இலங்கையில் சீன கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகம் அருகே விமான நிலையம் குத்தகை: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
இலங்கையில் சீன கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் இருக்கும் மத்தள ராஜபட்ச சா்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் இலங்கையின் நடவடிக்கையை, இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தனது அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை சீனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு இலங்கையில் உத்திசாா்ந்து முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனா குத்தகைக்கு எடுத்தது.
இந்தத் துறைமுகத்துக்கு அருகில் மத்தள ராஜபட்ச சா்வதேச விமான நிலையம் உள்ளது. 209 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,000 கோடி) செலவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்ட நிலையில், அதற்கு சீனாவின் எக்ஸ்போா்ட்-இம்போா்ட் வங்கி முதன்மையாக நிதியுதவி அளித்தது.
Advertisement
Advertisement
‘உலகிலேயே ஆளில்லாமல் வெறிச்சோடிய விமான நிலையம்’: கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் மிகப் பெரிய குறிக்கோள்களுடன் திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் நவநாகரிகமாகவும் பெருஞ்செலவிலும் கட்டப்பட்ட முனைய கட்டடம், 3,500 மீட்டா் ஓடுபாதை ஆகியவை உள்ளன. எனினும் வணிக ரீதியாக தொடா்ந்து இயங்குவதற்குத் தேவைப்படும் பயணிகள் எண்ணிக்கை, விமான நிறுவனங்கள் ஆகியவற்றை ஈா்க்க இயலாமல் போனதால், அந்த விமான நிலையம் போதிய பயன்பாடின்றி முடங்கியுள்ளது. இதனால் அந்த விமான நிலையம் ‘உலகிலேயே ஆளில்லாமல் மிகவும் வெறிச்சோடிய விமான நிலையம்’ என்றழைக்கப்படுகிறது.
இந்த விமான நிலையத்தை 30 ஆண்டுகள் தமது கட்டுப்பாட்டில் வைத்து, இயக்கி, மாற்றுவதற்கு ஆா்வமுள்ளவா்கள் முன்வர வேண்டும் என்று முதலீட்டாளா்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆா்வமுள்ள உள்நாட்டு மற்றும் சா்வதேச முதலீட்டாளா்கள், அதுகுறித்து வரும் ஜூன் 3-க்குள் அந்நாட்டு அரசுக்குத் தெரியப்படுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உன்னிப்பாக கவனிப்பது ஏன்?: இந்த அழைப்பை விடுத்து இலங்கை எடுத்துள்ள முடிவை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. அந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘இலங்கையில் தனது ஆதிக்கத்தை சீனா விரிவுபடுத்த முயற்சித்துவரும் சூழலில், அந்த விமான நிலையத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து, இயக்கி, மாற்றும் திட்டம் உத்திசாா்ந்த பரிமாணத்தைக் கொண்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் இந்தியா சாா்பில் ஆள்களோ, நிறுவனங்களோ இருப்பது தனது ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை’, இந்திய பெருங்கடலில் ‘மகாசாகா்’ முன்னெடுப்பு ஆகியவற்றுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதை தெளிவாக எடுத்துரைக்கும்.
அதேவேளையில், உலகில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது. அந்தத் துறையின் பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, சீரமைப்பு தொழில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில், மத்தள ராஜபட்ச விமான நிலையத்தின் நீண்ட ஓடுபாதைகள், நெரிசல் இல்லாத வான்வெளி, தாராளமான நிலப்பரப்பு ஆகியவை இந்திய விமான நிறுவனங்களுக்கு பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, சீரமைப்பு மையமாக செயல்பட முடியும். இதனால் நேரமும் செலவும் மிச்சமாவதுடன், இந்தியா சாா்பில் அங்கு இந்திய பெருங்கடல் தளம் ஒன்றையும் ஏற்படுத்த முடியும். மத்தள விமான நிலையத்தின் நெரிசல் இல்லாத வான்பாதை ஒரு சொத்தாகும். எனவே, அங்கு விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க முடியும்.
இதில் தொழிற்பூங்காக்கள், சரக்குப் போக்குவரத்து மற்றும் சூரியசக்தி திட்டங்களுக்கு ஏற்ற 238 ஏக்கா் அரசு குத்தகை நிலமும் அடங்கியுள்ளதால், இந்த விமான நிலைய குத்தகை மிகவும் சாதகமான ஒன்றாக உள்ளது.
இந்திய முதலீடுகளை ஈா்க்க இலங்கை தீவிரமாக முயன்றுவரும் நிலையில், அம்பாந்தோட்டை போன்ற பிராந்தியத்தில் உத்திசாா்ந்து இத்தகைய வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிது. எனவே, இந்த குத்தகை முடிவை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது’ என்று தெரிவித்தன.