ஈரான் மீது தொடர்ந்து ஏழாவது இரவாக அமெரிக்கா தாக்குதல்; பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதம்
ஹார்முஸ் நீரிணை மீதான ஆதிக்கத்திற்கான மோதல் தீவிரமடைந்த நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்கா, ஈரா தாக்குதல் குறித்து...
துபை: ஹார்முஸ் நீரிணை மீதான ஆதிக்கத்திற்கான மோதல் தீவிரமடைந்த நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்காவும் ஈரானும் வெள்ளிக்கிழமை இரவும் தங்களது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின; பொதுமக்களின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து இரு தரப்பும் மாறி மாறித் தாக்கிக்கொண்டன. இதில் பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான ஹோா்முஸ் நீரிணைப் பாதையில் ஈரான் விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு தெஹ்ரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைகளைச் செயல்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது தாக்குதல்களை விரிவுபடுத்தியது; இதில் கூடுதல் பாலங்கள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டன, அத்துடன் ஈரானின் முக்கிய துறைமுகம் ஒன்றில் இருந்த கோபுரம் ஒன்றும் இடிந்து விழுந்தது. இந்தியாவின் ஆதரவுடன் ஈரான் இயக்கி வந்த சாபஹாா் துறைமுகம், அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்குத் தொடர்ந்து இலக்காகி வருகிறது. துறைமுகத்திற்கு வரும் வணிகப் போக்குவரத்தை இந்த கோபுரம் கண்காணிப்பதாக ஈரான் கூறியது.
ஆனால், இது ஈரானின் துணை ராணுவப் படையான 'புரட்சிக் காவலர் படை', அந்த நீரிணையில் உள்ள வணிகக் கப்பல்களைக் "கண்காணிக்கவும் குறிவைக்கவும்" பயன்படுத்தும் கடல்சார் கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதி என்று அமெரிக்காவின் மத்தியக் கட்டளைப் பிரிவு தெரிவித்தது.
Advertisement
Advertisement
இதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது; இதில் போரில் மத்தியஸ்தராகச் செயல்படும் கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் அடங்கும். குவைத்தில் அந்நாட்டின் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று சேதமடைந்தது.
நீரிணை மீதான கட்டுப்பாட்டை மையமாகக் கொண்ட இந்த மோதலில் இந்த பகுதி பல நாள்களாகத் தொடர் தாக்குதல்களைச் சந்தித்து வருகிறது; இடைக்காலப் போர்நிறுத்தம் முறிந்துபோன நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்த தெளிவான அறிகுறி எதுவும் இல்லை.
ஈரானின் ராணுவ வலிமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து ஏழாவது இரவாகத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தது.
சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக ஈரான் அதிகாரிகள் கூறுகின்றனர்; வெள்ளிக்கிழமை மேலும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின, அதேவேளையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடித்துத் தீப்பிடித்தது
சனிக்கிழமை அதிகாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்ட பாதையின் வழியாகச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடித்துத் தீப்பிடித்ததாக ஈரான் ராணுவம் கூறியது. அது குறித்த கூடுதல் விவரங்களை ஈரான் வழங்கவில்லை.
பொய்யான தகவல்
மேலும் அந்தத் தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. "இது பொய்யான தகவல்," என்று அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் போரைத் தொடங்கிய பிறகு, கப்பல் போக்குவரத்திற்கான ஹோா்முஸ் நீரிணைப் பாதையை ஈரான் மூடியது.
இது கச்சா எண்ணெயின் விலையை வெகுவாக உயர்த்தியதுடன், பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்குக் குறிப்பிடத்தக்க சாதகமான நிலையையும் அளித்தது.
சர்வதேச கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின்படி, ஹோா்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்ததால், வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 86 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது; இது கடந்த ஒரு மாதத்தில் இல்லாத உச்சமாகும். வியாழக்கிழமை மாலை அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்களிடம் ஆற்றிய உரையில், போர் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், "ஈரானிலும் நாம் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறோம்; அந்த முயற்சியின் பலன்களை மிக விரைவில் நீங்கள் காண்பீர்கள்" என்று அவர் கூறினார்.
போர் தொடங்குவதற்கு முன், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்கா அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
பாலங்கள், மின்சார உள்கட்டமைப்பு மீது தாக்குதல்
வெள்ளிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானின் ஹோா்முஸ்கான் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பாலங்கள் மீது அமெரிக்க குண்டுகளை வீசியதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் உள்ள ஈரானியக் கடற்கரை நகரமான பந்தா் கமீர் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பாலங்கள் மீதான தாக்குதல்கள், ஈரானின் முக்கிய துறைமுகமான பந்தர் அப்பாஸை, அந்நாட்டின் மத்தியப் பகுதி மற்றும் தலைநகர் டெஹ்ரானுக்கு செல்லும் சாலைகளிலிருந்து தொடா்பைத் துண்டிப்பதே இத்தாக்குதலின் நோக்கம் எனத் தெரிகிறது.
அமெரிக்க வான்வழித் தாக்குதல்களின் போது "மின்சார உள்கட்டமைப்பு மீது தாக்குதல்கள்" நடத்தப்பட்டதை ஈரான் முதன்முறையாக வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டதுடன்; அப்போது அந்நாட்டின் எரிசக்தி அமைச்சகம், "தீவிர வெப்பத்தை" எதிர்கொள்ளும் நாட்டின் தெற்கு மாகாணங்களில் கடுமையான வெயில் நிலவி வரும் சூழலில், மக்கள் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
46 போ் உயிரிழப்பு: ஈரானில் கடந்த 7 நாள்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 46 பேர் உயிரிழந்ததாகவும், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்; இதில் வெள்ளிக்கிழமை பாலம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 8 பேரும் அடங்குவர்.
திங்கள்கிழமை முதல் மேலும் 13 அமெரிக்கப் படைவீரர்கள், 10 ராணுவ வீரர்கள் மற்றும் மூன்று கடற்படை மாலுமிகள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர், ஆனால் கூடுதல் விவரங்களை அவர்கள் வழங்கவில்லை.
போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கப் படைவீரர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 427 பேர் காயமடைந்துள்ளனர்.
The US expanded its attacks against Iran by hitting more bridges and energy sites and collapsing a tower at a key Iranian port...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.