பொதுப் பங்குகள் என்னும் கவச குண்டலங்கள்
ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய, பொதுப் பங்குகளை விற்கும் நடைமுறையைப் பல ஆண்டுகளாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.


ஆண்டுதோறும் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய, பொதுப் பங்குகளை விற்கும் நடைமுறையைப் பல ஆண்டுகளாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. கலப்புப் பொருளாதாரத்தின் அரிய கண்டுபிடிப்பாகவும், நிதிப் பற்றாக்குறையை நீக்கும் அருமருந்தாகவும் பொதுப் பங்கு விற்பனை இருந்து வருகிறது.
இந்தியாவில் "ஸ்டேட் பாங்க்' உள்பட அனைத்து அரசு வங்கிகளின் 49 சதவீதப் பங்குகளும் ஆண்டுக்கு ஐந்து சதவீதம் விற்கப்படுகின்றன. இதனால், தொழில் முதலீடு உயரும் என்று நம்பப்படுகிறது. அது உண்மையல்ல. பற்றாக்குறையும் வட்டியும் குறைந்தபாடில்லை. பொதுப் பங்கு விற்பனை தனியார் தீவனமாகி வருகிறது.
2014-15 பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய 63,000 கோடி ரூபாய் வருமானம் பெறுவதற்குப் பொதுப் பங்கு விற்பனைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சரின் இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்த இலக்கு 56,000 கோடி ரூபாய். ஆனால், 63,000 கோடி ரூபாய் வருவாய் திரட்ட பொதுப் பங்கு விற்பனைக்கான வழித்தடம் உருவாக்கப்பட்டுவிட்டதாகக் கூறும் இந்நாள் நிதியமைச்சரின் அறிவிப்பு அதிர்ச்சியாக உள்ளது.
பாரதப் போரில் "அர்ஜுனனாக' அவதாரம் எடுத்துள்ள நிதியமைச்சர் ஜேட்லி, அம்பு எய்வதற்குக் குறி வைத்துள்ள பொது கௌரவத் துறைகள் எவை?
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஞசஎஇ), இந்திய எஃகு ஆணையம், கோல் இந்தியா லிமிடெட், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், தேசிய நீர் மின்சக்தி கார்ப்பரேஷன், ராஷ்டிரிய ஈஸ்பத் நிகம்.
இந்த ஏழு பொது நிறுவனப் பங்குகளை விற்று இந்த ஆண்டு பட்ஜெட் பற்றாக்குறை சீர் செய்யப்படும்.
ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இப்படி பற்றாக்குறையைச் சரிசெய்யப் பொதுப் பங்கை ஏலம் விடும் நடைமுறை இருப்பினும், இதுவரை எதிர்பார்த்தபடி வருவாய் வந்ததா? வந்திருக்காது. வந்திருந்தாலும் சிறிய அளவில் வந்திருக்கலாம். ஆனால், இலக்கு நிறைவேறியதாக வரலாறு இல்லை. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ஜேட்லியும் இல்லை சிதம்பரமும் இல்லை.
கடந்த நான்கு ஆண்டுகளாகப் பொதுப் பங்கு விற்பனை பற்றிய அறிவிப்பையும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் முயற்சியில் அடைந்துவரும் தோல்வியையும் கவனித்தால், சுவாரஸ்யம் நிரம்பிய டி.வி. மெகாத் தொடர் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில், பொதுப் பங்கு விற்பனை மூலம் திரட்டப்படும் வரவுக் கணக்கு சற்று பிரகாசமாகக் காட்சி தந்தது. இடைக்கால பட்ஜெட்டில் ப. சிதம்பரம் 56,000 கோடி ரூபாய் என்ற இலக்கை நிர்ணயித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாகப் பொதுப் பங்கை விற்று பணம் திரட்டும் முயற்சியில் நிகழ்ந்தது என்ன? இப்படி அறிவிப்பு வந்ததும் பங்குச் சந்தையில் பொதுப் பங்கு விலை சரியும். எதிர்பார்த்த வருவாய் வராது என்று தெரிந்ததும் அதுபற்றிய பேச்சே இருக்காது. கோப்புகள் உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். நீண்ட உறக்கத்திற்குப் பின் முன்னாள் நிதியமைச்சர் விழித்தெழுந்து பழைய அறிவிப்பை நினைவுபடுத்துவார்.
பொதுப் பங்கு விற்பனை மூலம் வசூலான வருவாய் பற்றிய விவரத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. பொதுப் பங்கை விற்பதற்கு நிதியமைச்சகம் எத்தனை கபட நாடகங்களை நடத்துகிறது என்று கவனிக்கலாம்.
முதற்கண், லாபம் இல்லாவிட்டாலும் லாபம் உள்ளதுபோல் காட்ட பொதுத் துறைப் பங்குகளுக்கு "டிவிடண்ட்' வழங்கக் கட்டாயப்படுத்தும். "டிவிடண்ட்' வழங்க பணம் இல்லாவிட்டால், ஆயுள் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனிடம் கடன் வாங்கத் தூண்டும்.
அதைத் தொடர்ந்து, ஜவுளிக்கடை வியாபாரம் போல் ஆடித் தள்ளுபடி வழங்கும். அதாவது, பொதுப் பங்கு வாங்கினால் விலையில் தள்ளுபடி. இதுநாள் வரை இப்படித் தில்லுமுல்லு செய்து தில்லை அம்பலம் வருமானம் காட்டி வந்ததுண்டு.
இவ்வாறு நாடகமாடி, இல்லாத சிறப்பை இருப்பதுபோல் காட்டி, பொதுத்துறையை லாபத்தில் கொழிக்கும் நிறுவனமாகக் காகிதத்தில் காட்டும் சிதம்பர வித்தை பங்குச்சந்தை படேவாலாக்களுக்குப் புரியாமலா இருக்கும்?
கடன் வாங்கிக் கல்யாணம் செய்வதுபோல், பொதுத் துறையின் "டிவிடண்ட்' அறிவிப்பை வைத்துப் பங்குச் சந்தையில் பொதுப் பங்கு மதிப்பு உயரும் என்று எண்ணுவது எவ்வளவு மதியீனம்?
உண்மையில் அசல் மதிப்பு குறையுமே தவிர உயராது. மாயத் தோற்றம் என்பது விஸ்வரூப தரிசனம் அல்ல. இந்த மாயத் தோற்றம் மறைந்ததும் பங்குச் சந்தை அமளி அடங்கிவிடும்.
இப்படி அவசரப்பட்டு வழங்கப்படும் அதிரடித் தள்ளுபடி, "டிவிடண்ட்' அறிவிப்பால் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய பொதுத் துறை நிறுவனம் தடம் புரளும். பொதுப் பங்கை சுமார் விலையில் பெற்றுக் குறைந்த வருவாயும் கூடுதல் வட்டியும் என்று கணக்குப் பார்த்தால் பட்ஜெட் வருவாய் மைனஸ்.
இப்படி ஒரு பொதுத் துறை நிறுவனம் நிதியமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியதால் அதன் சுதந்திரமும் பறி போகிறது. நல்ல நிர்வாகத் திறமையுள்ள இயக்குநர் கையறு நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
தனியார் நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம், அவர்கள் இப்படியா பங்குகளை விற்கிறார்கள்? பங்கு மேலே மேலே உயரும் வகையில் தங்களைத் தயார் செய்து கொண்ட பின்புதான் விற்பனை செய்கிறார்கள்.
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைக் குறி வைக்கிறார்களே தவிர, தங்களின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையைக் குறிவைத்துச் செயல்படுவதில்லை.
பங்குச் சந்தையின் சூழ்நிலை முக்கியம். அதை வைத்துத்தான் பொதுப் பங்கு தக்க மதிப்பைப் பெறுகிறது. பொதுப் பங்கை நல்ல விலைக்கு விற்று வருவாயை உயர்த்துவதற்கும், பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக அவசரம் அவசரமாக விற்பதற்கும் வித்தியாசம் உண்டு.
பங்குச் சந்தையை அனுசரித்துக்கொண்டு, நல்ல விலையைப் பெறும் தருணத்தை உகந்தவாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பங்குச் சந்தையை அனுசரிக்காமல் வேண்டுமென்றே பொதுத் துறையை பலவீனப்படுத்தும் எண்ணத்தில் அவசரம் அவசரமாகப் பொதுப் பங்கை விற்பனைக்கு அரசு விடுவிக்கக்கூடாது.
அப்படி விடுவித்தால், பெற வேண்டிய வருவாயைப் பெற முடியாமல் போகும். கடந்த ஆண்டு அனுபவமே வரும் ஆண்டுகளிலும் தொடரும். அப்புறம் இன்றைய நிதியமைச்சருக்கும் முன்னாள் நிதியமைச்சருக்கும் வித்தியாசம் தெரியாமல் போகும்.
பொதுப் பங்கு விற்பனையை நிறுத்திவிட்டால் பட்ஜெட் பற்றாக்குறையை எவ்வாறு ஈடுசெய்வது என்ற கேள்வி வருவது இயல்பு. முதலில், பொதுப் பங்கு விற்பனையைக் கொண்டு பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய வேண்டும் என்ற கொள்கையே தவறு.
உதாரணமாக, நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் வரவு - செலவுத் திட்டத்தில் செலவு கூடும்போது, நிறுவனத்தின் சொத்தை விற்றா அச்செலவைச் செய்கிறார்கள்? வேறு வகையில் வருவாயைத் திரட்டி லாபம் பெற்றுதானே சொத்து மதிப்பை - அதாவது பங்கு மதிப்பை உயர்த்திக் கொள்கிறார்கள். நிறுவனமா? செலவினமா? என்ற கேள்வி வரும்போது நிறுவனம் என்பதே சரியான விடை.
ஆகவே, ஒவ்வோர் ஆண்டும் அதிரடியாகப் பொதுப் பங்கை விற்று பட்ஜெட் பற்றாக்குறையைச் சரிக்கட்டும் முயற்சி நிரந்தரத் தீர்வு அல்ல. இப்படிப் பொதுப் பங்கு தர்ம நெறியில்லாமல் விற்கப்படுமானால், எதிர்கால வருமானமும் பொதுத் துறை லாபமும் தடைப்படும்.
சம்பந்தப்பட்ட பொதுத் துறையின் லாபம், "டிவிடண்ட்' ஆகியவை அந்தப் பொதுத் துறையின் நிர்வாக உரிமை. அந்த உரிமையைப் பறிப்பது நிதியமைச்சரின் நெறி அல்ல. அப்படியே ஒரு பொதுத் துறையின் பங்கு விற்கப்பட்டுப் பெறப்படும் வருவாய், உற்பத்தித் தன்மையற்ற செலவுக்குப் பயன்படுத்தாமல் அந்தப் பொது நிறுவனத்தின் லாபத்திற்குச் செலவிடப்படுமானால், அரசு வருமானம் தடையில்லாமல் உயரும்.
ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் பாரதப் போரில் கர்ணனின் வீழ்ச்சிக் கதைதான் நினைவுக்கு வருகிறது. பொதுப் பங்குகள் பொது நிறுவனத்தின் கவச குண்டலங்கள். இந்தக் கவச குண்டலங்களை ஒவ்வொன்றாய்ப் பறிப்பதைப் புதிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
மாறாகப் பழைய அரசு கடைப்பிடித்த முறை நீடிக்குமானால், கர்ணனின் கதி பொதுத் துறைக்கு வரும்.
சக்தி வாய்ந்த சூரிய புத்திரனான கர்ணன் தனது அஸ்திரங்களையும், கவச குண்டலங்களையும் இழந்து அர்ஜுனனின் அம்பால் தேர்க்காலில் அடிபட்டு விழுந்து உயிர்ப் பிச்சை கேட்ட கதையாகப் பொதுத் துறை அழியும் ஆபத்து உள்ளது. எச்சரிக்கை தேவை!
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...