கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பசுமைத் தொழில்களே தேவை

அண்மையில், "மழையே பெய்யாமல் நாடு வறட்சியுற்றது ஏன்?' என்று ஒரு பாமர விவசாயியிடம் நான் கேட்டபோது, "ஊருக்கு ஊர் செங்கல் சூளைகள் பெருகிவிட்டன.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2014, 9:20 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

அண்மையில், "மழையே பெய்யாமல் நாடு வறட்சியுற்றது ஏன்?' என்று ஒரு பாமர விவசாயியிடம் நான் கேட்டபோது, "ஊருக்கு ஊர் செங்கல் சூளைகள் பெருகிவிட்டன. விறகு மின்சார ஆலைகள் வேறு. இப்படிப்பட்ட சூளை - ஆலைத் தொழில்களின் வெப்பம் புகைகளாக மேலே சென்று கருமேகத்தைக் கலைத்து, மேக நீரை உறிஞ்சி விடுகிறது' என்று அவர் கூறிய விளக்கம் பாமரத்தனமாக இல்லை.

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்த தொழில் கட்டட வேலைதான். ஏராளமான சிறு வீடுகள், காலனி வீடுகள், பங்களா வீடுகள், அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டன.

கட்டடத் தொழிலுக்காக ஆற்று மணல் கொள்ளை போவதை பேசுபவர்கள் விளைநிலங்களில் வளமான வண்டல் மண் செங்கல் சூளைகளினால் கொள்ளை போவதை கண்டு கொள்ளாதது ஏன்? முன்பெல்லாம் பத்து கிராமங்களுக்கு ஒரு செங்கல் சூளை இருக்கும். இன்று ஒரே கிராமத்தில் பத்து செங்கல் சூளைகள் உள்ளன.

விளைநிலங்களில் அல்லது ஏரிப் படுகைகளில் வளமான செம்மைக் களிமண் சேறு குழைக்கப்பட்டு பச்சைக் கல் அறுக்கப்பட்டுச் சூளைகளில் சுடப்படுகின்றன.

ஊருக்கு ஊர் செங்கல் சூளைகளின் பெருக்கத்தால் பூமி உஷ்ணமாவது ஒரு பக்கம். வறட்சியிலும் டேங்கர் டேங்கராகக் குடிநீர் வாங்கப்பட்டுச் சேறு குழைக்கப்படுகிறது.

பின்னர், பச்சைக் கல்லைச் சுட்டெரிக்க பனை மரங்கள், சீமைக் கருவை, மேலும் வனப்பகுதி மரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

கிராமப் பகுதிகளில் உள்ள ஒரு செங்கல் சூளையில் 10 அடுப்புகள் உண்டு. 1 அடுப்புக்கு 1,000 பச்சைக் கல் அடுக்கப்பட்டு 1 டன் விறகு செலவாகும். 1 லட்சம் செங்கல் பெற 100 டன் விறகு வேண்டும்.

ஒரு செங்கல் சூளைக்கு 100 டன் விறகு விலை மட்டும் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை. இதற்கு மேல் தண்ணீர், லேபர் கணக்கிட்டால் 1 செங்கலின் மதிப்பு ரூ.6. இன்று செங்கல் விலை ரூ.7, ரூ.8. ஒரு கிராமத்தில் 10 செங்கல் சூளை இருந்தால் 10,000 டன் விறகு வேண்டும். 10,000 டன் விறகு எரிந்தால் எப்படி மழை பெய்யும்? இதுதான் அப்பாமர விவசாயியின் கேள்வி.

சிலர் தம்மைச் சூழல் ஆர்வலர்கள் என்று அழைத்துக் கொண்டு மழையின்மைக்கும் நீர்ப்பிடிப்பின்மைக்கும் சீமைக் கருவேல்தான் காரணம் என்று கூறுகிறார்கள். அதிகபட்சம் இரண்டு அடிக்கு மேல் சீமைக் கருவேலின் ஆணிவேர் பூமிக்குள் செல்லாது. பாலையில் வளரும் முள் மரங்களுக்குரிய அதே குணம் இதற்கும் உண்டு.

தமிழ்நாட்டில் வளமில்லா பாழ் நிலங்களில் சீமைக் கருவேல் அழிக்கப்படுவது செங்கல் சூளைக்கு உதவிதான். ஆனால், மழைப் பொழிவு இல்லாத சூழ்நிலையை மரங்களின் அழிவு உருவாக்கும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டால் சரி.

காகிதத் தொழிற்சாலைக்குரிய வன அழிப்புத் தடையை செங்கல் தொழிற்சாலைகளுக்கும் விதிக்க வேண்டும். செங்கல் தொழிற்சாலைக்கு மரங்கள் வெட்டப்படும் அவலம் நின்றால், மாதம் மும்மாரி பெய்வது உறுதி.

கட்டடங்கள் கட்டுவதாலும், சாலைகள் அமைப்பதாலும் வளர்ச்சிக் குறி எண் உயர்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பழைய கட்டடங்களை இடித்தும், அதே இடத்தில் புதிய கட்டடங்களைக் கட்டியும் ஜி.டி.பி. என்ற வளர்ச்சி மந்திரத்தை உயர்த்திக் காட்டி பொருளாதாரம் வளர்ந்ததாகப் பொய்களைக் கூறுவது சரியா? உண்மையில் அது வீழ்ச்சி.

எவ்வளவு ஆற்றல் வீணாகிறது?

மணல், செங்கல், சிமெண்டு, இரும்புக் கம்பி, ஜல்லி ஆகியவற்றை உருவாக்க எவ்வளவு தண்ணீர் செலவானது? அள்ளப்பட்ட ஆற்று மணல் மதிப்பு எவ்வளவு?

செங்கற்களுக்காக வெட்டப்பட்ட மரங்கள் எத்தனை? சேறு குழைத்த வண்டல் மண் எவ்வளவு?

இவ்வளவுக்கும் மேல் கட்டட முதலைகள் மனிதர்களுக்கு பதில் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் இன்னமும் லாபம் பெறலாம் என்று யோசிக்கும்போது, ஒரு சராசரி ஏழைத் தொழிலாளியின் ஜீவிதம் என்ன ஆகும்?

இந்தியாவில் வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வளர்ச்சி வேகம் குறைந்து பல ஆண்டுகளாகிவிட்டன. தொழிற்சாலைகளில் முறைப்படியான வேலைவாய்ப்புகள் தேங்கிவிட்டன.

2011 சென்சஸ் கணக்குப்படி வேலையில்லாத் திண்டாட்டம் 14.5 சதவீதம். இதில் 15 முதல் 20 வயதுள்ள இளைஞர்களின் வேலையின்மை 20 சதவீதம். தலித் - பழங்குடி இன இளைஞர்களின் வேலையின்மை 19 சதவீதம்.

அடித்தளக் கட்டமைப்பு, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால் ஆகியவற்றால் ஏழைகளின் துயர் துடைக்கப்பட்டதா? இந்தியாவில் சுமார் 30 சதவீத மக்கள் போதிய சத்துணவு இல்லாமல் ரத்தச் சோகையுடன் வாழ்கின்றனர்.

கிராமங்களில் பொது சுகாதார வசதி, நல்ல கல்வி வசதி இல்லை. ஏழைகளின் சம்பாத்தியமெல்லாம் படிப்புச் செலவுக்கும் மருத்துவச் செலவுக்கும் பறி போவதால் கடனாளியாகவே வாழ்கின்றனர். வறட்சியின் கொடுமையால் விவசாயமும் கை கொடுக்கவில்லை. கந்து வட்டியில் வாழ்வை நாசமாக்கி நரக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.

ஜி.டி.பி. என்ற வளர்ச்சி மந்திரத்தால் பணக்காரர்களுக்குப் பணம் பெருகுகிறது. ஆனால், ஏழைகளின் பணம் பறி போகிறது. ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. ஏழைகளால் எட்டிப் பிடிக்க முடியாத அளவில் பொருள்களின் விலைகள் உயர்ந்துவிட்டன.

ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் ஐந்து தவிட்டு பிஸ்கட் வாங்கி 1 வேளை ஓட்டலாம். 2 ரூபாய்க்கு 1 பன். 7 ரூபாய்க்கு டீ + வடை. அதற்கு மேல் ரூ.50 கொடுத்து ஒரு முழுச் சாப்பாடு என்பதுகூட கனவாகிவிட்டது. பசுமைக்குப் பகையை ஏற்படுத்தும் தொழில் வளர்ச்சிக்கு எதிரான மாற்றுத் திட்டமே பசுமைத் தொழில்கள்.

பசுமைத் தொழில்கள் என்பவை உலகை அழிவிலிருந்து மீட்பவை. சுற்றுச்சூழலைக் காப்பவை. ஆற்றல் இழப்பு இல்லாதவை. பசுமை காப்பாற்றப்பட்டு, நோயற்ற வாழ்வுக்கு வித்திட்டு, ஏழைகளின் ஜீவாதாரங்களையும் ஜீவிதங்களையும் பாதுகாக்கக் கூடியவை.

தேசப்பிதா மகாத்மா காந்தியும், ஜே.சி. குமரப்பாவும் வடிவமைத்த கதர் - கிராமக் குடிசைத் தொழில்கள், இயற்கை விவசாயம் போன்றவை பசுமைத் தொழில்களுக்குரிய எடுத்துக்காட்டுகள். தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் உள்ள சர்வோதய சங்க காதி அங்காடிகளும், காந்தி கிராம அங்காடிகளும், தி. கல்லுப்பட்டி காந்திநிகேதன் நிறுவனமும், டாக்டர் சுப்பராயனும் ராஜாஜியும் உருவாக்கிய திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு சூழலுக்கு ஆபத்து இல்லாத வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

இந்திய அளவில் காதி கமிஷன், காதி கிராஃப்ட் பணிகளும் பாராட்டக் கூடியவை. ஜார்க்கண்ட் மாநில அரசின் ஜார் கிராஃப்ட் அலங்கார ஆடை அணிகலன்கள், மூங்கிலைக் கொண்டு நேர்த்தியான தட்டு முட்டு சாமான்கள் உற்பத்தி செய்து இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

தேவ்லாபார் நாக்பூரில் இயங்கி வரும் கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரமும் அதன் கிளை அமைப்புகளும் பஞ்சகவ்ய ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்து விற்பதுடன், பல லட்சக்கணக்கான பசு மாடுகளைப் பராமரிக்கும் கோசாலைகளையும் நடத்தி ஏழைகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

இயற்கை விவசாயத்திற்கும் புத்தொளி வழங்கி வருகிறது. இவ்வாறே ஆந்திரப் பிரதேசத்தில் "டிம்பாக் டெக்கான் டெவலப்மெண்ட்' கூட்டுறவுச் சங்கம் இயற்கை விவசாயத்திலும் இயற்கை விவசாய அங்காடிகளிலும் கவனம் செலுத்திப் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நலவாழ்வை வழங்கி வருகிறது.

புணே நகரத்தில் கழிவுக் குப்பை பொறுக்குவோர் சங்கம் இயற்கை இடுபொருள்கள், மரபு சாரா மின்சார உற்பத்தி மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நல்ல வருமானத்துடன் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் செல்கோ நிறுவனம் இரண்டு லட்சம் ஏழைகளுக்கு சோலார் மின்விளக்குகள் அமைத்துக் கொடுத்து அவர்களையே உரிமையாளர்களாக்க, வங்கிக் கடன் பெற்றுக் கொடுத்து ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கையில் தீபம் ஏற்றி வைத்துள்ளது. கல்வி வசதியும் செய்து கொடுத்துள்ளது.

சென்னை கூத்தப்பாக்கத்தில் செல்கோவைப் பின்பற்றி சோலார் மின் விளக்குகள், மின் விசிறிகள் உற்பத்தி செய்து 200 குடும்பங்கள் பயன்பெறுகின்றன.

கேரள மாநிலத்தில் "குடும்ப ஸ்ரீ' என்ற மகளிர் கூட்டுறவு இயக்கம் சோப்பு போன்ற பொருள்களை உற்பத்தி செய்து ஏழைகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

"குடும்ப ஸ்ரீ' எழுப்பிய கேள்வி, "பன்னாட்டு நிறுவனம் விற்கும் சோப்பைப் போட்டு உடம்பில் தேய்க்கும் அளவில் நாமென்ன அவ்வளவு அழுக்காகவா இருக்கிறோம்?'

நமது பொருளாதார வளர்ச்சியின் போதகர்களாக அன்னிய முதலீட்டாளர்களை நியமித்து, "நாம் எதை உண்ண வேண்டும்? எந்த சோப்பு போட்டுக் குளிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும் என்று நமக்குச் சொல்லித் தரும் அளவுக்கு இடம் கொடுத்து நம்முடைய சிந்தனா சக்தியை இழந்து விட்டோமா?

யார் என்ன சொன்னாலும் நமது தேவை பசுமைத் தொழில்களே. காந்தியம் காணாமல் போய்விடவில்லை; போகாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.