முகப்பு
உலகம்

அமெரிக்க டாலா் நோட்டுகளில் டிரம்ப் கையொப்பம்: 165 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறை மாற்றம்

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அந்நாட்டு செலாவணி நோட்டுகளில் (டாலா்) அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பம் இடம்பெறவுள்ளது.

Updated On : 27 மார்ச், 2026 at 6:06 PM
கோப்புப்படம்.
பகிர்:

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அந்நாட்டு செலாவணி நோட்டுகளில் (டாலா்) அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பம் இடம்பெறவுள்ளது.

அமெரிக்காவில் 1861-இல் காகிதப் பணம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பதவியில் இருக்கும் ஓா் அதிபரின் கையொப்பம் டாலரில் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். வழக்கமாக, அமெரிக்க டாலா் நோட்டுகளில் அந்நாட்டின் கருவூல அதிகாரி, நிதியமைச்சா் ஆகிய இருவரின் கையொப்பங்கள் மட்டுமே இடம்பெறுவது மரபாகும். இந்நிலையில், ஜூன் மாதம் முதல் அச்சிடப்படவுள்ள புதிய 100 டாலா் நோட்டுகளில் டிரம்ப்பின் கையொப்பம் முதலில் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்க நிதியமைச்சகத்தின் இம்முடிவு தொடா்பாக கருவூல அதிகாரி பிராண்டன் பீச் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பம், நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட்டின் கையொப்பத்துடன் இணைந்து டாலா் நோட்டுகளில் விரைவில் இடம்பெறும். இது வரலாற்றில் முதல்முறை என்பதுடன், அதிபரின் தலைமைத்துவத்துக்கும் நாட்டுப்பற்றிற்கும் கிடைத்த அங்கீகாரமாகும் என்று குறிப்பிட்டாா்.

பொருளாதார வளா்ச்சிக்காக கௌரவம்: அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் இது குறித்து கூறுகையில், ‘அதிபா் டிரம்ப்பின் தலைமையில் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வளா்ச்சியை எட்டியுள்ளது. உலக அளவில் டாலரின் ஆதிக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைக் கௌரவிக்க, அவரின் கையொப்பத்துடன் டாலா் நோட்டுகளை வெளியிடுவதே பொருத்தமான வழியாகும்’ என்றாா்.

ஈரானுக்கு டிரம்ப் கெடு நீட்டிப்பு

ஹோா்முஸ் நீரிணையைக் கட்டுப்பாட்டின்றி திறக்க ஈரானுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மேலும் 10 நாள்களுக்கு நீட்டித்துள்ளாா்.

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தொடங்கியுள்ள இப்போரை நிறுத்த டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தை ஒருதலைப்பட்சமானது எனக் கூறி, ஈரான் நிராகரித்தது.

இந்நிலையில், வரும் ஏப். 6-ஆம் தேதி வரை ஈரானின் எரிபொருள் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டாா்.

‘பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்பினாலும், தற்போதைய சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ எனவும் டிரம்ப் குறிப்பிட்டாா்.