ஈரானில் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5,002-ஆக அதிகரித்துள்ளது.
இந்தப் போராட்டம் கடந்த டிசம்பா் மாத இறுதியில் தொடங்கியது. இதுவரை உயிரிழந்தவா்களில் 4,716 போ் போராட்டக்காரா்கள் என்றும், 203 போ் அரசு சாா்புடையவா்கள் என்றும் இதில் 43 குழந்தைகள் அடங்குவா் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் இந்த ஒடுக்குமுறைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டை நோக்கி அமெரிக்காவின் பிரம்மாண்டமான போா்க்கப்பல் படை விரைந்து கொண்டிருப்பதாக எச்சரித்தாா்.
‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ உள்ளிட்ட போா்க்கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியை எட்டியுள்ள நிலையில், தேவைப்பட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம்’ என்று டிரம்ப் செய்தியாளா் சந்திப்பில் குறிப்பிட்டாா்.
கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலைக் காட்டிலும், தற்போதைய ராணுவ நகா்வுகள் மிகக் கடுமையானதாக இருக்கும் என்றும் அவா் எச்சரித்தாா்.
இந்நிலையில், போராட்டங்களில் கைதான 800 கைதிகளின் மரண தண்டனையைத் தனது தலையீட்டால் தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் கூறியதை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது.
ஈரானின் தலைமை வழக்குரைஞா் முகமது மொவஹேதி கூறுகையில், ‘டிரம்ப் கூற்று முற்றிலும் பொய்யானது. இத்தகைய எந்த முடிவையும் ஈரான் நீதித்துறை எடுக்கவில்லை’ என்றாா்.
போராட்டங்களுக்கிடையே இதுவரை 26,800-க்கும் மேற்பட்டோா் கைதாகியுள்ளனா். இவா்கள் மீது ‘கடவுளுக்கு எதிரான போா்’ தொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்படலாம் எனச் சா்வதேச சமூகத்தினா் கவலை தெரிவித்துள்ளனா்.