மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது குறித்து...
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்த இந்திய தூதரக அதிகாரிகள், தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு, படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தனர். இந்தத் தாக்குதலில் இந்தியவர் ஒருவர் பலியானதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ரஷியாவிலுள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
''மாஸ்கோ மாகாணத்தில் இன்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் இறந்துள்ளார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தாக்குதல் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தனர். உயிரிழந்த ஊழியருக்கு தூதரகம் தரப்பில் இரங்கல் தெரிவிக்கிறது. இத்துடன் ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்துடனும் உள்ளூர் மக்களுடனும் தொடர்ந்து தூதரகம் இயங்கி வருகிறது'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.
ரஷிய தலைநகரைக் குறிவைத்து, உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை இன்று நடத்தியது. கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இது மிகப்பெரியது.
அதாவது, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உக்ரைனின் ஆயிரத்திற்கும் அதிகமான ட்ரோன்களை ரஷியா இடைமறித்து அழித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதில் 81 ட்ரோன்கள் தலைநகரில் விழுந்து சேதங்களைக் கொடுத்துள்ளதாக மாஸ்கோ மேயர் செர்கோய் சோபியானின் தெரிவித்துள்ளார்.
Indian national killed, three injured in drone strike in Moscow
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.