கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மாறும் காலங்களில் மாறாத கோலங்கள்

"மாதங்களில் அவள் மார்கழி' என்று கவிஞர் காதலியைப் பாடினார். ஒவ்வொரு வீட்டின் முன்பும் கோலம் இட் டு அதன்மீது சாணி உருண்டையில் பறங்கிப் பூவைச் செருகி வைத்து அழகு பார்க்கும் மரபு மெள்ள மெள்ள அழிந்துவிட்டத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:40 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

"மாதங்களில் அவள் மார்கழி' என்று கவிஞர் காதலியைப் பாடினார். ஒவ்வொரு வீட்டின் முன்பும் கோலம் இட் டு அதன்மீது சாணி உருண்டையில் பறங்கிப் பூவைச் செருகி வைத்து அழகு பார்க்கும் மரபு மெள்ள மெள்ள அழிந்துவிட்டது. மறுநாள் அதைச் சுத்தம் செய்து குப்பைக்குச் செல்லும்போது மாக்கோல மாவும், பூவும், சாணியும் அருமையான இயற்கை உரமாக கம்போஸ்ட் ஆகி, நல்ல ஆரோக்கியமான உணவுக்கு வித்திட்டதெல்லாம் பழங்கதை.

÷இப்போதெல்லாம் மார்கழியில் மாறாத நோய்கள். காலநிலைத் தடுமாற்றமும் சத்தில்லாத ரசாயன விளைச்சலில் பெறும் உணவும் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலையே அழித்துவிட்டது. ""நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்பது பழமொழி. ""நோயுள்ள வாழ்வு குறைவற்ற செல்வம்'' - என்பது எங்களின் வேதம் என்று மார்கழிக் கோலமிடும் மாதர்களிடம் டாக்டர்கள் கூறுவதுண்டு. வீட்டின் முன்பு போடும் ஒரு கோலத்தைத் தேசத்தின்மீது போட்டுப் பார்ப்போமா?

÷முதலில் நீங்கள் 10-ம் வகுப்பு மாணவனாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரைபடம் வேண்டும். இது ஓர் அரசியல் பூகோளப் பாடம். முதலில் இந்தியாவின் மலைகள் வனங்கள் நதிகளை ஒட்டியபடியே வளமான மாவட்டங்கள் இருக்கும். மலைகளுடன் வனங்கள் உள்ள இடங்களுக்கு வெளிர்ப்பச்சை நிறம் தீட்டுங்கள். நியாயமாகக் கரும்பச்சைதான் தீட்ட வேண்டும். மரங்களை வெட்டி விற்றுவிட்டதால் கிளிப்பச்சையாகிவிட்டது.

பின்னர் நதிகளுக்குப் பின்னலான மெல்லிய நீலக்கோடுகள். ஏறத்தாழ இதே இடத்தில்தான் கனிமச் சுரங்கங்களும் இருக்கும். இரும்பு, நிலக்கரி, அலுமினியம் கிடைக்கும் இடங்களில் கருப்பு வட்டம் சின்னதாய்ப் போட வேண்டும்.

÷இவ்வாறு பச்சைநிறத்திலும், நீலநிறத்திலும் கரியவட்டங்களிலும் காணப்படும் பூகோளமே நமது இயற்கைச் செல்வங்கள். இங்கெல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் உண்டு. நீர்மின்சார அணைக்கட்டுத் திட்டம், அனல்மின் நிலையம், அணுமின் நிலையம், சுரங்கக் கட்டுமானங்கள், இத்யாதி இத்யாதி. இதற்குமேல் மரக்கடை நடத்தும் இந்திய வனத்துறை மாபெரும் வனப்பிரபு. இப்படிப்பட்ட பூகோளத்தில் கோடி கோடியாகப் பணம் புரள்கிறது. இப்படிப்பட்ட நிலங்களிலும் வனப்பகுதியிலும் பச்சை, நீலம் கருப்புக் கலர்களுக்குக் கீழே துண்டு துண்டாகவோ புள்ளிகளாகவோ சிவப்புக் கலர் தீட்டுக. இந்தச் சிவப்பு நிறத்தை நக்சல்பாரிகளாகக் கொள்ளலாம். ஏராளமாகப் பணம், வளம் உள்ள இடங்களில்தான் ஏழைகளின் வாழ்நிலை பாதிக்கப்படுகிறது. மிகவும் பச்சையான சுரண்டல் நிகழ்வதால் அங்கு தீவிரவாதம் நக்சல்பாரிகளாக ஏழைகளை மாற்றி வருகிறது.  இவ்வளவு செல்வம் உள்ளவர்கள் பங்கிட்டுக் கொள்ள முன்வருவது இல்லை.

÷பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டு சர்க்கார் புறம்போக்காகவோ, வனமாகவோ பதிவான நிலங்கள் மீண்டும் அம்மக்களுக்கு ஒப்படைக்கப்படாமல் பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுவதும் இந்தக் கோலங்களில்தான். கட்சிகள் மாறலாம். ஆட்சிகள் மாறலாம். ஆனால் நாம் கண்ட சிவப்புக் கோலங்கள் மாறுவதில்லை.

 குறிப்பாக பிகார், ஜார்க்கண்ட், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், உ.பி., குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் இங்கெல்லாம் வனம், மலை, நதி, வளர்ச்சி எல்லாம் உண்டு.

÷உதாரணத்துக்கு ஜார்க்கண்டில் முதல்வராயிருந்த மதுகோடா ஒருவரே போதும். அவர்மீது 4,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கு. அங்கு இயற்கைச் செல்வங்கள் மிகுந்துள்ளன. ஏழை வனவாசிகளும் நிறைந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநில வரவு செலவுத் திட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கை மதுகோடாவும், மதுகோடாவின் சகாக்களும் அபகரித்துள்ளனர்.

÷இரண்டாவது உதாரணம் கர்நாடகத்தில் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டி சகோதரர் கர்நாடக -  ஆந்திர எல்லைகளில் ஏராளமான இரும்புச் சுரங்கங்கள் சொந்தம். மொத்த இரும்புத் தாதுவளத்தில் 20 சதவிகிதம் இங்கு உள்ளதை பூகோளப் பாடத்தில் நாம் படித்தது நினைவுக்கு வருகிறது. இப்பகுதியில் சுரங்க நிறுவனங்களின் கழிவு நீரால் விளைநிலங்கள் மாசாகியுள்ளன. ஏழை மக்களின் வாழ்விடங்கள் பிரச்னையாகியுள்ளன. வனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நக்சல் இயக்கம் வேரூன்றி வருகிறது.

÷அக்டோபர் 2009-ல் 15 இந்திய மாநிலங்களிலிருந்து 5,000 பழங்குடி வனவாசிகள் வனவாழ்வுரிமையில் தங்களுக்கு நிலம் வேண்டுமென்று கோரி ஊர்வலம் நடத்தினார்கள். இதற்கு முன்பும் 2008-ல் நிலஉரிமை கேட்டு 30,000 ஆதிவாசிகள் இதைவிடப் பெரிய ஊர்வலம் நடத்தியபோது பிரதமர் தலையிட்டு சமாதானம் செய்து உடனடியாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரைத் தலைவராக நியமித்து ஒரு நிபுணர் கமிட்டியும் நிறுவப்பட்டது. ஆதிவாசிகள் - பழங்குடி விவசாயிகளின் பிரச்னைகளைக் கேட்டறிந்து தேசிய நில உரிமைச் சீர்திருத்தக் குழுவுக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டது. அந்த நிபுணர் கமிட்டியும் தீர விசாரித்து ஓர் அறிக்கையை வழங்கி பழங்குடி மக்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்று சிபாரிசு செய்து ம் அதை நடைமுறைப்படுத்தாமல் "இது ஒரு கொள்கைத்திட்டமே' என்று கூறி கைவிரித்துவிட்ட சூழ்நிலையில் 2009 அக்டோபரில் ஊர்வலம் நிகழ்த்தப்பட்டது.

÷இந்திய வரைபடத்தில் காணப்படும் சிவப்புக் குறிகளின் பொருள் இந்தியாவில் ஒரு மூன்றாம் விடுதலையை நக்சல்பாரிகள் வழங்குவார்கள் என்று தப்பர்த்தம் செய்து கொள்ளக்கூடாது. எனினும் இன்று நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்ற காரணங்களினால் படித்தவர்களில் சிலர் நக்சல்பாரி இயக்கத்தை ஒரு சுயவேலைவாய்ப்புத் திட்டமாக மேற்கொண்டு கள்ளத்துப்பாக்கி வைத்துக் கொண்டு கொலை கொள்ளைகளைச் செய்யலாம்.

 படிப்பறிவில்லாத ஆதிவாசிகள் அவர்கள் வலையில் விழுந்திருக்கலாம். சமயங்களில் அரசியல் பிரபலங்களின் கையாள்களாகவும் வாழலாம்.

எனினும் அவ்வப்போது நக்சல்பாரிகள் காவல் நிலையங்களைத் தாக்குவதும், காவலர்களைக் கொலை செய்வதும், துப்பாக்கிகளைக் கொள்ளையடிப்பதும் ஊடகங்களில் செய்திகளாக வருகின்றன.

அவர்களில் சிலருக்கு மட்டும் லட்சியவெறி இருக்கலாம். அடிப்படையான சில தேவைகளை ஆதிவாசிகளுக்கு வழங்கிவிட்டால் பிரச்னைகளை இறக்கி வைக்கலாம். வனத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்கள், பொருளாதார மண்டலம், தனியார் தொழில் நிறுவனங்கள் ஆகியவை ஆதிவாசிகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. எந்தக் கை அவர்களின் வாழ்நிலையைப் பறித்ததோ அந்தக் கையே செல்வங்களைப் பகிர்ந்தளிக்க முன்வரக் கூடாதா?

 இத்தகைய சூழ்நிலைகளில், புவியியல் சூழ்நிலையை முன்னிறுத்தி, இயற்கை வள நிர்வாகம் இந்தியாவில் இனியாவது தோன்றுமா?

உள்ளூர் வனவாசிகளுக்குப் பொறுப்புணர்வும், உரிய வேலைவாய்ப்புகளும், கல்வி வசதியும் அதேசமயம் வனவளம், பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பில் பங்கேற்பும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்போது பழங்குடி மக்களைச் சட்ட, சமூக விரோதக் கும்பல்கள் சுரண்ட வாய்ப்பில்லாமல் போகும். வளத்தைப் பகிர்ந்து வாழப் பழகிவிட்டால் சிவப்புப் புள்ளிகள் எல்லாம் பசுமையைக் காட்டும் பச்சை நிறமாக மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.