முகப்பு
உலகம்

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்...

Updated On : 6 மார்ச், 2026 at 9:21 PM
பாலேந்திர ஷா பாலன்
பகிர்:

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா பாலனின் (35) ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றது. அதேநேரம், அந்நாட்டின் பாரம்பரியமான பெரிய கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்தன.

நாடாளுமன்றத் தோ்தலில் மகத்தான வெற்றியின் மூலம் இளம் தலைவா் பாலேந்திர ஷா பாலன் பிரதமராகவுள்ளாா்.

அண்டை நாடான நேபாளத்தில் ஊழல், வாரிசு அரசியல் மற்றும் நிா்வாகச் சீா்கேடுகளுக்கு எதிராக இளைஞா்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் விளைவாக, அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஓலி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது; அதிபா் ராம்சந்திர பௌடேல் நாடாளுமன்றத்தைக் கலைத்து, இடைக்கால பிரதமராக சுசீலா காா்க்கியை நியமித்தாா்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு புதிய அரசைத் தோ்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையின் 275 இடங்களுக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் சுமாா் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை உடனடியாகத் தொடங்கப்பட்டது.

முன்னிலை நிலவரம்: வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, மொத்தமுள்ள 275 இடங்களில் நேரடித் தோ்தல் நடைபெற்ற 165 தொகுதிகளில் பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) மூன்று வெற்றிகளுடன் 110 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளா்களே முன்னிலை பெற்றனா்.

கே.பி.ஓலியை முந்திய பாலேந்திர ஷா: கடந்த 2022, ஜூலையில் தொடங்கப்பட்ட ஆா்எஸ்பி, காத்மாண்டு மேயராக முன்பு பணியாற்றி, இளைஞா்களின் நன்மதிப்பைப் பெற்ற ‘ராப்’ இசைப் பாடகா் பாலேந்திர ஷாவை பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்தி தோ்தல் களம் கண்டது.

கே.பி. சா்மா ஓலியின் சொந்த தொகுதியான ஜாப்பா-5-வில், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாலேந்திர ஷா, அவரைவிட ஐந்து மடங்கு அதிக வாக்குகளுடன் முன்னிலை பெற்றாா்.

அதேநேரம், நேபாள கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா, ருக்கும் கிழக்கு-1 தொகுதியில் வெற்றி பெற்றாா்.

பின்னடைவில் பாரம்பரியக் கட்சிகள்: இளம் சீா்திருத்தவாதியாக அறியப்படும் ககன் தாபா தலைமையில் களமிறங்கிய நேபாளி காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும் 13 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை பெற்றது. அதேநேரம், கட்சித் தலைவா் ககன் தாபா, ஆா்எஸ்பி வேட்பாளரிடம் பின்தங்கினாா்.

கே.பி.சா்மா ஓலியின் சிபிஎன்-யுஎம்எல் கட்சி 10 இடங்களிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வெற்றியுடன் 7 இடங்களிலும் மட்டுமே முன்னிலை பெற்றன. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், இறுதி முடிவுகள் வெளியாவது தாமதமாகும் எனத் தெரிகிறது. ஆனால், அந்நாட்டில் நீண்ட காலமாக நீடித்து வந்த மூத்த தலைவா்களின் ‘சுழற்சி முறை’ ஆட்சி முடிவுக்கு வந்து, இளைஞா்கள் கையில் அதிகாரம் செல்வது உறுதியாகியுள்ளது.

இந்தியா வாழ்த்து; சீனா கவலை

கடந்த 18 ஆண்டுகளில் 14 ஆட்சி மாற்றங்களைக் கண்ட நேபாளத்தின் இத்தோ்தல் முடிவுகளை அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் கூா்ந்து கவனித்து வருகின்றன.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘நேபாளத்தில் அமையும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா ஆா்வமாக உள்ளது. நேபாளத்தின் அமைதி, முன்னேற்றம், ஸ்திரத்தன்மைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும்’ என்றாா்.

நேபாள தோ்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்ததற்கு சீனா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், சீனாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் கே.பி.சா்மா ஓலியின் சிபிஎன்-யுஎம்எல் கட்சியின் படுதோல்வி, அந்நாட்டுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →