கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அன்னிய முதலீடு பற்றிய புனைவுகள்

இந்திய தேசத்துக்கு ஒரு களங்கமும் வராது என்ற தவறான எண்ணத்தில் சுதந்திரப் பொருளாதாரம் என்ற பெயரில் ஆசியா மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள வளர்ந்துவரும் எழுச்சி நாடுகளில் ஒன்றான இந்தியா தன்னுடைய பொருளாதாரத் தொய்வுகளை மீட்கும் ஒரு கருவியாக அன்னிய முதலீடுகளை வரவேற்றுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2013, 8:05 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

இந்திய தேசத்துக்கு ஒரு களங்கமும் வராது என்ற தவறான எண்ணத்தில் சுதந்திரப் பொருளாதாரம் என்ற பெயரில் ஆசியா மற்றும் தென் அமெரிக்காவிலுள்ள வளர்ந்துவரும் எழுச்சி நாடுகளில் ஒன்றான இந்தியா தன்னுடைய பொருளாதாரத் தொய்வுகளை மீட்கும் ஒரு கருவியாக அன்னிய முதலீடுகளை வரவேற்றுள்ளது.

காகம் உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல் பங்குச்சந்தை சூடுபிடித்துள்ள நிகழ்ச்சிக்கும் புதிய நிதியமைச்சரின் வாய்வீச்சுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள். இந்தியப் பொருளாதாரம் சரிந்துவிட்டதை வளர்ச்சியைக் குறிக்கும் ஜி.டி.பி. புள்ளிவிவரம் (5.4 சதவீதம்) எடுத்துரைக்கும்.

பங்குச் சந்தை நிபுணராயிருப்பவரைக்கூட இப்படி திடீரென்று இந்தியப் பங்குச் சந்தை சூடுபிடித்து - சென்செக்ஸ் - உயர்ந்துள்ள நிலை மிரள வைக்கலாம். இந்திய வளர்ச்சி சரிந்துள்ளது. கார்ப்பரேட்டுகளின் லாபம் குறைந்துள்ளது. ரத்தன் டாட்டா இந்தியாவை விட்டு சீனாவில் தொழில் தொடங்க முடிவு செய்கிறார். அப்படி இருப்பினும்கூட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சீர்திருத்த அறிவிப்புகளே பங்குச் சந்தையை உயர்த்தியதாக ஒரு புனைவு உண்டு.

செப்டம்பர் மாதத்திலிருந்தே ஒன்றன்பின் ஒன்றாக அறிவிப்புகள் வந்தன. ""தேசிய முதலீட்டுக் கழகம்'' என்ற கிழட்டுப்பசுவைக் காட்டினார்கள். இக்கிழட்டுப் பசுவை எப்படிச் சினைப்பிடிக்கச் செய்யலாம் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வரும் என்றார்கள். டீசல், பெட்ரோல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக் கட்டுப்பாடு, சட்டப்பூர்வமாக அண்மையில் ""உங்கள் பணம் உங்களுக்கே'' என்கிறார்கள். அடப்பாவிகளா, கடந்த 65 ஆண்டுகளாக எங்கள் பணத்தை எங்கே பதுக்கினீர்கள்?

நிஜமான விஷயம், யூரோ மத்திய வங்கி செப்டம்பரில் 6-ஆம் தேதி தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்த மிகவும் துணிச்சலுடன் மாபெரும் கடன் பத்திர வெளியீட்டுத் திட்டத்தின் மூலம் ரொக்கப் பணப் புழக்கத்தைப் பெருக்க முன்வந்தது.

இதன் விளைவால் அமெரிக்கத் தரப்பில் சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் முத்திரைப் பத்திரங்களைத் திரும்ப வாங்கும் திட்டத்தை செப்டம்பர் 13-ஆம் தேதி யு.எஸ். ஃபெடரல் வங்கி முன்வைத்தது.

யு.எஸ். - யூரோ நாடுகளின் மூன்றாவது காலாண்டுக்குரிய பணக்கொள்கையின் ரொக்கப் பணப்புழக்க ஓட்டத்தில் மூன்று ஆண்டுகள் வரை மிகக்குறைந்த வட்டி / வட்டியில்லாக் கடன் வழங்கல் காரணமாக உலகளாவிய நிலையில் 22 பில்லியன் டாலர் அன்னிய அமைப்பு முதலீடுகள் உலா வரக்கூடிய விவரமே சென்செக்ஸ் 3,500 புள்ளிகள் எகிரி டிசம்பர் 22-இல் 19,242-க்கு உயர்ந்தன.

இந்திய நிதி அமைச்சர் அலட்டிக்கொள்ளும் சீர்திருத்த அறிவிப்புகளுக்கு முன்பே பங்குச் சந்தை சூடு பிடித்துவிட்டது. நிதி அமைச்சரின் எந்த சீர்திருத்த அறிவிப்பும் இல்லாவிட்டால்கூட பங்குச்சந்தை சூடு பிடித்திருக்கும்.

அன்னிய அமைப்பு முதலீடு 22 பில்லியனில் 13 பில்லியன் டாலர் செப்டம்பரில் உலா வந்துவிட்டது. செப்டம்பருக்குப்பின் மூன்று தவணைகளில் மீதி 9 பில்லியன் டாலரும் உலா வந்துள்ளது. 22 பில்லியன் டாலர் இந்தியாவை மட்டும் குறிவைத்து வரவில்லை.

"பிரிக்' என்று சொல்லப்படும் பிரிட்டன், ரஷியா, இந்தியா, சீனா தவிர மலேசியா, மியான்மர் என்று பல நாடுகளைக் குறிவைத்து அன்னிய முதலீடுகள் இறக்கப்பட்டுள்ளன. செப்டம்பரில் இந்தியப் பங்குச் சந்தை மட்டுமல்ல. ஜப்பான், பிரேசில், சீனா தவிர இதர "பிரிக்' நாடுகள் "பிரிக்'கில் சேராத நாடுகள் எல்லாம் சேர்த்து உலகம் முழுவதும் பங்குச்சந்தை சூடு பிடித்துள்ளதே தவிர, நிதியமைச்சர் கொண்டுவந்து காட்டிய ஒரு கிழட்டுப்பசுவைப் பார்த்தா பங்குச்சந்தை உயரும்?

யு.எஸ். ஃபெடரலும் யூரோ மத்திய வங்கியும் வழங்கியுள்ள 22 பில்லியன் டாலர் ரொக்கம் உலகில் கருமேகமாக உலா வருவதால் உலகம் முழுவதும் இந்தக் கருமேகத்திலிருந்து டாலர் மழையை இறக்கிக்கொள்ள புனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தியப் புனலில் விழுந்தது எவ்வளவு?

முதலாவதாக, அன்னிய விமான சர்வீஸ். இரண்டாவதாக, வால்மார்ட். இரண்டையும் கூட்டினால் வந்த முதலீடு 3,000 கோடி ரூபாய்தான். இன்னும் தெரியாத கணக்கு எவ்வளவு என்று தெரியவில்லை. எனினும் 10 பில்லியன் டாலர் வரை இந்தியாவுக்கு "பச்சைத்தோட்டம்' வரும் என்பது பிரதமரின் எதிர்பார்ப்பு.

இதனால் தாமிரத்திலிருந்து தங்கம் வரை விலை உயர்வைக் கண்டோம். நமது வர்த்தகப் பற்றாக்குறை 2 லட்சம் டாலருக்கு எகிறிவிட்டாலும் இந்தியா தங்கம் வாங்கியுள்ளது. "அவல்' இடிக்கும் விளையாட்டில் "உமியை'ப் பெறத்தான் சிதம்பரம் இந்த ஆட்டம் ஆடுகிறார்! அவலைத் தின்றுவிட்டு ஒபாமா ஊதிவிடும் உமிக்கு இவ்வளவு அலட்டலா?

பன்னாட்டு டாலர் முதலீட்டாளர்கள் இவ்வாறு எழுச்சியுறும் பிரிக் நாடுகளிலும் பிரிக்கில் இணையாத இதர ஆசிய நாடுகளிலும் லாபம் தரக்கூடிய துறைகளைத் தேர்ந்தெடுத்து இந்தியா உள்பட எழுச்சியுறும் நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்த வரவில்லை. டாலர் - யூரோ மதிப்புகளை உயர்த்திக்கொண்டு தங்களின் சுயலாபத்திற்காகவே புதிய காலனியத்தைப் புகுத்தவே வந்துள்ளனர். இந்த அமளியில் இந்திய நலனுக்கு ஒதுக்கப்பட்ட ஆசிய நிதியும் சேர்த்தே சுரண்டப்பட்டு இந்தியப் பணமும் அம்போ.

இந்தியா கொண்டு வந்துள்ள நேரடி அன்னிய முதலீடு ஒப்புதல் சட்டத்திற்கோ, மானியங்கள் நீக்கப்பட்டு பணமாக வழங்கப்படும் என்ற அறிவுப்புக்கோ டாலர் - யூரோ முதலீட்டாளர்கள் காத்திருக்கவில்லை.

உலகப் பங்குச் சந்தையில் புகுந்து விளையாடத் தொடங்கிவிட்டார்கள். சென்செக்ஸ் உயர்வதால் இந்தியக் கார்ப்பரேட்டுகளின் இந்திய வளர்ச்சித் திட்டங்களுக்கோ வணிகத் திட்டங்களுக்கோ பொதுத்துறை ஈக்விட்டிப் பங்கு விலை உயர்வுகளுக்கோ - எந்த லாபமும் இல்லை, எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை.

சுதந்திரப் பொருளாதாரம் என்ற பெயரில் அன்னிய முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. அன்னிய முதலீடுகளைக் கொண்டு தேசிய வளர்ச்சியின் தொய்வுகளை மீட்டு விடலாம் என்று கருதுவது தலையாய தப்பெண்ணம். இந்தத் தலையாய தப்பெண்ணத்தில் அன்னிய முதலீடுகள் எது நல்லது, எது கெட்டது என்று தரம் பிரிப்பதும் ஒரு மாயை.

இப்படித் தரம் பிரித்துப் பேசுவதில் நிறங்கள் வேறு. கிரீன்ஃபீல்டாம். ""பச்சைத்தோட்ட முதலீடு'' மிக மிக நன்றாம். மஞ்சள் தோட்டம் தீதாம். மூன்றாவது கருமைத் தோட்டம். மேலும் தீதாம்.

பச்சைத்தோட்டம் என்பது இறக்குமதி நாடுகளில் தொழிற்சாலைகள் கட்டி புதிய புதிய வணிகங்களை வளர்த்துப் பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது. பச்சைத்தோட்ட முதலீடுகளுக்கு ஏராளமாக வரிச்சலுகைகள் மின்வசதி செய்து தரப்படலாம்.

மேலோட்டமாகப் பார்த்தால் நன்மை என்றுதான் தோன்றும். பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும்போது உள்ளூர் அங்காடியில் அதே தொழில் செய்யும் நிறுவனங்கள் அடிபடுகின்றன. குறிப்பிட்ட ஒரு பொருளில் ஏகபோகம் உருவாகிறது. சில ஆயிரம் பேர்களுக்கு வேலை கிட்டும். பல ஆயிரம் பேர்கள் அதே தொழில்கள் உள்ளூர் முதல் கொண்டு தொடங்கப்பட்டவை நசியும்போது, வேலைகளை இழப்பர். பலர் வாட சிலர் வாழலாம்.

உள்ளூரில் பழையபடி மறுமுதலீடுகளாக மாறாமல் லாபங்கள் டாலர்களாக மாற்றப்பட்டு வெளியேறும். எனினும் இந்தப் பச்சைத் தோட்ட முதலீடுகளில் ""உனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி'' என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. நிறக்குருடர்களுக்கு கறுப்பு மஞ்சள் எல்லாமே பச்சையாகவே தெரியலாம்.

மஞ்சள் தோட்ட முதலீடு என்பது உலகப் பணக்காரர்களில் முதல் வரிசையில் இடம்பெற்றுள்ள லஷ்மிபாய் மித்தல் செய்யும் தொழில்தான். வளரும் நாடுகளில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் அதிகப்பட்ச பங்குகளையோ முழுமையாகவோ வாங்கி உகந்த நிர்வாகச் சீர்திருத்தம் செய்து இழந்த அங்காடிகளைப் பெற்று லாபத்தைச் சுருட்டுதல். இதில் உள்ள பிரச்னை அப்படி வரும் முதலீடுகள் கூடுதல் மூலதனத்தை வளர்க்காமல், அதே தொழிலை வெற்றிகரமாகச் செய்யும். வேறு பல நிறுவனங்கள் மூடப்பட்டும் பலர் வேலை இழக்கலாம்.

கருப்புத் தோட்ட முதலீடு என்பது குறுகியகால முதலீடு. ரியல் எஸ்டேட், தங்கம், பங்கு என்று ஊக வணிகத்தில் ஈடுபட்டுத் தொழில் முன்னேற்றத்துக்கு வழியில்லாமல் வளரும் நாடுகளைச் சுரண்டும் உத்தி.

அன்னிய நிதி முதலீடு என்ற பெயரில் அன்னிய வங்கிகளுக்கு உரிமம் வழங்கலும் கருப்புத்தான். அன்னிய வங்கிகள் உள்ளூர்த் தொழில் நிறுவனங்களுக்கு முதலீடு வழங்காது.

ஊக வணிகத்தில் ஈடுபட்டுள்ள கெட்டிக்கார நிறுவனங்களுக்குக் கடன் வழங்கி லாபம் பெறுமே தவிர, உள்ளூர்த் தொழில் வளர்ச்சியில் எந்த அக்கறையும் காட்டாது. ஏனெனில், உள்ளூர் நிறுவனங்கள் கடனைத் திருப்பி வழங்குவார்களா, மாட்டார்களா என்ற சந்தேகம் நிலைகொண்டிருக்கும்.

வாராக்கடன்கள் அரசுத்துறை வங்கிகளின் தலையெழுத்து. வாராக்கடன்கள் வேண்டுமென்றே நிகழ்வதில்லை. அன்னிய முதலீட்டாளர்களுக்கு விரிக்கப்படும் ரத்தினக் கம்பளம் உள்ளூர்த் தொழில் முனைவோருக்கு விரிக்கப்படுவதில்லை.

ஏற்றுமதி குறைந்து இறக்குமதி உயர்ந்து மேலும் மேலும் வெளிவர்த்தகப் பற்றாக்குறையை ஈடுசெய்ய இயலாத சூழ்நிலையில் முதலீடுகளும் இறக்குமதியாகும் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் தில்லை அம்பல நடராஜர் ஆடலாம். மன்மோகன் பள்ளுப் பாடலாம். ஆனால், ஆனந்த சுதந்திரம் உண்டா?

நாமிருக்கும் நாடு நமதுதான் என்று அறிய முடியுமா? இந்நாடு நமக்கே உரிமை என்று உணர முடியுமா? பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்; பரிபூரணனுக்கே அடிமைசெய்து வாழ்வோம். வாழ்க பாரதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.