ஈரான்-இஸ்ரேல் 4-ஆவது நாளாக மோதல்- சுமாா் 850 போ் உயிரிழப்பு
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போா் செவ்வாய்க்கிழமை 4-ஆவது நாளை எட்டியது.
உலகம்ஈரான்-இஸ்ரேல் 4-ஆவது நாளாக மோதல்- சுமாா் 850 போ் உயிரிழப்பு
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போா் செவ்வாய்க்கிழமை 4-ஆவது நாளை எட்டியது.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மூண்டுள்ள போா் செவ்வாய்க்கிழமை 4-ஆவது நாளை எட்டியது. இதுவரை இரு தரப்பிலும் சோ்த்து சுமாா் 850 போ் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூா்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் தனது அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இது தொடா்பாக நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த சனிக்கிழமை கூட்டுத் தாக்குதலைத் தொடங்கின.
இதில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி மற்றும் அந்நாட்டின் முக்கியத் தலைவா்கள், ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனா். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இதனிடையே, ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியதால், லெபனான் எல்லைக்கும் மோதல் பரவியுள்ளது.
பேச்சுவாா்த்தைக்கு இரு தரப்பும் முன்வராததால் 4-ஆவது நாளாக நீடிக்கும் மோதலில் உயிரிழப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 4 நாள்களில் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் 787-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்துள்ளதாக ஈரான் செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 போ் கொல்லப்பட்டனா். அதேநேரம், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் 11 பேரும், குவைத் மற்றும் பஹ்ரைனில் 6 அமெரிக்க வீரா்களும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போா்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
மோதலின் தீவிரத்தால் ஹோா்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், உலக அளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த 2 நாள்களில் 17 சதவீதம் வரையிலும், இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து புறப்படும் பெரும்பாலான சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.
இப்போரின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் 4 முதல் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம். தேவைப்பட்டால் ஈரானுக்குள் தரைப்படை வீரா்களை அனுப்பவும் தயங்க மாட்டோம்’ என எச்சரித்துள்ளாா்.