போர்ப் பதற்றம்! ஈரானுக்கு எதிராக அமெரிக்கா - இஸ்ரேலுடன் மத்திய கிழக்கு நாடுகள் இணையுமா?
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் மத்திய கிழக்கு நாடுகள் இணையுமா எனும் கேள்வி எழுந்துள்ளது...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரில் மத்திய கிழக்கு நாடுகளின் படைகள் இணையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த சனிக்கிழமை (பிப். 28) முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் தளங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளின் மீது ஈரான் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் தலைமையகம், மத்திய கிழக்கின் மிகப் பெரிய அமெரிக்க தளம் அமைந்துள்ள கத்தாரின் அல்- உதெயித் விமானப் படைத் தளம், குவைத்தில் உள்ள அலி அல்-சலெம் படைத் தளம், சௌதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட இடங்களின் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இத்துடன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார், சௌதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள விமான நிலையங்கள், எண்ணெய் கட்டமைப்புகள், வானுயர அடுக்குமாடிக் கட்டடங்கள் ஆகியவற்றின் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், ஈரானின் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ளதாக, அமீரகம், கத்தார், சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. மேலும், சுமார் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததுடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள் அனைத்தும், ஈரானின் தற்காப்பிற்கான உரிமை எனவும், மத்திய கிழக்கில் உள்ள நாடுகளைத் தாக்குவது எங்கள் நோக்கமில்லை; ஆனால், அங்குள்ள அமெரிக்க சொத்துக்கள் அனைத்தும் குறிவைத்து தாக்கப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், போரில் ஈடுபடாத நாடுகளைக் குறிவைப்பது பொறுப்பற்றது எனவும், மக்களுக்கு எதிரான செயல் எனவும் கூறி ஈரானுக்கு எதிராக, பஹ்ரைன், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தத் தொடர் தாக்குதல்களால், நீண்டகாலமாக நடுநிலை வகித்து வரும் மத்திய கிழக்கு நாடுகள் ஈரானுக்கு எதிரான பதில் தாக்குதல்களை நடத்தினால் அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து போரில் களமிறங்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்தச் சூழலில், மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) அமைப்பு வெளியுறவு அமைச்சர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக நேரடி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த முடிவுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், தங்களது பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைமையை மேம்படுத்த ஈரானின் தாக்குதல்களுக்குத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் விருப்பம் அந்நாடுகளிடையே உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் உரிமை தங்களுக்கு உண்டு எனவும், மத்திய கிழக்கு நாடுகள் ஈரானுடன் நேரடி மோதலில் ஈடுபட வேண்டும் என சில படைகள் விரும்புவதாகவும் ஜிசிசி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்களது வான்வழிப் பாதைகள் வழங்கப்படாது என மத்திய கிழக்கு நாடுகள் அறிவித்திருந்தன. ஆனால், அந்நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்துவது மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
Middle Eastern countries may join the US and Israel's war against Iran.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.