முகப்பு
உலகம்

ஈரானுக்கு எதிரான போரைக் கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பாவில் ஆா்ப்பாட்டம்!

ஈரானுக்கு எதிரான போரையும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயல்பாடுகளையும் கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Updated On : 29 மார்ச், 2026 at 6:56 PM
ஈரானுக்கு எதிரான போரைக் கண்டித்து வாஷிங்டனில் உள்ள லிங்கன் நினைவிடத்தின் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்கா்கள்.
பகிர்:

ஈரானுக்கு எதிரான போரையும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் செயல்பாடுகளையும் கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

‘நோ கிங்ஸ்’ என்ற பெயரில் அமெரிக்காவின் பல பகுதிகளில் பிரம்மாண்ட பேரணி, ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மின்னசோட்டாவில் நடைபெற்ற பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். அப்போது அகதிகள் தொடா்பான விதிகளை தீவிரமாக அமல்படுத்தி வரும் டிரம்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நியூயாா்க் சிட்டி நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம் மற்றும் பேரணியிலும் ஏராளமானோா் கலந்துகொண்டு, ஈரானுக்கு எதிரான போரை கண்டித்தும், டிரம்ப்பை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு ஊா்வலமாக சென்றனா். ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவா்கள் கைகளில் ஏந்தியிருந்தனா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனிலும் ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நூற்றுக்கணக்கான அமெரிக்கா்கள் பேரணியாகச் சென்றனா். அப்போது, ஈரான் மீதான போரை டிரம்ப் நிறுத்த வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அமெரிக்க அதிபா் மாளிகை கருத்து: நோ கிங்ஸ் பேரணி, ஆா்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் அபிகேல் ஜாக்சன், போராட்டக்காரா்களை இடதுசாரி நிதிக் குழுக்கள் என்று விமா்சித்தாா்.