கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

நாம் எடுக்க வேண்டிய நல்ல முடிவு

பாரத தேசத்தை ஆட்டிப் படைக்கும் இரண்டு பொருளாதார சக்திகளுக்குள் நீடித்துவரும் கசப்பின் விளைவுதான் "சுப்பனை' அமுக்கும் "அப்பன்'. யார் இந்த அப்பன்? அவன் வேறு யாராக இருக்க முடியும்? சிவ சிவா. தில்லையிலே கொள்ளைகொண்ட சிதம்பரநாதனையும் சொல்லலாம்; நிதியமைச்சரையும் சொல்லலாம்.

News image
Updated On :19 டிசம்பர் 2012, 7:16 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

பாரத தேசத்தை ஆட்டிப் படைக்கும் இரண்டு பொருளாதார சக்திகளுக்குள் நீடித்துவரும் கசப்பின் விளைவுதான் "சுப்பனை' அமுக்கும் "அப்பன்'. யார் இந்த அப்பன்? அவன் வேறு யாராக இருக்க முடியும்? சிவ சிவா. தில்லையிலே கொள்ளைகொண்ட சிதம்பரநாதனையும் சொல்லலாம்; நிதியமைச்சரையும் சொல்லலாம்.

சுப்பன் யார்? ரிசர்வ் வங்கி கவர்னரான சுப்பாராவை நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும்!

வலது காலால் உதைத்துப் போகாத தூரத்தை இடதுகாலால் உதைத்துப் பார்க்கும் நிதியமைச்சர் ப. சிதம்பரம், தங்களின் அரசியல் உறவுகளை நியாயப்படுத்தி ஆடிட்டர் ஜெனரலை அவதூறாகப் பேசும் மணீஷ் திவாரிபோல் நடிக்காமல், ""உன்னால்தான் எல்லாம் பாழாய்ப் போகிறது, மரியாதையாக நான் சொல்வதைக்கேட்டு நடந்துகொள்'' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் மீது பாய்ந்துவிட்டார்!

""வளர்ச்சி செல்லும் வேகத்தில் விதிமுறைகளைப் பார்க்காமல், புதிய தனியார் வங்கிகளுக்கு லைசென்ஸ் வழங்கு'' என்று ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சுப்பன் சும்மாவா? தகப்பன் சாமியாயிற்றே. பெப்பே காட்டிவிட்டார்.

""வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் அதற்கான திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறட்டும் பார்க்கலாம்'', என்று சுப்பாராவ் தட்டிக்கழிக்கிறார்.

தனியார் வங்கிகளைப் பெருக்கி, "கடன் மூலதனம்' பெருகினால் இந்தியா வளரும் என்று நம்பும் நிதியமைச்சர், இதற்கென்று வங்கி ஒழுங்குமுறைச் சீர்திருத்தச் சட்டம் வெளிவரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? லைசென்ஸ் வழங்கும் அதிகாரம், மேற்படிச் சட்டத்திருத்தம் இல்லாமலேயே ரிசர்வ் வங்கி வழங்கலாம் என்பது நிதியமைச்சரின் கருத்து.

இதற்கான ஒழுங்கு முறைகள், விதிமுறைகள், வழிகாட்டிகளை வகுத்துத் தொகுத்து வெளியிடவே 8 மாதங்கள் ஆகலாம்.

அதன்பின் நாடாளுமன்ற விவாதம் என்று போய்க் கொண்டிருப்பது ஆகிற காரியமா என்று நிதியமைச்சர் கேட்பதில் எதுவும் உள்நோக்கம் உள்ளதோ?

அப்படி அல்ல என்று கூறும் ரிசர்வ் வங்கி கவர்னர், நிதியமைச்சரின் தனிப்பட்ட உத்தரவாதம் போதாது, "ஃபைடூசியரி'க் கொள்கை தேவை என்கிறார்.

""மற்றவர்களின் பணத்தைப் பாதுகாக்கும் வங்கி, இஷ்டம்போல் செலவு செய்து திவால் ஆகிவிட்டால், வங் கிச் சேமிப்பாளர்களுக்கு நிதியமைச்சர் வந்து அசலை வழங்கி விடுவாரா?'' என்று சுப்பா ராவ் மறைமுகமாகக் கேட்பது நியாயந்தானே!

சுப்பா ராவ் பணியாவிட்டால் நிதியமைச்சரிடம் மற்றொரு அஸ்திரம் உள்ளது.

நிதித்துறை சார்ந்த சட்ட சீர்திருத்தக்குழு அறிக்கையின் கால அவகாசம் மார்ச் 2013 வரை இருப்பினும் கடந்த அக்டோபரிலேயே சுருக்க உரை வந்துவிட்டது.

அரசியல் சார்பு இல்லாமல் நிதி, மத்திய வங்கி, அரசு, சட்டம், பொருளாதாரம் ஆகியவற்றின் நுண்ணறிவுச் செயல்திட்டம் இருக்க வேண்டும் என்கிறது அது.

சட்டத்தையும் அரசியலையும் வேற்றுமைப்படுத்தாமல் மேற்படி அறிக்கை உள்ளதாக அரசியல் சார்பற்ற நிதி நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த அறிக்கை ரிசர்வ் வங்கி அதிகாரத்தை நிதித்துறைக்கு வழங்கியுள்ளது!

நாணயச் செலாவணி, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதுள்ள ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை இது பறித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

எதுவோ ஓர் அரசியல் உள்நோக்கத்துடன் நிதித்துறை நிர்வாகச் சட்டச் சீர்திருத்தக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

இதையெல்லாம் மனத்தில்கொண்டு ரிசர்வ் வங்கிக்கு, நிதியமைச்சர் நெருக்கடி தருவாரானால் நிஜமான வளர்ச்சியைவிட நிஜமான அரசியல் உள்நோக்கமே வெளிச்சமாகும்.

கவர்னரைவிட நிதியமைச்சருக்கு அதிகாரம் அதிகம். அநேகமாக மனதிற்குப் பிடிக்காவிட்டாலும் நிதியமைச்சரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுப் புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்கும் வழிமுறைகளை வகுக்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் ஓர் அவப்பெயரையும் ரிசர்வ் வங்கி பெறும்.

உலகளாவிய கண்ணோட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் பணப்புழக்க நிர்வாகம் போற்றத்தக்கதாகவும், நல்ல கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும் பெயர் உண்டு. பல நாடுகளில் நிகழ்ந்த மோசமான நிர்வாகம் இந்தியாவில் ஏற்படாதபடி பண சேமிப்பாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

உலகமயமாதல் காரணமாக ரிசர்வ் வங்கிக்கு நெருக்குதல்கள் ஏற்பட்டபோதும் எச்சரிக்கையுடன் அடிமேல் அடிவைத்துத் திறமையுடனும் தகுதியுடனும் நடந்துகொண்ட நற்பெயரை, நிதியமைச்சரின் நெருக்கடி காரணமாக இழக்கும் நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும்.

""இந்தியாவின் வளர்ச்சி குன்றிய நிலைக்குரிய காரணம் போதுமான அளவில் தனியார் வங்கிகள் இல்லை; தனியார் வங்கிகளை வளர்த்தால் மூலதனம் வளரும், அப்படி வளர்க்கப்படும் மூலதனம் மூலம் ஜி.டி.பி. உயரும்'' என்று நிதியமைச்சர் தப்புக்கணக்குப் போடுகிறார்.

வளர்ச்சி குன்றிப்போன நிலைமைக்குரிய காரணம் மூலதனம் இருந்தும் மோசமான தொழில் நிர்வாகமே தவிர, முதலீடுகளுக்குப் பஞ்சம் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

எண்ணெய் எரிவாயு போன்ற பொதுத்துறைப் பங்குகள் சரியாக விலை போகவில்லை. ஆயுள் காப்பீடு அவ்வப்போது கைகொடுத்துக் காப்பாற்றுகிறது.

பொதுத்துறை பங்கு விற்பனையில் ஈக்விட்டியை 10 சதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தியுள்ள ஆபத்து நிலையையும் நிதியமைச்சர் உணரவில்லை. பொதுத்துறையில் பங்குகள் நல்ல விலைக்குப் போகாமல் தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டு விரக்தியான நிலையில், ""வளர்ச்சி குன்றிய நிலைக்குரிய காரணம் தனியார் வங்கிகள் பெருகவில்லை'' என்று ரிசர்வ் வங்கி மீது பாய்வது புண்ணியமில்லை.

வளர்ச்சி குன்றிய சூழ்நிலையில் அங்காடியும் இல்லை. கடன் தேவையும் பெருகவில்லை. இயக்கத்தில் உள்ள வங்கிகளிடம் தேவையான முதல் உள்ளபோது அவசர அடியாகத் தனியார் வங்கிக்கு உரிமம் வழங்குவது தேவையா?

கடந்த காலாண்டு முடிவான பணக்கொள்கையில் பண இருப்பு விகிதத்தைக் குறைத்துள்ள கவர்னரின் முடிவு, நிதியமைச்சர் வழங்கிய நெருக்கடியினால்தான். அதேசமயம் "ரிப்போ' வட்டியைக் குறைக்காமல் விட்டதால் பொதுச் செலவினம் உயர்ந்தாலும், பணவீக்கம் ஓர் அளவுக்குக் கட்டுப்படலாம் என்பது கவர்னரின் கருத்து.

ஆனால், நிதியமைச்சரின் கோபத்தைக் கிளறும் வகையில், ""செயல்படாத கடன்'' வரவு 0.6 சதம் உயர்ந்து 3.25 சதமாகிவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார். செயல்படாத கடன் வரவு என்பது பட்டை நாமம் போடப்பட்ட வாராக்கடன்; தொழில் மூலதனமாக மாற்றப்படவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். இந்த லட்சணத்தில் புதிய வங்கிகளுக்கு உரிமமா? கவர்னரிடம் உள்ள நியாயம் நிதியமைச்சரிடம் இல்லை.

வாராக் கடன்களை வசூலிக்கத் தனி நீதிமன்றம் உண்டு. "செக்யூரிட்டேஷன் அன்ட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் ஆஃப் ஃபினான்ஷியல் அஸட்ஸ் அன்ட் என்ஃபோர்ஸ்மென்ட் செக்யூரிட்டி இன்டரஸ்ட்' சட்டம் செயல்பட்டால் வசூல் நிகழும் என்று சொல்லப்படுவதுண்டு. இப்படிப்பட்ட கடன் வசூல் நடுவர் மன்றங்களிடம் (டெட் ரிகவரி ட்ரிப்யூனல்) மொத்தம் 67,524 வழக்குகள் தீர்ப்பாகாமல் உள்ளன.

கடந்த 15 மாதங்களில் மட்டும் 29,908 வழக்குகளை வங்கிகள் பதிவு செய்துள்ளன. வளர்ச்சி இல்லை என்று யார் சொன்னது? வாராக்கடன் வழக்குகள் ஆண்டுக்கு 70 சதவீதம் வளர்கிறது. வரும் ஆண்டில் 1 லட்சத்தைத் தொடலாம்!

இன்றுள்ள நிலவரத்தின்படி வாராக்கடன் மதிப்பு 2,00,000 கோடி ரூபாய்கள். வளர்ச்சிக்கு மூலதனத்தை உயர்த்த வேண்டுமானால் வங்கிகளை வளர்க்க வேண்டும் என்று நிதியமைச்சர் கூறினால், வாராக்கடன்கள் வரும் காலாண்டில் 2 லட்சம் கோடி ரூபாய் உள்ளதே என்று கவர்னர் கூறும் பதிலில் உள்ள பொருள், கூடுதல் வங்கிகள் தொழில் மூலனத்தை வளர்க்குமா? வாராக்கடன்களை வளர்க்குமா?

நிதியமைச்சர் வகுக்கும் நிதிக்கொள்கையும் அதை அனுசரித்து கவர்னர் வகுக்கும் பணக்கொள்கையும் விரைவில் இந்தியாவை திவாலாக்கலாம்.

இன்றைய நிலையில் ஏற்றுமதி மந்தமாகி, இறக்குமதி கட்டுப்படாமல் தவிர்க்க முடியாத தடுமாற்றமாகி வர்த்தகப் பற்றாக்குறையும் ஏறத்தாழ 2 லட்சம் கோடி டாலராகிவிட்டது. இனி புதிய வங்கிகள் வந்தும் பயனில்லை.

அன்னிய நேரடி முதலீடுகள் மூலம் ""சில்லறை'' என்ற போர்வையில் பெரு வர்த்தகத்தில் நுழையும் அன்னியர்களுக்கு வழிவிட்டு நாம் ஒதுங்கிவிடலாம் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முடிவெடுத்த பின்னர் நாம் என்ன செய்வது?

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களாகிய நாமும் ஒரு "நல்ல முடிவை' எடுப்போம். வாழ்க பாரதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.