
பாலிவுட் பிக்பி அமிதாப்பின் மகள் ஸ்வேதா நந்தாவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது/ அப்பாவும், மகளுமாக சமீபத்தில் கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரமொன்றில் கூட இணைந்து நடித்திருந்தார்கள். அமிதாப்புக்கு மகன் அபிசேக்கை விட மகள் ஸ்வேதாவின் மீது அதிகப் ப்ரியம் உண்டு. ஸ்வேதாவையும் அவரது வாரிசுகளையும் பற்றி அவ்வப்போது நெக்குருகித் தனது வலைத்தளத்திலும் அவர் பகிரத் தவறியதில்லை. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஆடைகளுக்கான ராம்ப் வாக் ஷோ ஒன்றில் மகள் ஸ்வேதா, அவரது நெருங்கிய நண்பரும், பாலிவுட் படத்தயாரிப்பாளருமான கரண் ஜோஹருடன் இணைந்து பாடலுக்கேற்ற தாளகதியில் மேடையில் நடந்து வந்தார். ஆடை வடிவமைப்பாளர்கள் சந்தீப் கோஸ்லா மற்றும் அபுஜானியின் ஆடைகளை அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட ராம்ப் வாக் அது.
இதைப் புகைப்படமெடுக்கவும், விடியோ எடுக்கவும் மேடையைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம். அந்த நேரத்தில் முன் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அமிதாப் தனது மகளின் நளினமான ராம்ப்வாக் கண்டு அகமகிழ்ந்து விடியோ எடுக்க முனைந்தார். முடியவில்லை. காரணம் மேடையைச் சூழ்ந்து கொண்டிருந்த புகைப்படக்காரர்களின் கூட்டம்.
உடனே அமிதாப் என்ன செய்தார் தெரியுமா? புகைப்படக் காரர்களைப் பார்த்து விசிலடித்து விலகச் சொன்னார். அவர்கள் விலகியதும் தன் மகள் கரண் ஜோஹருடன் ராம்ப் வாக்கியதை உற்சாகமாக தனது மொபைலில் விடியோ பதிவாக்கினார்.
அமிதாப் புகைப்படக் காரர்களை விசிலடித்து விலகச் சொன்னதும் மகளை ராம்ப்வாக்கில் விடியோ எடுத்ததும் பார்க்க கவிதை மாதிரி இருந்ததாக வட இந்திய மீடியாக்களில் எழுதி வருகின்றனர். அப்பா, மகள் பாசத்திற்கு இது ஒரு எடுத்துக் காட்டு என்று கூட சிலர் எழுதுகிறார்கள். என்ன தான் சூப்பர் ஸ்டார், பான் இந்தியன் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார்களாக இருந்த போதும் சூப்பர் ஸ்டார்களும் கூட அவரவர் மகள்களுக்கு சாதாரண அப்பாக்கள் தானே! இதிலென்ன இருக்கிறது பெரிதாகப் பேச என்கிறீர்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.