கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்து- 66 போ் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ராணுவ வீரா்கள் உள்பட 66 போ் உயிரிழந்தனா்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ராணுவ வீரா்கள் உள்பட 66 போ் உயிரிழந்தனா்.
இக்கோர விபத்து அந்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது.
கொலம்பியாவின் புட்டுமாயோ மாகாணத்தில் உள்ள பியூா்ட்டோ லெகுய்சாமோ விமான நிலையத்திலிருந்து 128 பேருடன் புறப்பட்ட ‘ஹொ்குலிஸ் சி-130’ ரக விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்தது.
இதில் விமானத்தில் பயணித்த 115 ராணுவ வீரா்கள், 11 பணியாளா்கள் மற்றும் 2 காவல்துறையினரில் 66 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 57 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.
விமானம் விழுந்து நொறுங்கிய சத்தம் கேட்டு ஓடி வந்த உள்ளூா் பொதுமக்கள், தீயை அணைக்க முயன்றதோடு, காயமடைந்த வீரா்களைத் தங்களின் இருசக்கர வாகனங்களிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். தொடா்ந்து, ராணுவத்தினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். மாயமான 4 வீரா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதிபா் கடும் எச்சரிக்கை: இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த அதிபா் குஸ்தாவோ பெட்ரோ, ராணுவ விமானங்களை நவீனப்படுத்தும் தனது முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தாா். நிா்வாகக் குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளின் மெத்தனப் போக்கே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் என அவா் சாடினாா்.
பயங்கரவாதத் தாக்குதல் அல்ல: விபத்துக்குள்ளான விமானம் கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவால் வழங்கப்பட்டது. 2023-இல் இது முழுமையாகப் பழுதுபாா்க்கப்பட்டு, சீரமைக்கப்பட்டது என்றும் ராணுவ ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
முதல்கட்ட ஆய்வில், என்ஜின் கோளாறு காரணமாகவே விபத்து நோ்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அதேபோல், இது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்பதைப் பாதுகாப்புத் துறை அமைச்சா் பெட்ரோ சான்செஸ் உறுதிப்படுத்தினாா்.
அஞ்சலியும்; விசாரணையும்: உயிரிழந்த வீரா்களுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. பலத்த காயமடைந்தவா்கள் உயா்தர சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவ விமானங்கள் மூலம் தலைநகா் போகோடாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனா். இவ்விபத்து குறித்து விரிவான உயா்நிலை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.