

அரசுடமையாக்கப்பட்ட பொது வங்கிகள் வழங்கும் வட்டியும் குறைவுதான், வசூல்செய்யும் வட்டியும் குறைவும்தான். பொதுமக்கள் அதிகம் நம்புவது அரசு வங்கிகளைத்தான். தங்களின் சேமிப்புகள் பத்திரமாயிருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.
அரசு வங்கிகளைப் பற்றிப் பெருமையுடன் பேசக்கூடிய விஷயங்கள் பல உண்டு. எவ்வளவு நெருக்கடி வந்தாலும் வங்கிகளின் நிதிநிலை பாதுகாப்பாயுள்ளதென்று நிபுணர்கள் கூறுவதுண்டு.
ஒவ்வொரு காலாண்டுக் கணக்கெடுப்பிலும் இப்படிப் பேசுவதற்கு எதுவும் பொருள் உள்ளதா என்று உன்னிப்பாகக் கவனித்தால், செயல்படாத வரவினம் செயல்படுவதாகப் புள்ளிவிவரம் வழங்கப்படும்.
1998-இல் ஒட்டுமொத்த வருமான மதிப்பில் அதாவது ஜி.டி.பி.யில் 2 சதவீதமாயிருந்த கடன்வழங்கல் 2011-12-இல் 5.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உலகமயமாதல் - வர்த்தக சுதந்திரம் என்று பேசப்படும் இக்காலகட்டத்தில் இப்படிக் கடன் வழங்கல் ஓங்கி நின்றாலும் வளர்ச்சி குன்றியது ஏன்? யாருக்குக் கடன் வழங்கினார்கள்? எப்படி வழங்கப்பட்டன? "கடன் வழங்கலில் கட்டமைப்புச் சீர்திருத்தம்' என்கிறார்களே. அதன் பொருள் என்ன? இந்த வினாக்களுக்குப் பதில் - "அமைதியான வங்கிக்கொள்ளை'!
வங்கிக்கடன் பெறுவோர் யார்? விவசாயம், தொழில், வர்த்தகம், வாகனப்போக்குவரத்து, நுகர் பொருள், வீடு கட்டல், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய வெவ்வேறு ரக வாடிக்கையாளர்களே.
இவற்றில் அவ்வப்போது தள்ளுபடியாகும் விவசாயக் கடன்களைத் தவிர மற்றவை வங்கிகளைப் பொருத்தவரை பாதுகாப்பானவை.
மகளிர் சுயஉதவிக் குழுக்களை எடுத்துக்கொண்டாலும் முக்கால்வாசி திரும்பிவிடும்.
பொதுவாக வாங்கப்பட்ட கடன் வசூலாவதில் சந்தேகம் என்று தோன்றும்பட்சம் தனியார் வங்கிகள் கடன் தராது. அதிகம் "ரிஸ்க்' எடுப்பவை அரசு (பொதுத்துறை) வங்கிகளே.
வீட்டுக்கடன், கல்விக்கடன், சிறுநிறுவனத் தொழில்கடன் போன்றவற்றிலும் சற்று "ரிஸ்க்' உள்ளது. "வாராத நிலைக்கு' வாய்ப்பு உண்டு. ஆனால், அதிகபட்சம் "வாராநிலை'களாக மாறக்கூடியவை, "செயல்படாத வரவினம்' 3.6 சதவீதம் செயல்படுவதாகக் கூறப்படும் விஷயமே.
அதுவே வங்கிக்கடன் வழங்கலில் நிலவும் உள்கட்டமைப்புச் சீர்திருத்தம். மின்சக்தித் துறை, எரிசக்தித்துறை, தகவல் பரிமாற்றம், சாலை - தரைப்போக்குவரத்து, கடற்கரை - துறைமுகக் கட்டுமானம், விண் - விமானப் போக்குவரத்து ஆகியவை "உள்கட்டமைப்புகள்' என்று வரையறுக்கப்பட்டுள்ளன.
உலகமயமாதலைத் தொடர்ந்து இதுநாள்வரை பொதுத்துறை ஏகபோகமாகத் திகழ்ந்த உள்கட்டமைப்புகள் இப்போது தனியார் நுழைவுக்கு இடம் கொடுத்துள்ளன. இப்படிப்பட்ட துறைகளின் நிதித்தேவைக்குரிய முதலீடுகளுக்குப் அரசு வங்கிகள் கடன் வழங்குவதே உள் கட்டமைப்பு நிதிச்சீர்திருத்தமாகும்.
வளர்ச்சித் திட்டத்தில் வங்கிகளின் பங்கேற்பு மேற்படி உள்கட்டமைப்புத் துறைகளில் நுழைந்துள்ள தனியார் தொழில் நிறுவனங்களுக்குத் தாராளமாகக் கடன் வழங்க ஏற்பாடாகியுள்ளது. விளைவு, இப்படிப்பட்ட தனியார் நிறுவனங்களின் நஷ்டங்களை அரசு வங்கிகளைக்கொண்டு ஏற்கச் செய்வதாகும்.
உள்கட்டமைப்புத் துறைகளில் அரசு பங்கேற்காமல் தனியார் நிறுவனங்களைப் பங்கேற்க வைத்து அதற்கு அரசு வங்கிகளிடமிருந்து கடனைப் பெற்றுத்தர நெருக்கடி தருகிறது.
"பொதுப்பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்களின் நேர்மையற்ற நிர்வாகத்தால் எவ்வளவு நஷ்டம் வந்தாலும் அதை வங்கிகள் ஏற்றுக்கொண்டு, வாராக்கடன்கள் எல்லை மீறுமானால் அரசு வங்கிகள் திவாலா நிலைக்குத் தள்ளப்படாதா?' என்று கேட்டால், "அப்படி எதுவும் ஆகாது' என்று கூறும் வங்கி நிர்வாகிகள், "ரிசர்வ் வங்கி புதுப்புது நோட்டுகளாக அச்சடித்து வழங்கி எங்களைக் காப்பாற்றிவிடும்' என்கின்றனர்.
உதாரணமாக, உள்கட்டமைப்புத் துறையின் கீழ்வரும் கிங்ஃபிஷர் விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து வங்கிக்கடன் வந்துகொண்டுள்ளது.
விஜய் மல்லையாவுக்கு விமான ஊழியர்களின் சம்பளம் மட்டுமல்ல; ஐ.பி.எல். ராயல் சேலஞ்சர்ஸ் பங்களூர் அணி கிரிக்கெட் வீரர்களுக்கும் சம்பளம் தரவேண்டும்.
விஜய் மல்லையாவின் அழகு மகன் பொறுப்பேற்றுள்ள ஒரு உல்லாசபுரிதான் ""கிங்ஃபிஷர் காலண்டர் பெண்'' உலகப்பிரசித்தம். பல லட்சம் செலவழித்து இயற்கை எழிலுடன் செட்டுப்போட்டு விதம்விதமாக வினோதமான கோணத்தில் ஆயிரக்கணக்கில் ஸ்டில் ஃபோட்டோவுடன் தினம் டி.வி. ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு விடியோவும் எடுக்க உதவும் நூற்றுக்கணக்கான, "இரு துண்டு' என்று கூறப்படும் பிக்னி உடையுடன் காட்சி தரும் மாடல் அழகிகளின் சம்பளம் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தைவிடவும், பைலட்டுகளின் சம்பளத்தைவிடவும் கூடுதல் என்று அறிக.
உண்மையில் விஜய் மல்லையா சாராய வியாபாரி. அரசியல் கட்சிகளுக்கு அள்ளி வழங்கிய வள்ளல். கிங்ஃபிஷர் பீர், ராயல் சேலஞ்சர் விஸ்கி, மெக்டோவல் பிராந்தி எல்லாம் மல்லையாவின் "யுனைட்டட் ஸ்பிரிட்ஸ்' சாராயத் தொழிற்சாலையின் வழங்கல்கள். இவ்வளவு இருந்தும் மல்லையாவுக்குப் பல்லாயிரம் கோடி கடன்களுக்குப் பொது வங்கிகள் பொறுப்பேற்றுள்ளன.
அண்மைச் செய்தி எதுவெனில் "யுனைட்டட் ஸ்பிரிட்ஸ்' பங்குகள் விற்கப்பட்டன. அவற்றை வாங்கிய "டையோஜியோ' உலகத்தில் நம்பர் ஒன் சாராய சாம்ராஜ்ஜியம். ஸ்காட்ச் விஸ்கி இவர்களின் தயாரிப்புதான். இவ்வகையில் கிட்டியுள்ள பணம் 5,725 கோடியின் மூலம் கிங்ஃபிஷர் விமான நிறுவனம் சீராகாதாம். சாராய விளம்பரத்துக்கு உதவிய பிக்னி அழகிகளுக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களுக்கும் உதவக்கூடும்!
கட்டமைப்புத்துறை என்றால், செலவு அரசின் பொறுப்பு; நிதியைப் பெறுவது தனியார் பொறுப்பு. உள்கட்டமைப்பு நிதிச் சீர்திருத்தம் - கார்ப்பரேட்டு நிதிச்சீர்திருத்தம் ஒருவகையில் அரசியல் கட்சி - ஆளும் கட்சித் தேர்தல் நிதியைக் குறிவைத்தும் நிகழலாம்.
கிங்ஃபிஷரைப்போல் இன்னம் சுமார் 40 நிறுவனங்கள் காரணமாய் இப்படிக் கையாளப்படும் வங்கி நிதியின் மொத்தத் தொகை 3.84 லட்சம் கோடி ரூபாய் எனலாம். இவற்றின் பெரும்பங்கு "தெர்மல் பவர் யூனிட்'டுகளில் பங்கேற்றுள்ள தனியார் நிறுவனங்கள் தவிர, மாநில மின் வாரியங்களும் அடங்கும்.
வழங்கப்பட்ட வங்கிக்கடன் லட்சம் கோடி ரூபாய்கள் என்றாலும் குறிப்பாகத் தெர்மல் பவரில் இறங்கியுள்ள தனியார் நிறுவனங்கள் விலையில்லாமல் நிலக்கரியையும் அள்ளிக்கொண்டு மின்சாரம் உற்பத்தியையே தொடங்கவில்லை என்பது கொடூரமான கொள்ளையாகப்படவில்லையா?
உள்கட்டமைப்புச் சீர்திருத்தம் இந்தியத் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதால் அரசுடைமை வங்கிக் கடன் எவ்வளவோ தனியார் நிறுவனங்களுக்கு வாரி வழங்கும்போது, கிங்ஃபிஷருக்கு மட்டும் நிறைய விளம்பரம் கிடைத்துள்ளதுடன் அது பெற்றுள்ள கடன் விவரங்களும் வெளிச்சத்துக்கு வருகின்றன.
2010-இல் கார்ப்பரேட் கடன் மறுசீரமைப்புத் திட்ட அடிப்படையில் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்கு 7,720 கோடி ரூபாய் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்து கொடுத்ததன் விளைவால் மேலும் கிங்ஃபிஷர் 1,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.
இப்போதுள்ள நிலவரப்படி கிங்ஃபிஷர் விமான நிறுவனம் ஒரு பைசாக் காசைக்கூட - கடனை - திருப்பித்தர முடியாத நிலையைப் பெற்றுள்ளது. எதிர்காலம் எப்படி என்று எதுவும் கூற முடியாது.
இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறையில் அமலாக்கப்பட்டுள்ள வங்கிக்கடன் சீரமைப்பு திட்டவட்டமாகக் கடனாளிகளை மேலும் கடன்பெறச் செய்ய உதவுகிறதே தவிர, வாங்கிய கடனை எப்படித் திரும்ப வசூல் செய்வது என்ற பொறுப்பையே தட்டிக்கழிக்கிறது.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்கட்டமைப்புத் துறையில் செயல்படும்போது அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவ வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் வழிகாட்டலின்படி அரசுடைமை வங்கிகள் செயல்பட வேண்டும்.
வாங்கிய கடனை இரண்டாண்டில் திருப்பித் தராதபோது மேலும் ஓராண்டோ பழையபடி இரண்டாண்டோ கடனை நீட்டிக்கலாம். வட்டியைக் குறைக்கலாம். கடனைப் பங்காக மாற்றிக் கொள்ளலாம். கிங்ஃபிஷருக்கு வழங்குவதுபோல் கூடுதல் கடன் வழங்கலாம்.
அப்படியும் கார்ப்பரேட்டு நிறுவனம் கடனைத் திருப்ப முடியாவிட்டால் அரசு வங்கி நிர்வாக இயக்குநருக்குக் கடன்பெற்ற பயனாளிகள் இரண்டு நாமக்கட்டியும் நடுவில் சிவப்புக்கோடு போட ஒரு பாக்கெட் ஸ்ரீ சூர்ணமும் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி வழிகாட்டாததுதான் குறை.
உலகமயமாதல் - பொதுத் துறையில் தனியார் நுழைவுக்கு அனுமதித்துவிட்டதால் குறிப்பாக மின்சாரம், நிலக்கரி, எண்ணெய்வளம், சுரங்கம் தொடர்பான துறைகளில் தனியார் மட்டுமல்ல, அரசுத் துறையும் வராத கடன்களில் பங்கேற்கிறது. இந்தத் தொகை விவரம் 1,50,000 முதல் 1,75,000 கோடி ரூபாய் என்று மார்ச், 2012 காலாண்டு அறிக்கை கணக்கு வழங்கியுள்ளது.
இதில் மாநிலங்களின் மின் வினியோகத் திட்டச் செலவுக்கான கடன் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் நிதியமைச்சர் ஒரு முத்தான உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது ""இந்தியாவில் உள்ள ஏழைகள் வாங்கிய வங்கிக்கடனைத் திருப்பிச் செலுத்தச் சரியான நன்னெறிகளைக் கடைப்பிடிக்கின்றனர்''.
பெரிய பெரிய பணக்கார நிறுவனங்கள் வாங்கிய கடனை விழுங்கி ஏப்பம் விட்டுப் பட்டை நாமம் போடும்போது நீ மட்டும் ஏன் ஒழுங்காகக் கடனைச் செலுத்துகிறாய்? என்று ஏழைகளைக் கடிந்து கொள்வதாக நாம் பொருள் கொள்ளக்கூடாது. ஊழல் செய்யும் ஆற்றல் ஏழைகளிடம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.
இன்றைய இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தடுமாற்றத்தை மீட்கும் வழியாகக் கருதப்படும் உள்கட்டமைப்புக் கடன் சீர்திருத்தம் என்பது ஒரு வகையான வங்கிக் கொள்ளை. துப்பாக்கியைக் காட்டி வங்கிக் கொள்ளையர்கள் மிரட்டிக் கொள்ளையடிப்பது வன்முறை. பிடிபட்டால் தண்டனை உண்டு.
உள்கட்டமைப்புத் துறைகளுக்குள் புகுந்து, வளர்ச்சி என்ற போர்வையில் மேலும் மேலும் கடன்வாங்கிப் பொது வங்கிப் பணத்தைச் சுட்டுத் தங்களின் நஷ்டத்தை ஈடுசெய்யும் தனியார் நிறுவனங்களின் வங்கிக்கொள்ளை கத்தியின்றி ரத்தமின்றி நடக்கும் சாத்வீகக் கொள்ளை. அதுவே அமைதியான வங்கிக்கொள்ளை. வாழ்க பாரதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பிரிவினைக் குரல்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள்! பிகார் ஆளுநர்

Israel - Iran போர்ப் பதற்றம்: விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் Austria பயணி அவதி!

அல்லு அர்ஜுன் - அட்லி திரைப்பட டீசர் தேதி இதுவா?

மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? - செல்வப்பெருந்தகை பதில்!
வீடியோக்கள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

