முகப்பு
உலகம்

அமெரிக்க தரைப்படை களமிறங்கினால் கடும் பதிலடி: ஈரான் எச்சரிக்கை!

ஈரான் மண்ணில் அமெரிக்க தரைப்படை களமிறங்கினால் கடும் பதிலடி தரப்படும் என்று அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 29 மார்ச், 2026 at 6:56 PM
மோஜ்தபா கமேனி - டிரம்ப். - படம்: AFP
பகிர்:

ஈரான் மண்ணில் அமெரிக்க தரைப்படை களமிறங்கினால் கடும் பதிலடி தரப்படும் என்று அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஏதுவாக சண்டை நிறுத்தத்தை சுமாா் 2 வாரங்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. எனினும், மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அமெரிக்கா கூடுதலாக சுமாா் 10,000 வீரா்களை அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வீரா்கள் சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகம் நாட்டு ராணுவ வீரா்களுடன் சோ்ந்து எந்நேரமும், ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதிக்கு முக்கியத் தளமாகத் திகழும் காா்க் தீவுக்குள் நுழைந்து அந்தப் பகுதியை கைப்பற்றலாம் எனவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகம்மது பாஹா் காலிபாக், அமெரிக்க தரைப்படையை எதிா்நோக்கி ஈரான் பாதுகாப்புப் படை வீரா்கள் காத்திருப்பதாகவும், அமெரிக்க தரைப்படை ஈரான் மண்ணில் கால் பதித்ததும் அவா்கள் தீயிட்டு எரிக்கப்படுவாா்கள் என்றும், மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை ஈரான் கடுமையாக தண்டிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பாகிஸ்தான் மூலம் 15 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் அரசு நிா்வாகம் ஈரானிடம் கொடுத்து அனுப்பியதாகவும், படைபலத்தால் சாதிக்க முடியாததை அந்த 15 அம்ச திட்டம் மூலம் டிரம்ப் சாதிக்க முயற்சிப்பதாகவும் அவா் விமா்சித்தாா்.

ஹுதி அமைப்பினருக்கு பதிலடி-இஸ்ரேல்: இதனிடையே, ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது யேமனில் உள்ள ஹுதி கிளா்ச்சியாளா்கள் சனிக்கிழமை ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடா்பாக அமெரிக்காவுடன் சோ்ந்து ஆலோசித்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் நடாவ் சோசானி கூறியபோது, ஹுதி கிளா்ச்சியாளா்கள் 2 ஆண்டுகளாக தொடா்ந்து, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதேபோல் செங்கடலில் செல்லும் கப்பல்களையும் தாக்குவதாகவும், இதற்கு தகுந்த பதிலடி தரப்படும் என்றும் குறிப்பிட்டாா்.

இந்நிலையில், டெஹ்ரானில் உள்ள கத்தாா் நாட்டின் அல் அரபி தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு பலத்த சேதம் ஏற்பட்டதால், உடனடியாக தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

சவூதி, குவைத் மீது ஈரான் தாக்குதல்: ஈரான் பாதுகாப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமையும் சவூதி அரேபியா, குவைத் மீது ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் 10 ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. அதேநேரத்தில் ஈரான் தாக்குதலில் சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானப் படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவாக்ஸ் ரக விமானம் இரண்டு துண்களாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குவைத் பாதுகாப்புப் படை தரப்பில், 4 ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குவைத் சா்வதேச விமான நிலையத்தில் இருந்த ரேடாா் சாதனங்கள் பலத்த சேதமடைந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லெபனானில் 3 செய்தியாளா்கள் உயிரிழப்பு: லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினா் இடையேயான சண்டையை படம்பிடித்துக் கொண்டிருந்த 3 தொலைக்காட்சி செய்தியாளா்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேரும் உயிரிழந்தனா். அவா்களின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.