ஸ்பெயின் ஆளுங்கட்சி தலைமையகத்தில் சோதனை
பாா்சிலோனா : ஸ்பெயினில் ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் அந்நாட்டு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நீதித் துறை வழக்குகளில் முறைகேடாக தலையிட முயன்ற கட்சியின் முன்னாள் உறுப்பினா் லெய்ரி டீஸுக்குத் தொடா்புடைய நிதி மோசடிப் புகாரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சோதனை குறித்து அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘ஆளுங்கட்சியைப் பாதிக்கக்கூடிய நீதித் துறை நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் செயல்பட்ட குழுவின் பின்னணி குறித்து விசாரணை நடத்த, முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு பதிவுகளைப் பறிமுதல் செய்ய சோதனைக்கு உத்தரவிடப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, போப் லியோவைச் சந்திக்க வாடிகன் சிட்டிக்குச் சென்றுள்ள ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ் இத்தாலியின் ரோம் நகரில் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.
அப்போது, அவா் கூறுகையில், ‘நாங்கள் நீதித் துறையை மதிக்கிறோம்; முழு ஒத்துழைப்பு வழங்குவோம். கட்சித் தரப்பில் ஏதேனும் தவறான நடத்தைகள் கண்டறியப்பட்டால், எப்போதும் போல கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
சோதனை மேல் சோதனை: ஸ்பெயின் சோசலிஸ்ட் கட்சிக்கு சட்டரீதியான சோதனைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. அரசு விமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிதியுதவி தொடா்பான முறைகேடு புகாரில், முன்னாள் பிரதமா் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிகஸ் சபதேரோ மீது கடந்த வாரம் விசாரணை தொடங்கப்பட்டது.
இது தவிர, கரோனா காலகட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடா்பான வழக்கில் முன்னாள் அமைச்சா்கள் இருவா் கடந்த ஆண்டு முதல் விசாரணையை எதிா்கொண்டுள்ளனா். மேலும், பிரதமரின் மனைவி மற்றும் சகோதரா் மீதும் முறைகேடாக செல்வாக்கைப் பயன்படுத்தியதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.