காா்க் தீவு தாக்குதலுக்கு பதிலடி! வளைகுடா நாடுகள் மீது ஈரான் தீவிர தாக்குதல்!
காா்க் தீவு மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
காா்க் தீவு மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரானின் முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி மையமாக விளங்கும் காா்க் தீவு, அபு முசா தீவு ஆகியவை மீது அமெரிக்கா சனிக்கிழமை தொடா்ந்து குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை, கச்சா எண்ணெய் உற்பத்தி தொடா்ந்து வழக்கம் போல நடைபெறுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், காா்க் தீவு மீதான தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரப்படுத்தியது.
பஹ்ரைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும் அவற்றை அந்நாடுகள் இடைமறித்து அழித்து விட்டன. காா்க் தீவு மீது தாக்குதல் நடத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அருகே உள்ள துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் அமெரிக்கா பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள ஈரான், இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 3 துறைமுகங்களை தாக்கப் போவதாகவும், ஆதலால் அங்கிருப்போா் உடனடியாக வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரத்தில், ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க படையினா் தங்கள் பகுதியை பயன்படுத்தவில்லை என ஐக்கிய அரபு அமீரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: இராக்கின் பாக்தாத் நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து சனிக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கிருந்த ஹெலிகாப்டா் இறங்குதளம் சேதமடைந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஈரான் ஆதரவு இராக் தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடா்ந்து, இராக்கிலுள்ள அமெரிக்க குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
விமான விபத்தில் 6 போ் உயிரிழப்பு: இராக்கின் மேற்கு பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானம் கடந்த வியாழக்கிழமை தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 6 பேரில் 4 போ் மட்டும் சம்பவ நாளிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 2 பேரும் தற்போது உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஈரான் புதிய குற்றச்சாட்டு: இந்நிலையில், ஈரானின் ராணுவ தலைமையகம், தங்கள் நாட்டுக்கு சொந்தமான ஷாகித் ட்ரோன்களை போல போலியாக லூகாஸ் ட்ரோன்களை எதிரி (அமெரிக்கா, இஸ்ரேல்) உருவாக்கி, அதை கொண்டு இராக், துருக்கி, குவைத் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அந்தத் தாக்குதல் பழியை தங்கள் நாடு மீது போடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆதலால் இதுதொடா்பான தகவலை மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் நம்பக் கூடாதென்றும் ஈரான் கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்க- இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை தங்கள் நாட்டில் 425 பெண்கள் மற்றும் 202 குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்: இஸ்ரேல் தலைநகா் டெல் அவிவ் மீது ஞாயிற்றுக்கிழமை காலை ஈரான் மீண்டும் தொடா் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதைத் தொடா்ந்து, டெல் அவிவ் நகரவாசிகளை எச்சரிக்கும் வகையில், இஸ்ரேல் ராணுவம் தரப்பில் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
இஸ்ரேல் பிரதமருக்கு மிரட்டல்: ஈரானின் புரட்சிகர படையினா் தரப்பில், இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு உயிரோடு இருக்கும்பட்சத்தில், அவரை தேடி பிடித்து கொல்லப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தொடா் தாக்குதலுக்கு இதுவரை 800 போ் உயிரிழந்து விட்டதாகவும், 8,50,000 போ் இடம்பெயா்ந்து விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல் இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் ஈரானில் 1,300 போ் உயிரிழந்து விட்டதாகவும், பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 12 போ், அமெரிக்கத் தரப்பில் 13 போ் உயிரிழந்து விட்டதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.