முகப்பு
உலகம்

ஈரானால் அச்சுறுத்தல் இல்லை! போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமா

ஈரான் மீதான போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ஜோசப் கென்ட் ராஜிநாமா

Updated On : 17 மார்ச் 2026, 11:02 pm IST
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ஜோசப் கென்ட் - @NCTCKent
பகிர்:

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் ராணுவ தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜோசப் கென்ட் தனது ராஜினாமா கடிதத்தில், இஸ்ரேலின் அழுத்தமே காரணம் என்றும் ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலாக இல்லை என்றும் இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகவே போரை அமெரிக்கா தொடங்கியதாகவும் தன் மனசாட்சிக்கு விரோதமாக தாக்குதலை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஈரான மீதான அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ ராணுவ நடவடிக்கைகளில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள ஜோசப் கென்ட் இன்று(மார்ச் 17) இரவில் திடீரென ராஜினாமா முடிவை அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ‘கடந்த 2016, 2020, 2024 உள்பட நீங்கள்(டொனால்ட் டிரம்ப்) முதல்முறை அதிபராகவிருந்த காலகட்டங்களில் நிலைநாட்டிய வெளியுறவு கொள்கைகளுக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். மத்திய கிழக்கில் நடத்தப்படும் போர்கள் அனைத்தும் ஒரு ‘பொறி’; அது, அமெரிக்க தேசப்பற்றாளர்களின் உயிர்களை கொள்ளையடித்ததுடன், நமது நாட்டின் சொத்து மற்றும் வளமையை சீரழித்தது என்பதை நீங்கள் கடந்தாண்டு (2025) ஜூன் வரை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தீர்கள்’.

‘உங்களது முதல்முறை நிர்வாகத்தில், ராணுவ அதிகாரத்தை தேர்ந்தெடுத்து அமல்படுத்துவது எப்படி என்பதையும் முடிவில்லா போர்களில் எப்படி நம்மை(அமெரிக்காவை) ஈடுபடுத்தக்கூடாது என்பதையும் எந்தவொரு நவீன அதிபரைக்காட்டிலும் நீங்கள் நன்றாகவே புரிந்து வைத்திருந்தீர்கள். அதற்கான சிறந்த உதாரணம், ஃகாசம் சோலாமணி கொலையும் ஐஎஸ்ஐஎஸ் வீழ்ச்சியுமே.

இந்நிலையில், இதே நிர்வாகத்தில் முன்னதாக, இஸ்ரேலிய உயரதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஊடகத்தில் சக்திவாய்ந்த ஆதிக்க உறுப்பினர்கள் ஆகியோர் தவறானதொரு பிரசாரத்தை முன்னெடுத்தனர். அந்தப் பிரசாரம், ‘அமெரிக்காவே முதலில்!’ என்ற தங்களின் கொள்கையை கேள்விக்குறியாக்கியதுடன், ஈரானுடன் போர் தொடுக்க தேவையான ஆதரவு விதையையும் விதைத்தது.

மேற்கண்ட சக்திகள், ‘அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலாக ஈரான் விளங்குகிறது. ஆகவே, நீங்கள் இப்போதே அவர்களைத் தாக்க வேண்டும். அதன் முடிவில் வெற்றிப்பாதை தெளிவாகத் தெரிகிறது’ என்பதனை நீங்கள் நம்பவும், உங்களை திசைதிருப்பவும் செய்தார்கள்.

இது ஒரு பொய்.

இதே யுக்தியைத்தான், பேரழிவை ஏற்படுத்திய இராக் போரிலும் நம்மை ஈடுபடுத்த இஸ்ரேல் பயன்படுத்தியிருந்தனர். அதன் விளைவாக, நமது நாட்டுக்கு ஆயிரக்கணக்கான நமது ஆகச்சிறந்த ஆண்கள் பெண்களை விலையாகக் கொடுத்தோம். இந்தத் தவறை நாம் மீண்டும் செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜோசப் கென்ட் ராஜிநாமா கடிதம் - Joe Kent
summary

Joseph Kent The head of the National Counterterrorism Center ⁠resigned on Tuesday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.