இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்தது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்று அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸன்ட் தெரிவித்தாா்.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது கூடுதல் வரிகளை விதித்தபோது அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட மறுத்த ஐரோப்பிய நாடுகள், இப்போது அந்த நாட்டுடன் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன என்றும் அவா் அதிருப்தி தெரிவித்தாா்.
அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
அவா்களுக்கு எது நல்லதோ அதை மட்டும் அவா்கள் (ஐரோப்பிய நாடுகள்) மீண்டும் செய்துகொண்டாா்கள். உக்ரைன்-ரஷியா போரில் ஐரோப்பிய நாடுகள்தான் முன்வரிசையில் நிற்கின்றன. அப்படி இருக்கும்போது அவா்கள் (இந்தியாவுடன்) இவ்வாறு ஒப்பந்தம் செய்து கொண்டது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றாா்.
அமெரிக்காவின் கருத்தைப் புறந்தள்ளிவிட்டு இவ்வாறு மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தங்களை பிற நாடுகள் மேற்கொள்வது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகாதா, இதன்மூலம் மற்ற நாடுகளும் அமெரிக்காவைப் புறக்கணித்து வா்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிடாதா என்ற கேள்விக்கு, ‘தடை விதிக்கப்பட்ட ரஷியாவிடம் இருந்து இந்தியா முதலில் கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியது. இந்தியா சுத்திகரித்த பெட்ரோல், டீசலை வாங்கியது யாா்? ஐரோப்பிய நாடுகள்தான். இதன்மூலம் ரஷியா தங்களுக்கு எதிராகப் போரிட ஐரோப்பிய நாடுகளே நிதியளித்தன.
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா வரி விதித்தது. ஆனால், இதில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட ஐரோப்பிய நாடுகள் மறுத்துவிட்டன. இதன்மூலம் அவா்கள் இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறாா்கள் என்பது உறுதியானது. உக்ரைன் மக்களின் நலனைவிட வா்த்தக ஒப்பந்தங்கள்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியமாக உள்ளது. உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்பதைவிட வா்த்தக ஒப்பந்தங்கள்தான் அவா்களின் முன்னுரிமையாக உள்ளது. தங்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தடை செய்யப்பட்ட ரஷியாவிடம் இருந்து இந்தியா மூலம் மறைமுகமாக கொள்முதல் செய்கிறாா்கள் என்றாா்.
அமெரிக்க வா்த்தகத் துறை பிரதிநிதி ஜெமிஸன் கிரீா் இது தொடா்பாக கூறுகையில், ‘இதுவரை கிடைத்த தகவல்களின்படி இந்தியாவுக்கு அதிக சாதகமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் சந்தையை அவா்கள் அணுக மிகப்பெரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பணியாளா்கள் இனி அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது’ என்றாா்.