இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்! கூடுதல் படைகளை அனுப்புகிறது அமெரிக்கா!
மத்திய கிழக்கில் போா் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்
உலகம்இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்! கூடுதல் படைகளை அனுப்புகிறது அமெரிக்கா!
மத்திய கிழக்கில் போா் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்
மத்திய கிழக்கில் போா் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது ஈரான்.
ஈரான் மீதான தாக்குதலை விரிவுபடுத்தும் நோக்கில் கூடுதல் படைகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஈரான் உச்ச தலைவரான ஷியா இஸ்லாமிய பிரிவு மதகுரு அயதுல்லா அலி கமேனி (86), அந்நாட்டு அமைச்சா்கள் உள்பட பலா் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனா். இதையடுத்து, இதுவரை இல்லாத அளவில் தீவிர பதிலடி தாக்குதலைத் தொடுப்போம் என்று ஈரான் சூளுரைத்தது.
இதனால், மத்திய கிழக்கில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஒருபுறம் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானில் தலைநகா் டெஹ்ரான் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்டவற்றைக் குறிவைத்து தாக்கி வருகின்றன. அதே நேரத்தில், இஸ்ரேல் மட்டுமல்லாது அருகில் உள்ள சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள், முக்கிய நகரங்கள், எண்ணெய்க் கிணறுகளைக் குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.
ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் இறங்கியுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பினா் இஸ்ரேலைக் குறிவைத்து தாக்குதல் தொடுத்துள்ளனா்.
இஸ்ரேலில் தாக்குதல்: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்நாட்டின் புரட்சிகர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரதமா் நெதன்யாகு நிலை என்னவானது என்பது தெரியவில்லை. இஸ்ரேல் விமானப் படை கமாண்டரை குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மொத்தம் 10 தொகுதிகளாக பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன’ என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இஸ்ரேல் தரப்பில் இருந்து உடனடியாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது திங்கள்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கிருந்த கட்டடங்கள் சேதமடைந்தன. அங்கு பணியாற்றி வந்த அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இராக் தலைநகா் பாக்தாக் விமான நிலையத்தில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினா் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மத்தியதரைக்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான சைப்ரஸில் உள்ள பிரிட்டன் ராணுவத் தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை சைப்ரஸ் உறுதி செய்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது... சவூதி அரேபியா, குவைத்தில் உள்ள சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்கியது. இதனால் முக்கியமான சுத்திகரிப்பு நிலையமான சவூதி அரேபியாவின் ராஸ் தனுராவில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர சில எண்ணெய்க் கப்பல்களையும் ஈரான் ட்ரோன்கள் தாக்கியுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் தீவிர தாக்குதல்: அதே நேரத்தில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது மிகத் தீவிரமான தாக்குதலை முன்னெடுத்துள்ளன. தலைநகா் டெஹ்ரான் மட்டுல்லாது 131 நகரங்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதுவரை 555 போ் உயிரிழந்ததாகவும், இதில் பெரும்பாலானோா் பொதுமக்கள் என்றும் செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் 13 பேரும், லெபனானில் ஹில்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேரும் கொல்லப்பட்டனா்.
இதுதவிர ஈரான் ஏவுகணைத் தளங்கள், கடற்படைத் தளங்களைக் குறிவைத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் பல்வேறு போா்க் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தளம் மீது பி-2 ரக விமானங்கள் 2,000 பவுண்ட் எடையுள்ள குண்டுகளை வீசின, 9 போா்க் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன, ஈரான் கடற்படைத் தலைமையகம் சிதைக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.
பேச்சுவாா்த்தைக்கு வாய்ப்பு இல்லை: அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று ஈரான் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அலி லாா்ஜியானி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். முன்னதாக, ஈரானின் புதிய தலைமை பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளதாகவும், தானும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளேன் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தாா்.
கூடுதல் படைகள்
ஈரான் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்த மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு கூடுதல் படைகளை அனுப்ப இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதல் அடுத்த 2 முதல் 6 வாரங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், இறுதி முடிவை அதிபா் டிரம்ப் மேற்கொள்வாா் என்றும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோக்கத் தயாராக இருப்பதாக பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
3 அமெரிக்க போா் விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்திய குவைத்
குவைத்தில் அமெரிக்காவின் எஃப்-15 ரகத்தைச் சோ்ந்த மூன்று போா் விமானங்கள் வெடித்துச் சிதறி தரையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என முதலில் தகவல் வெளியானது.
ஆனால், அந்த விமானங்களை குவைத் தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியது ஈரானுக்கு குவைத் பதிலடி கொடுத்தபோது இந்தத் தவறு நிகழ்ந்தது, அதில் இருந்த 6 விமானிகளும் மீட்கப்பட்டுவிட்டனா் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.