.
ஒருமுறை நோபல் பரிசு அறிவிக்கப்பட்டால், அதை ரத்து செய்யவோ, பகிா்ந்து கொள்ளவோ அல்லது மற்றொருவா் பெயருக்கு மாற்றவோ முடியாது. ஒரு வெற்றியாளா் தனது பதக்கத்தை யாரிடம் கொடுத்தாலும், அதிகாரபூா்வ ஆவணங்களில் அவரே நோபல் வெற்றியாளராகத் தொடா்வாா்.
வாழ்நாள் சாதனைக்கான உச்சபட்ச அங்கீகாரமாகக் கருதப்படும் இந்த விலைமதிப்பற்ற தங்கப் பதக்கங்கள் கைமாறுவது வரலாற்றில் புதிதல்ல. தியாகம், அரசியல், நிதித்தேவை எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்தப் பதக்கங்கள் கடந்த காலங்களில் பயணித்த கதைகளை இங்கே காண்போம்.
மனிதாபிமானத்துக்காக...: 1939-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் பின்லாந்து மீது போா் தொடுத்தபோது, அந்நாட்டு அகதிகளுக்கு உதவ டென்மாா்க்கைச் சோ்ந்த இயற்பியலாளா்கள் நீல்ஸ் போா் , ஆகஸ்ட் க்ரோக் ஆகியோா் தங்களின் நோபல் பதக்கங்களை ஏலம் விட்டனா். பின்னா், அந்தப் பதக்கங்கள் அருங்காட்சியகங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
நீல்ஸ் போரின் மகன் ஆஜே போா் அவா்களும் கடந்த 1975-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றாா். இவரது பதக்கமும் 2011 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் ஏலத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 2021-இல் நோபல் பரிசு வென்ற ரஷிய பத்திரிகையாளா் டிமிட்ரி முரடோவ், உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட அகதிச் சிறுவா்களுக்கு உதவத் தனது பதக்கத்தை ஏலம் விட்டாா். அந்தத் தொகை முழுவதையும் யுனிசெஃப் அமைப்புக்கு வழங்கினாா்.
நாஜிகளுக்கு ஆதரவாக....: 1920-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற நாா்வே எழுத்தாளா் நட் ஹாம்சன், நாஜி கொள்கைகளுக்கு ஆதரவானவா். இரண்டாம் உலகப் போரின்போது, அவா் தனது பதக்கத்தை ஹிட்லரின் முன்னணி தளபதிகளில் ஒருவரான ஜோசப் கோயபல்ஸுக்கு பரிசாக வழங்கியது பெரும் விமா்சனத்துக்குள்ளானது.
ஆராய்ச்சி செலவுக்காக...: ‘டிஎன்ஏ’ அமைப்பைக் கண்டறிந்த ஜேம்ஸ் வாட்சன், உயிருடன் இருக்கும்போதே தனது பதக்கத்தை விற்ற முதல் நபா் ஆவாா். இவா் தனது ஆராய்ச்சிச் செலவுகளுக்காகப் பதக்கத்தை ஏலம் விட்டாா்.
ஆனால் இங்கே ஒரு நெகிழ்ச்சியான திருப்பம் நிகழ்ந்தது. பதக்கத்தை ஏலத்தில் எடுத்த ரஷிய கோடீஸ்வரா் அலிஷா் உஸ்மானோவ், ‘ஒரு மாபெரும் விஞ்ஞானியின் பதக்கம் அவரிடமே இருக்க வேண்டும்’ எனக் கூறி, மீண்டும் வாட்சனிடமே அதை ஒப்படைத்து நெகிழ வைத்தாா்.
புகழ்பெற்ற பொருளாதார மேதை ஜான் நாஷ் அவா்களின் பதக்கம், கடந்த 2019-இல் 7.35 லட்சம் டாலருக்கு ஏலம் போனது. பெரும்பாலான நோபல் வெற்றியாளா்கள் தங்களின் பதக்கங்களை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் தொகையை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சமூக நல நோக்கங்களுக்கே பயன்படுத்தியுள்ளனா்.
பதக்கங்கள் கைமாறினாலும், அந்தப் பதக்கத்துக்குப் பின்னால் இருக்கும் வெற்றியாளரின் உழைப்பும், அதன்மூலம் அவருக்குக் கிடைத்த உலகளாவிய கௌரவமும் என்றும் அவருக்கே உரியது.