கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

உணவு ஏற்றுமதியும் உலக நிலவரமும்

அண்மையில் மதிப்புக்குரிய நமது விளையாட்டுத்துறை, விவசாய அமைச்சர் சரத்பவார்,  2010-11-ம் ஆண்டுக்கான கரீஃப் உணவு உற்பத்தி முன் மதிப்பீட்டை வெளியிட்டு, உணவு உற்பத்தி உபரி மிகுதியாக உள்ளதென்றும், கையிருப்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:55 am

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

அண்மையில் மதிப்புக்குரிய நமது விளையாட்டுத்துறை, விவசாய அமைச்சர் சரத்பவார்,  2010-11-ம் ஆண்டுக்கான கரீஃப் உணவு உற்பத்தி முன் மதிப்பீட்டை வெளியிட்டு, உணவு உற்பத்தி உபரி மிகுதியாக உள்ளதென்றும், கையிருப்புகளும் கணிசமாயுள்ளதால் கோதுமை, அரிசி, சர்க்கரை ஏற்றுமதி செய்வது பற்றி பரிசீலிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

 உலகச் சந்தையில் எல்லா உணவுதானிய விலைகளும் உச்சத்தில் உள்ளதால், ஏற்றுமதியால் இந்தியாவுக்கு லாபம் உண்டு. தனிப்பட்ட முறையில் ஏற்றுமதி டீல் மூலம் அமைச்சருக்கும் லாபம் இருக்கலாம்.

 நமது தேவை, உள்ளூர் விலைவாசி ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு  கவனித்தால் நமது அபரிமித உபரி உற்பத்தி என்பது அற்ப சந்தோஷமே.

கரீஃப் முன்மதிப்பீடு கடந்த ஆண்டோடு ஒப்பிடப்பட்டு உற்பத்தி உயர்வு பேசுவது கெட்டிக்காரத்தனம். ""கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்'' - ஆனால் இது மூன்றாவது, நாலாவது முன்மதிப்பீடு வெளியாகும் 4, 5 மாதங்கள் கழித்துத் தெரியவரும். 2008-09 சாதாரணமாக நல்ல உற்பத்தி ஆண்டு. 2009-10 அதாவது கடந்த ஆண்டு வறட்சி ஆண்டு. 2010-11 மீண்டும் நல்ல உற்பத்தி ஆண்டு. அந்த அளவில் பருவம் ஒத்துழைத்துள்ளது உண்மையே. அப்படி இருப்பினும்கூட 2008-09 ஆண்டோடு ஒப்பிட்டால் 2010-11 உற்பத்தி சற்றுக்குறைவுதான்.

 கோதுமை ரஃபி பயிர் என்பதால் கரீஃப் முன்மதிப்பீட்டில் வராது. அரிசி, புஞ்சைத்தானியங்கள், பருப்பு அடங்கிய கரீஃப் உணவு உற்பத்தி 2008-09-ல் 11.81 கோடி டன்கள்.

2009-10-ல் அதாவது கடந்த ஆண்டு இவை 10.38 கோடி டன்கள். நடப்பு கரீஃப் பருவ உற்பத்தி 2010-11-ல் 11.71 கோடி டன்கள். உண்மையில் 2008-09 ஆண்டைவிட 10 லட்சம் டன்கள் குறைவுதான்.

மோசமான ஒரு வறட்சி ஆண்டுடன் மழை ஆண்டை ஒப்பிடுவது அமைச்சரின் கெட்டிக்காரத்தனமே தவிர, உண்மையில் நடப்பு ஆண்டு நிலையை 2008-09-ம் ஆண்டுடன் ஒப்பிட்டு ஏற்றுமதி பற்றி முடிவு செய்ய வேண்டும்.

  நெல், வெப்பம் குளிர் இரண்டையும் தாங்கும். கோதுமை, வெப்பம் தாங்காது. அது குளிர்காலப் பயிர். எனினும் அமைச்சர், ரஃபி முன்மதிப்பீட்டின்படி 2010-11-ல் கோதுமை உற்பத்தி 8.50 கோடி டன் என்பதாகவும், 2009-10-ஐவிட 25 லட்சம் டன் அதிகம் என்றாலும், உண்மையில் 2008-09 ஐவிட கோதுமை உற்பத்தி நடப்புப் பருவத்தில் குறைவுதான்.

 கோதுமை விளையும் மாநிலங்களில் பிப்ரவரி மாதம் அதிக வெப்பம் என்பதால் கோதுமை உற்பத்தியில் எதிர்பார்த்த மிகுதி உற்பத்தி இருக்காது என்றும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இங்குதான் மிகவும் முக்கியமான கேள்வி எழுகிறது.

 ஏற்றுமதி செய்யும் அளவில் இந்திய உணவு உற்பத்தி தலைநிமிர்ந்துவிட்டது என்றால் உணவு விலைகள் வீழ்ச்சியுற வேண்டும். உயர்ந்துவிட்ட உணவு விலைகள் அப்படியேதான் உள்ளன. காய்கறிகளின் விலைகளில் மட்டுமே சற்று இறக்கம் காணப்படுகிறது.

 ஐ.நா.வின் உணவு - விவசாய நிறுவனமான எஃப்.ஏ.ஓ. 2011 ஜனவரி மாதத்தில் உலக உணவு விலை, வரலாறு காணாத உச்சநிலையை எட்டியுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளது. எஃப்.ஏ.ஓ. கணித்துள்ள உணவு விலைக் குறியீட்டெண் 231-ஐத் தொட்டுவிட்டது.

 கடந்த 20 ஆண்டுகளில் உணவின் விலை இந்த அளவுக்கு உயர்ந்ததாக வரலாறு இல்லை, ஏன்? பதுக்கல், கள்ளச்சந்தை என்பதெல்லாம் காரணங்கள் அல்ல.

நிஜமான காரணம் தடுமாறிப்போன தட்பவெப்பத்தால் ஓரளவுக்கு இந்தியா நீங்கலாக, உலக நாடுகளில் உணவு உற்பத்தி குறைந்துவிட்டது. மாறி மாறி ஒருபக்கம் வெள்ளத்தால் சேதம். ஒருபக்கம் அதிகமான பனிப்பொழிவால் சேதம். ஒருபக்கம் வறட்சியால் சேதம்.

 கோதுமை விளையும் முக்கிய நாடான கனடாவை எடுத்துக்கொண்டால், தாங்க முடியாத குளிர், பனிப்பொழிவால் - கடந்த ஆகஸ்டு, செப்டம்பரில் கோதுமைப் பயிர் அழிந்ததுபோல் ரஷியாவில் வரலாறு காணாத வெப்பம்.

100 டிகிரி பாரன்ஹீட் என்பது ரஷியர்களுக்கு கேள்விப்படாத சீதோஷ்ணம். ரஷியாவில் வெப்பம் மிகுந்து கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது.

 ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம், கோதுமைப் பயிரை அழித்துள்ளது. சீனாவில் இப்போது குளிர்காலப் பருவம் கோடைபோல் உஷ்ணம் மிகுந்து ரஃபி கோதுமை உற்பத்திக்கு உலை வைத்துவிட்டது.

 இந்தியாவில் மழை, பருவம்தவறிப் பெய்த காரணத்தால் பல மாநிலங்களில் பயிர்ச்சேதமும் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகமாயுள்ளன.

 எனினும் கூட, இரண்டாவது மொத்தப் பயிர் உற்பத்தி முன்மதிப்பீட்டை வைத்து உணவு உற்பத்தி உயர்ந்துள்ளதாக முன்கூட்டியே தீர்மானிப்பது சரியல்ல. அப்படியே இருந்தாலும்கூட, நமது புதிய உணவு விநியோகத் திட்டம் அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ என்று பசிக்குப் பாதுகாப்பு அதாவது "ஃபுட் செக்யூரிட்டி' தர உணவு வழங்கல் உயர்த்தப்பட்டுள்ளதால் ஒரு மாதத்துக்கு ரேஷன் உணவுத் தேவை 60 லட்சம் டன்கள் என்று புதிய கணக்கு கூறுகிறது. ஆகவே, நமக்கு ஆண்டுக்கு 7.2 கோடி டன்கள் இருப்பு வேண்டும்.

 இப்போதுள்ள உணவு இருப்பு 4.7 கோடி டன்களே. நமது தேவைக்குமேல் இருந்தால்தானே ஏற்றுமதி சாத்தியம்? போகிற போக்கைப் பார்த்தால் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. சரத் பவார் மீண்டும் அமைச்சராவதும் ஐயமே.

 இருக்கும் உணவை இப்போதே நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று திட்டமோ?

 அடுத்த ஆண்டு அடுத்த ஆட்சி வந்தால் உணவுச் சுமையை புதிய அரசு ஏற்று, அதைவிட நல்ல விலைக்கு உணவை இறக்குமதி செய்து புதிய அரசை நஷ்டமடையச் செய்யும் நல்லெண்ணம் இருப்பின் இப்போது உணவை ஏற்றுமதி செய்யலாம்.

 2010-11-ம் ஆண்டு நல்ல உணவு உற்பத்தி ஆண்டுதான் என்பதுவே ஒரு கேள்விக்குறியாக உள்ளபோது ஏற்றுமதியில் ஈடுபட்டால் நமது கதி அதோகதியாகிவிடுமே.

விலைவாசி சற்றேனும் அசைந்து கொடுக்கவில்லை. விண்ணைத் தொடும் விலைவாசிகளைப் பற்றி டாலர்களில் புழங்கும் இந்திய அமைச்சர்களுக்கும் கவலை இருக்காது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவ்வாறே மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், பெரிய பெரிய பணமுதலைகள், மேல்நிலை நிர்வாக அலுவலர்களுக்கும் விலைவாசி ஒரு பொருட்டல்ல.

 ஒரு கிலோ அரிசி ரூ. 100 என்று விற்றால்கூட மேற்படி மேல்மட்ட வர்க்கத்தால் வாங்கிச் சாப்பிட முடியும். ஆனால், மாதம் ரூ. 2,000 சம்பளம் வாங்கிக் குடும்பம் நடத்தும் பல கோடி, ஏழை மக்கள் நிரம்பிய இந்தியாவுக்கு மேலும் மேலும் உணவு விலை ஏறினால் தாங்க முடியுமா? ஏறிய விலைகள் எல்லாம் இறங்காதபோது ஏற்றுமதி என்று பேசுவதற்கு அமைச்சர்களுக்கு ஏன் வாய் கூசவில்லை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.