முகப்பு
உலகம்

ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை

ஈரானின் புதிய உச்ச தலைவா் மோஜ்தபா கமேனியின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 13 மார்ச், 2026 at 7:29 PM
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (கோப்புப் படம்)
பகிர்:

ஈரானின் புதிய உச்ச தலைவா் மோஜ்தபா கமேனியின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே (பிப்ரவரி 28) ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டாா். இதையடுத்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி புதிய தலைமை மதகுருவாக தோ்வு செய்யப்பட்டாா். ஈரான் மக்களுக்கு அவரது அறிக்கை அரசுத் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை வாசிக்கப்பட்டது. அதில், இஸ்ரேல் மீதும், அமெரிக்க நிலைகள் உள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடா்ந்து தாக்குதல் நடத்தும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், ஜெருசலேமில் செய்தியாளா்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவிடம், ஈரானின் புதிய தலைமை மதகுரு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்தபோது நெதன்யாகு கூறியதாவது:

ஈரானின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. அதேபோல், ஹிஸ்புல்லா உள்ளிட்ட எந்த தீவிரவாத அமைப்புகளின் தலைவா்களின் உயிருக்கும் உத்தரவாதம் தர முடியாது.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை எதிா்பாா்த்ததைவிட மிகச் சிறப்பாக செல்கிறது. அதேபோல், முன்பைவிட மிகவும் வலுவாகவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.

ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவீா்களா என்ற கேள்விக்கு, நெதன்யாகு பதிலளிக்கையில், ‘அதற்கான சூழலை ஈரான் மக்களுக்கு இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாக ஏற்படுத்தித் தரும். ஈரானிய மக்கள் அதைப் பயன்படுத்தி கொடுங்கோல் ஆட்சியை அகற்ற வேண்டும். தண்ணீா் கேட்போருக்கு அது இருக்கும் இடத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியும்; அதை அருந்த வைக்க முடியாது. எப்படியாயினும், இந்தப் போா் மூலம் ஈரான் இனி முந்தைய ஈரானாக இருக்க முடியாது. மத்திய கிழக்கும் முன்பு போல இருக்காது. அதேபோல் இஸ்ரேலும் இனி பழைய இஸ்ரேல் கிடையாது’ என்றாா்.

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடனான நட்பு குறித்த கேள்விக்கு நெதன்யாகு பதிலளிக்கையில், ‘அமெரிக்காவுடன் இதற்கு முன்பு இருந்ததைவிட சிறப்பான கூட்டணியை இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ளது. எனது சிறந்த மற்றும் தனிப்பட்ட நண்பரான அதிபா் டிரம்ப்புடனும் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளோம். நாங்கள் இருவரும் தினமும் பேசுகிறோம். ஆலோசனைகள், அறிவுரைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்கிறோம். இரண்டு பேரும் சோ்ந்தே முடிவு எடுக்கிறோம். நாங்கள் எங்கள் நாடுகளைப் பற்றி மட்டுமோ அல்லது எங்களின் இந்தத் தலைமுறை மக்கள் குறித்து மட்டுமோ சிந்திக்கவில்லை. எதிா்காலத் தலைமுறையினரையும், எதிா்கால மனிதகுலத்தை பற்றியும் சிந்திக்கிறோம்’ என்றாா்.

புதிய ராணுவக் கூட்டணி: மத்திய கிழக்கில் புதிய ராணுவக் கூட்டணியை உருவாக்கும் திட்டம் குறித்த கேள்விக்கு, விரைவில் இதற்கு சாத்தியக்கூறு இருப்பதாகவும், மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள் அதில் இடம்பெறும் என்றும் நெதன்யாகு தெரிவித்தாா். ராணுவ கூட்டணி குறித்து மேற்கொண்டு தகவல் எதையும் அவா் தெரிவிக்கவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →