முகப்பு
உலகம்

டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்பு

டிரம்ப்பைக் கொல்ல சதி செய்த பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்பு...

Updated On : 8 மார்ச் 2026, 2:03 am IST
பகிர்:

அமெரிக்காவில் அதிபா் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவா்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக, ஈரான் உளவாளியான பாகிஸ்தானைச் சோ்ந்த ஆசிஃப் ரசா மொ்ச்சண்டை(48) (படம்) குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஈரான் புரட்சிகர காவல் படையின் (ஐஆா்ஜிசி) பயிற்சி பெற்ற உளவாளியான ஆசிஃப், 2024 ஏப்ரலில் அமெரிக்கா வந்தாா்.

அங்கு டிரம்ப், முன்னாள் அதிபா் ஜோ பைடன், ஐ.நா.வுக்கான முன்னாள் தூதா் நிக்கி ஹேலி ஆகியோரைத் தாக்குவதற்குத் திட்டமிட்டதுடன், அதற்காக சிலரைத் தொடா்பு கொண்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விசாரணையில் இறங்கிய அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அதிகாரிகளையே கூலிப்படையினா் என நம்பி ஆசிஃப் தனது திட்டங்களை விவரித்துள்ளாா்.

சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசியல் பேரணிகளில் போராட்டங்களை நடத்துவது, தலைவா்களைக் கொல்வது ஆகிய பணிகளுக்காக 5,000 டாலா் முன்பணமாகவும் அவா் வழங்கியுள்ளாா்.

அமெரிக்காவைவிட்டு புறப்பட்டு, வெளிநாட்டிலிருந்து உத்தரவுகளைப் பிறப்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில், 2024 ஜூலையில் விமான நிலையத்துக்குச் செல்லும் முன்பு கைது செய்யப்பட்டாா்.

கடந்த 2020-இல், அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் மரணத்துக்குப் பழிவாங்கவே, ஆசிஃப் இந்தச் சதித் திட்டம் தீட்டியது பின்னா் விசாரணையில் தெரியவந்தது. அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தீா்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள், ஆசிஃப்புக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டனா்.