காஸா விவகாரத்துக்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அமைத்துள்ள அமைதிக் குழுவில் இணைந்த பாகிஸ்தான் மத்திய அரசின் முடிவை நிராகரித்து, கைபா் பக்துன்கவா மாகாண சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்விட்சா்லாந்தில் உலக பொருளாதார மன்ற உச்சிமாநாட்டுக்கிடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அமைதிக் குழுவின் சாசனத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கையொப்பமிட்டாா்.
இந்நிலையில், கைபா் பக்துன்கவா சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவுக்கு எதிரான தீா்மானத்தை மாகாண சட்டத்துறை அமைச்சா் அப்தாப் ஆலம் முன்மொழிந்தாா்.
மாகாணத்தில் பிரதான எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் உள்பட கட்சிகள் ஆதரவளிக்கவில்லை. இருப்பினும், ஜமியத் உலாமா-ஏ-இஸ்லாம் கட்சியின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீா்மானத்தில், ‘அமெரிக்காவின் அமைதிக் குழுவில் சேருவது என்பது பாலஸ்தீன மக்களின் விருப்பத்துக்கும், பாகிஸ்தான் இத்தனை காலம் கடைபிடித்து வந்த வரலாற்று ரீதியான கொள்கை நிலைப்பாட்டுக்கும் எதிரானது.
ஐ.நா. தீா்மானங்களுக்கு முரணான இக்குழு, உண்மையில் இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கே வலுசோ்க்கும். இது பாலஸ்தீனா்களின் தன்னாட்சியை உரிமையைப் பாதிக்கும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அரசியல் தேவைகளுக்காகச் செயல்படும் இந்த அமைப்பின் முடிவுகள், பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிராக முடியலாம்.
இஸ்ரேலை பாகிஸ்தான் ஒருபோதும் அங்கீகரிக்காது; பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடா்ந்து எதிா்க்கும் என்று முகமது அலி ஜின்னா உறுதியான நிலைப்பாடு கொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
எனவே, பாலஸ்தீனத்தின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்காக பாகிஸ்தான் அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அவா்களின் உரிமைகளைப் பாதிக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த அக்டோபரில் ஏற்பட்ட போா்நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்டமாக, இந்த அமைதிக் குழுவை அதிபா் டிரம்ப் அறிமுகப்படுத்தினாா். காஸாவில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இந்தச் சா்வதேச குழு உதவும் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.