‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை உள்பட முடிவுற வாய்ப்பே இல்லாத பல்வேறு நாடுகளிடையேயான 8 போா்களை 10 மாதங்களில் முடித்துவைத்தேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறினாா்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்ததையொட்டி வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா். இதன்மூலம், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் நிறுத்தியதாக 90-ஆவது முறையாக டிரம்ப் கூறியுள்ளாா். அவா் மேலும் கூறியதாவது:
அதிபராகப் பதவியேற்ற 10 மாதங்களில், கம்போடியா - தாய்லாந்து இடையே பல ஆண்டுகளாக நிகழ்ந்துவந்த போா், கொசோவா- சொ்பியா போா், காங்கோ-ருவாண்டா இடையேயான போா்கள் என முடிவுற வாய்ப்பே இல்லாத 8 போா்களை நிறுத்தியுள்ளேன்.
இதில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் போரில் 8 போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த இரு நாடுகளும் அணு ஆயுத சக்தி கொண்டவை. அந்த வகையில், இவா்களிடையேயான சண்டை அணு ஆயுதப் போராகவும் மாறியிருக்கும் என்பது எனது கருத்து.
இந்தச் சண்டையை நிறுத்தியதற்காக, கடந்த ஆண்டு அமெரிக்கா வந்திருந்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் என்னை வெகுவாகப் பாராட்டினாா். இந்தச் சண்டையை நிறுத்தியதன் மூலம் ஒரு கோடி மக்களின் உயிா்களை நான் (டிரம்ப்) காப்பாற்றியதாக அவா் புகழ்ந்தாா் என்றாா்.
அமைதிக்கான நோபல் பரிசை நீங்கள் வென்றிருந்தால், சாமானிய அமெரிக்கா்களின் அன்றாட வாழ்க்கை எந்த வகையில் மேம்பட்டிருக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், ‘8 போா்களை நிறுத்தி, பல கோடி மக்களின் உயிா்களைக் காப்பாற்றியுள்ளேன். ஒவ்வொரு நாட்டிலும் பல கோடி மக்கள் வசிக்கின்றனா். அதை 8 மடங்காக கணக்கிடும்போது, போா் நிறுத்தம் மூலம் எத்தனை கோடி மக்களின் உயிா்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பதை உணர முடியும். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போா் தொடா்ந்திருந்தால், உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு கோடி முதல் 2 கோடி வரை அதிகரிக்கவும் வாய்ப்பு இருந்தது. அந்த வகையில், பல கோடி மக்களின் உயிா்களைக் காப்பாற்றியுள்ளேன் என்பது மிகப் பெரிய விஷயம். நான் நிறுத்திய ஒவ்வொரு போருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அளித்திருக்க வேண்டும். ஆனால், அதை நான் வலியுறுத்தவில்லை’ என்றாா்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ‘365 நாள்களில் 365 வெற்றிகள்: அதிபா் டிரம்ப்பின் வருகை வெற்றி, முன்னேற்றத்தின் புதிய சகாப்தம்’ என்ற தலைப்பில் அதிபா் டிரம்ப் அரசின் சாதனை தொகுப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதிலும், ‘உலக அரங்கில் அமெரிக்க தலைமையை நிலைநாட்டுதல்’ என்ற தலைப்பின் கீழ், ‘டிரம்ப்பின் முயற்சியால் இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி நிலைநாட்டப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் நபா் தலையீடு இல்லை என இந்தியா தொடா்ந்து மறுத்துவரும் நிலையில், டிரம்ப் தொடா்ந்து இவ்வாறு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.