துரித உணவைத் தவிர்ப்போம்

உணவே மருந்து; மருந்தே உணவு' என்று வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு நாகரிகத்தின் காரணமாக, பாரம்பரியம் இழந்து அவர்கள் உண்ணும் உணவே விஷமாகிவிட்டது. இயற்கை விவசாயமும் மெல்ல மெல்ல உயர்ந்தும் வருகிறது. அவ்வாறு இ
Updated on
3 min read

உணவே மருந்து; மருந்தே உணவு' என்று வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு நாகரிகத்தின் காரணமாக, பாரம்பரியம் இழந்து அவர்கள் உண்ணும் உணவே விஷமாகிவிட்டது.

இயற்கை விவசாயமும் மெல்ல மெல்ல உயர்ந்தும் வருகிறது. அவ்வாறு இயற்கை விவசாய உணவை வாங்க இயலாதவர்கள், கடையில் வாங்கும் ரசாயனத்தில் விளைந்த காய்கறிகள் - பழங்கள் - தானியங்களை 8 மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து அத்தண்ணீரை வடித்துவிடலாம். சற்று விஷம் குறைய வாய்ப்புண்டு.

அதற்காக சமைக்கும் உணவே வேண்டாம் என்று முடிவு செய்யக்கூடாது. விதம் விதமான துரித உணவுகள் அங்காடிகளில் குவிந்தவண்ணம் உள்ளன. குழந்தைகள் வாங்குவதற்காக பாலிவுட், கோலிவுட் நடிகர் நடிகைகளும், கிரிக்கெட் வீரர்களும் அவற்றை உண்பதாக காட்டுவார்கள். இவற்றை "ஜங்க் ஃபுட்' என்பார்கள். அதாவது கெட்ட உணவு.

இந்திய ஊட்ட உணவு நிபுணர்கள் கெட்ட உணவு என்பதை ஏற்க மாட்டார்கள். "தவறான டயட்' அதாவது ""சமநிலை இழந்த ஊட்ட உணவின் கூட்டல்'' என்பார்கள். கெட்ட உணவு விளம்பரத்தில் ஊட்ட உணவு நிபுணர்களும் பங்கேற்பது உண்டு.

சமையல் இல்லாமல் அதாவது சமையலறைக்குச் செல்லாமல் பல மாதங்களுக்கு முன்பே சமைக்கப்பட்டதும் கெடாமல் இருக்க ரசாயனங்களும் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுதான் துரித உணவு. இவற்றிலும் பூச்சி மருந்து விஷம் இருக்க வாய்ப்புண்டு. பூச்சி மருந்து விஷத்திற்கு மேல் வேறு ஆபத்துகளும் உண்டு.

என்னென்ன துரித உணவுகள் நமக்குக் கிடைக்கின்றன? அவற்றில் உள்ள ஊட்டங்களின் அளவு என்ன? உணவைக் கெடாமல் பாதுகாக்கச் சேர்க்கப்படும் ரசாயனங்களில் நன்மை உண்டா? எப்படி சமச்சீரான உணவு பாதிக்கப்படுகிறது? என்று சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்தித்து துரித உணவிலிருந்து விடுதலை பெறுவது நன்மை பயக்கும்.

துரித உணவில் அதிகமான கலோரி உண்டு. ஊட்டம் இல்லாததால் நோய் ஏற்படும். முக்கியமாகக் கூடுதல் கொழுப்பு உடலில் சேர்ந்து குண்டுக்குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. உடலில் தேவைக்குமேல் சதை ஏறுவதால் சர்க்கரை நோய், உயர்ந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மனித ஆயுள் குறைகிறது.

100 வயது வாழ வேண்டிய மனிதன் 50, 60 வயதுகளில் இறக்க நேரிடும். ஆகவே மேலைநாடுகளில் துரித உணவு விளம்பரங்களுக்குத் தடை உண்டு. சில நாடுகளில் துரித உணவுக்குக் கொழுப்பு வரி போடுகிறார்கள். விளம்பரங்களால் தூண்டப்படும் குழந்தைகள் அளவுக்கு மீறி தனியார் நிறுவன உருளை வறுவல்களைத் தின்று பருமன் நோய் வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். குறைந்த எடை குழந்தைகளைவிடக் கூடுதல் எடை குழந்தைகளின் ஆரோக்கிய நிலை ஆபத்தில் முடியலாம்.

உணவில் இரண்டு வகையான கொழுப்புகள் உண்டு. ஒன்று சாதாரணக் கொழுப்பு. நெய், சமையல் எண்ணெய்களில் உண்டு.

மற்றொன்று டிரான்ஸ்ஃபேட் என்று கூறப்படும் கெட்ட கொழுப்பு. இது அடர் கொழுப்பும் அல்ல. டிரான்ஸ் கொழுப்பு, கரையாத கொழுப்பு என்றும் கூறலாம். நெய், எண்ணெய்களை அடர் கொழுப்பு என்பர். கரையாத டிரான்ஸ் கொழுப்பு அடர் கொழுப்பைவிட நான்கு மடங்கு கெடுதல். கரையாத கொழுப்பு வனஸ்பதியில் அதிகம்.

எல்லா சமையல் எண்ணெய்களையும் ஹைட்ரஜனேஷன் செய்து வனஸ்பதி அல்லது டால்டா செய்யப்படுகிறது. எல்லா வகையான துரித உணவுகளிலும், கேக்குகளிலும் வனஸ்பதி பயனாகிறது. அமெரிக்க ஐரோப்பிய டால்டாவில் 2 சதவிகித டிரான்ஸ் கொழுப்பு அனுமதிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் தேங்காய் எண்ணெய் டால்டாவுக்குப் பயனாவதால் டிரான்ஸ் கொழுப்பு குறைவு. தேங்காய் எண்ணெயில் அடர் கொழுப்பு உண்டு. ஆனால், கரையாத கொழுப்பு இல்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் டால்டாக்களில் 12 முதல் 24 சதவிகிதம் கரையாத டிரான்ஸ் கொழுப்பு உள்ளது.

சில டால்டா நிறுவனங்களின் தயாரிப்புகளில் டிரான்ஸ் கொழுப்பு அனுமதிக்கப்பட்ட அளவுக்குமேல் மத்திய அரசால் அனுமதிக்கப்படுவது அடிப்படைத் தவறு. டிரான்ஸ் கொழுப்பு 2 கிராம், அடர் கொழுப்பு 20 கிராம் அளவுக்குமேல் மனிதன் உண்ணும்போது ரத்தக்குழாய் தடிக்கும். ரத்த அழுத்தம் உயரும். இதயம் மட்டுமல்ல, சிறுநீரகம் பழுதுறலாம். நீரிழிவு வரும். ஊளைச்சதையுள்ள குண்டுக்குழந்தை, குண்டுப் பெண்மணி நோயுடன் வாழ்ந்து குறைந்த ஆயுளில் இறந்துவிடுவார்கள்.

ஒரு மனிதன் நலமுடன் வாழ சராசரியாக 2,200 கலோரி உணவு போதும். இந்தக் கலோரி 300 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் உப்பு, 20 கிராம் கொழுப்பு, 2 கிராம் டிரான்ஸ் கொழுப்பு ஆகியவற்றில் கிடைத்துவிடும். 300 கிராம் மாவுச்சத்து (கார்போ ஹைட்ரேட்) என்பதில் சர்க்கரையும் அடங்கும். தானியங்கள், பருப்பு வகைகளில் புரதச்சத்து உண்டு. வைட்டமின் சத்துக்காக உண்ணும் காய்கறி - பழங்களில் தேவையான நார்ச்சத்தும் கிட்டும்.

நாம் உண்ணும் பல உணவுகளில் மாவுச்சத்துடன் புரதச்சத்தும் உண்டு. ஆனால், துரித உணவுகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் எதுவுமே இல்லை என்பதுடன், அனுமதிக்கப்படும் அளவுக்குமேல் உப்பும், கரையாத கொழுப்பும் உள்ளதால் மனித ஆயுள் குறைகிறது. ஆயுள் குறைவது மட்டுமல்ல, தினமும் மாத்திரைகள், ஊசிகள் என்று மனித உடல் மருந்துக்கு அடிமையாவதையும் கவனிக்கலாம்.

அதிகபட்சமாக அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் துரித உணவுகளிலும் குறைந்தபட்சமாக அவரவர் சமைக்கும் உணவுகளிலும் கெடாமல் இருக்கவும் நிறத்திற்காகவும் சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்களினாலும் நோய்கள் ஏற்படும். சாதாரணமாக சமைத்த உணவு 6, 7 மணி நேரத்திற்கு மேல் தாங்காது. பூஞ்சைக்காளான் பிடிக்கும். புளிக்கப் புளிக்கக் கெட்ட வாடை வரும். மோர், சாத்தூத்தம் (பழைய சோற்றில் நீர் ஊற்றி வைக்கப்படும் புளித்த நீராகாரம்) நீங்கலாக மற்ற உணவு கெட்டுவிடும். நீர் ஊற்றி வைக்கும் போது தண்ணீரில் உள்ள ஆக்சிஜன் காரணமாக ஈஸ்ட், லேக்டோ பாசிலஸ் போன்ற நுண்ணுயிரிகள் பெருகி உயிர் வாழ்வதால் மோர், நீராகாரம் உடலுக்கு நல்லது. மற்றவை அப்படி அல்ல. முற்காலத்தில் சர்க்கரைப்பாகு, தேன், உப்பு, கிராம்பு, எலுமிச்சை போன்றவை உணவு கெடாமல் இருக்கப் பயனாயிற்று. இப்போது ஃபிரிட்ஜ். மின்சாரம் நின்றுவிட்டால்? ஃபிரிட்ஜ் உணவும் பாதுகாப்பானது இல்லை.

மனிதர்கள் உண்ணும் ஜாம், ஜெல்லி, சீஸ், ஊறுகாய் போன்ற துரித உணவுகளில் பென்சோட் என்ற நச்சு சேர்க்கப்படுகிறது. பென்சீன் என்ற ரசாயனம் நிலக்கரி வாயுவிலிருந்து உருவாகும் எரிபொருள். பூச்சி மருந்துகளிலும் பென்சோட் உண்டு. அடைக்கப்பட்டு விற்கப்படும் இறைச்சிகளில் நைட்ரேட் சேர்க்கப்படுகிறது. ரொட்டி, பன், கேக் போன்றவற்றில் சோடியம் பென்சோட் சேர்க்கப்படுகிறது. வெள்ளை நிறம் பெற சல்ஃபைட் சேர்க்கப்படுகிறது. சிவப்பு / மஞ்சள் / பிங்க் நிறம் பெற அலுமினியம் குரோமைட் என்ற விஷப்பொருள் சேர்க்கப்படுகிறது. கேசரி பவுடர் என்ற பெயரில் குரோமைட் விற்கப்படுவதால் அதை அல்வாவிலும் கேசரியிலும் பயன்படுத்துவார்கள். விஷயமறியாத தாய்மார்கள் கேசரி பவுடரை வாங்கி சிவப்பு நிறத்துக்குப் பயன்படுத்துவது உண்டு. தனியார் நிறுவன உருளைக்கிழங்கு வறுவல்களில் புட்டிலேட்டட் ஹைட்ராக்சினேட் சேர்க்கப்படுகிறது. வயிற்றில் கட்டி வரும். சோடியம் பைகார்பனேட் என்ற சமையல் சோடா சேர்க்கப்படாத பொருளே இல்லை. இதுவும் உப்பைப்போல் அளவுக்கு அதிகமானால் ரத்த அழுத்த நோய்க்கு வித்தாகும். சல்ஃபைட் விஷத்தால் ஒவ்வாமை, மூச்சுத்திணறல், சளி ஏற்படும்.

இது ஓர் அவசர உலகம். நல்லுணவை நல்ல விதமாகச் சமைக்கக்கூடிய பாட்டிமார்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டோம். ஜங்க் ஃபுட் - அதாவது கெட்ட உணவை விலைகொடுத்து வாங்கி நோயுறுகிறோம். மனிதர்களே நன்கு யோசியுங்கள். அந்தக் காலத்தில் நெல்லூர்த்த மாவு, சத்து மாவு என்று பாட்டிமார்கள் திடீர் உணவு செய்வார்களே.

அவல் உள்ளது, பழங்கள் உள்ளன, இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சப்பாத்தி என்று எதுவும் வீட்டில் செய்து நீங்களே கொண்டு வரவேண்டும். துரித உணவைவிட சமையலறை உணவுதான் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com