கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பனை மரம் பண மரமல்ல

சங்கம் வளர்த்த தமிழ் மன்னர்களின் குலச் சின்னம் பனை மரமே. அன்று பனை மரம் என்பது பண மரம். தமிழர்களின் தேசிய பானம் "பனங்கள்'. தமிழர்கள் இனிப்புக்குப் பயன்படுத்தியது பனைவெல்லம் என்ற கருப்பட்டி.

News image
Updated On :29 அக்டோபர் 2014, 7:57 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

சங்கம் வளர்த்த தமிழ் மன்னர்களின் குலச் சின்னம் பனை மரமே. அன்று பனை மரம் என்பது பண மரம். தமிழர்களின் தேசிய பானம் "பனங்கள்'. தமிழர்கள் இனிப்புக்குப் பயன்படுத்தியது பனைவெல்லம் என்ற கருப்பட்டி.

எல்லாவற்றுக்கும் சிகரமாகப் பனை ஓலைகளைப் பக்குவமாகப் பதப்படுத்தி நேர்த்தியுடன் நறுக்கி முனைகளில் துளையிட்டு முறுக்கேறிய பட்டு நூலால் நுழைத்துக் கட்டி வழங்கப்பட்ட எழுதாச் சுவடிகளே அன்றைய நோட்டுப் புத்தகங்கள். இப்படிப்பட்ட சுவடிகளை உற்பத்தி செய்யும் எழுத்தறியாப் பழந்தமிழ் மக்களே அன்றைய காகிதத் தொழிலதிபர்கள்!

ஆனால், இன்று காகிதங்கள் வந்ததும் பனையின் மதிப்பு சரிந்தது. பனையின் பயன் செங்கல் சூளைதான். அன்று பனை செய்த கல்விப் பயனை இன்று யூகிலப்டஸ் என்று சொல்லப்படும் தைல மரமே செய்து வருகிறது. சுமார் 80 சதவீதக் காகித உற்பத்தியில் பயனாகும் மரம் யூகிலப்டஸ். பின்னர் சவுக்கு மூங்கில், சூபாபுல் மரங்களைக் குறிப்பிடலாம்.

நமது அடிப்படைத் தேவைகளைப் பற்றிப் பேசுவோர் உணவு, உடை, வீடு என்பார்கள். இவை மூன்றும் வாழ்வை நிறைவு செய்யாது. முதலில் அறிவு, அடுத்ததுதான் உணவு. அறிவின் பெட்டகமாயுள்ள நூலகங்களில் லட்சக்கணக்கில் புத்தகங்கள் உண்டு. பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள். காலையில் எழுந்தவுடன் நாம் தேடும் பொருள் அன்றைய செய்தித்தாள்.

இன்று நமது உழைப்பின் மதிப்பு காகிதத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் பணத்திற்கும் காகிதம் தேவை. காகிதங்கள் நமது வாழ்வின் அடிப்படை. காகித உற்பத்திக்கு மரங்கள் வேண்டும். மரக்கூழ் காகிதமாகிறது. இயற்கையின் உதவியில்லாமல் எழுதுகோல் இயங்காது. இன்றைய பிரச்னை காகிதத் தட்டுப்பாடு. தேவையான அளவு உற்பத்தி இல்லை.

காகிதம் பற்றிய 2011-ஆம் ஆண்டின் புள்ளிவிவர அடிப்படையில், சுமார் 65 லட்சம் டன் மரத் துண்டுகளிலிருந்து 100 லட்சம் டன் காகிதம் உற்பத்தியாகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நமது தேவை 5 மடங்கு உயர்ந்துவிட்டது.

உற்பத்தியாகும் காகிதங்களில் 40 சதவீதம் புத்தகங்கள் மற்றும் எழுதும் தேவைக்கானவை. சுமார் 7 சதவீதம் நியூஸ் பிரிண்ட் காகிதங்கள். மீதி 53 சதவீதம் அட்டை. அட்டைப் பெட்டிகளுக்கான கிராஃப்ட் காகிதங்கள்.

இத்தகைய அட்டைக் காகிதங்கள், பழைய பேப்பர் போன்றவை மறுசுழற்சியில் சில நார்ப் பொருள்களோடு சேர்ந்து கூழ் தயாரிக்கப்பயன்படுவது குறிப்பிடத்தக்கது.

காகித உற்பத்திக்குப் பயனாகும் மரங்களில் மூங்கில் தனித்தன்மையானது. பளிச்சிடும் வெண்மைக்கு மூங்கில் கூழ் அவசியம். மூங்கிலின் உள்பகுதியில் சிலிக்கா அமிலம் உள்ளது. அது வெள்ளை நைட்ரேட்டாகப் படிந்திருக்கும். இதனால் காகிதத்திற்கு நல்ல வெண்மை நிறம் கிட்டும்.

யூகிலப்டஸ் இல்லாவிட்டால் காகித உற்பத்தியில் தேக்கம் ஏற்படும். யூகிலப்டஸ் மரம் பற்றியும் தவறான கருத்துகள் பரவியுள்ளன. டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மையம் நிகழ்த்திய பரிசோதனைகள் மூலம், யூகிலப்டஸ் நீர் உறிஞ்சி மரமல்லவென்றும், பக்கவேர் பலமானவை அல்லவென்றும், குறுகிய மண் கண்டத்தில்கூட வேரைச் செலுத்தும் தன்மையினால், மரத்தின் மீது விழும் மழைநீர் ஆழ்துளை நிலத்தடி நீரை நிரப்புமே தவிர ஏற்காது என்றும் நிரூபணமாகியுள்ளது.

யூகிலப்டஸ் உலகளாவியது என்பது மட்டுமல்ல, மிர்ட்டேசி குடும்பத்திற்குரியது என்றும், இக்குடும்ப மரங்கள் வனப்பகுதியில் மிகுதியாக உள்ளதென்றும் ஒரு அறிவியல் தகவல் கூறுகிறது.

1770-இல் கப்பலோட்டி கேப்டன் குக், ஆஸ்திரேலியாவில் உள்ள பட்டேனியே என்ற வனப் பகுதியில் யூகிலப்டஸ் மரங்களின் வனப்பைக் கண்டு வியந்தார். ஓங்கி உயர்ந்து உச்சியில் மூடாக்குப் போட்ட மலர்க் கொத்து போல் காட்சி தந்ததால் உடன் வந்த ஹெர்டியர் என்ற தாவர இயல் நிபுணர் யூகிலப்டஸ் என்று பெயரிட்டார். இதன்பொருள் "மூடிய பூக்கள்'.

கேப்டன் குக் இம்மர விதைகளையும் கன்றுகளையும் சேகரித்து கலிபோர்னியாவுக்குக் கொண்டு சென்றார். இது கலிபோர்னியா மரம் என்று சொல்லும் அளவில் ஆதிக்கம் பெற்றது. பின்னர், பிரேசிலுக்கும் எதியோப்பியாவுக்கும் கொண்டு செல்லப்பட்டது.

எதியோப்பியாவில் யூகிலப்டஸ் ஆதிக்கம் அதிகம். தலைநகர் "அடிஸ் அபாபா' என்றால் "யூகிலப்டஸ் பூக்கள்' என்று பொருள். யூகிலப்டஸ் மரங்களில் 600 ஜாதிகள் உண்டு. இவற்றில் 100 ஜாதிகள் இந்தியாவுக்கு வந்தன. முக்கியமானவை இரண்டு. ஒன்று சமநிலத்தில் வளரும் காகித மரம். மற்றொன்று மலையில் வளரும் தைல மரம்.

சமநிலத்தில் வளரும் யூகிலப்டஸ் காகித மரங்கள் டேராடூனுக்கு வந்தன. தைல மரங்கள் நீலகிரிக்கு வந்தன. யூகிலப்டஸ் தைல மரம் "புளுகம்' எனப்படும். இலைகள் வெளிர் நீலத்தில் இருக்கும்.

தூரத்திலிருந்து பார்த்தால் மலையே நீலமாகத் தெரிந்ததால் தைல மரக் காடுகளை வைத்தே "நீலகிரி' என்று பெயர் வந்தது. பின்னர் தைல மரங்கள் கொடைக்கானல், மூணாறு வனங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. இனி காகிதப் பயனுக்குரிய யூகிலப்டஸ் விஷயத்திற்கு வருவோம்.

இன்று காகிதத் தேவைக்கு ஏற்ப காகித உற்பத்தி ஈடு கொடுக்காததால் 2013-இல் 70,000 டன் மரங்களைக் காகிதத் தொழிற்சாலைகள் இறக்குமதி செய்தன.

காகிதத் தொழில் தேவைக்காக வனங்களை அழிப்பது தவறு என்பது நீதிமன்ற ஆணை. வனத்துறை அமைச்சகமும், 12-ஆவது திட்ட அறிக்கையில் 25 லட்சம் ஹெக்டேர் வனப் பகுதியைக் காகிதத் தொழிற்சாலைக்கு ஒதுக்கியதை நிராகரித்து, "வனங்கள் பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புக்குதானே தவிர, காகித உற்பத்திக்கு அல்ல' என்று கண்டித்தது.

காகிதத் தேவைக்கு வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தை வனத்துறை அறிமுகப்படுத்தியது. 1988-இல் வகுக்கப்பட்ட வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தில் இருந்த இடர்கள் களையப்பட்டன. மரங்களைக் கொண்டு செல்வதிலும் விற்பதிலும் உள்ள தடைகள் நீக்கப்பட்டன.

இன்று ஒப்பந்த முறையில் காகித உற்பத்திக்காக வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தில் முதல்நிலை வகிக்கும் நிறுவனம் ஐ.டி.சி. (இந்தியன் புகையிலை கம்பெனி). புகையிலைக்குள்ள தடைகள் காரணமாக இந்த நிறுவனம் இன்று சூரியகாந்தி, சோயா போன்ற எண்ணெய் வித்து உற்பத்தியுடன் காகித உற்பத்திக்கான வேளாண் காடு வளர்ப்பில் ஈடுபட்டு முதல்நிலையில் உள்ளது. ஐ.டி.சி-க்குப் பின் ஜே.கே. பேப்பர்ஸ், வெஸ்ட்கோஸ்ட் பேப்பர் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

1988-இல் வகுக்கப்பட்ட தேசிய வனக் கொள்கையில், தொழில் தேவைக்கான மர உற்பத்திக்குரிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், விவசாய நிலங்கள் தொடங்கப்பட்டு மானிய விலையில் மரக்கன்று வழங்கும் திட்டம் அறிமுகமாயின.

பிரிபடாத ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஒடிசா, கேரளம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் 1.7 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் சுமார் 1 லட்சம் விவசாயிகளுடன் ஒப்பந்த முறையில் இன்று ஐ.டி.சி. நிறுவனம் யூகிலப்டஸ் மர சாகுபடியில் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டுள்ளது.

இந்த நிறுவனம் பத்ராசலத்தில் மாபெரும் வன ஆய்வுக்கூடம் நிறுவி நோய் தாக்காமல் வறட்சி தாங்கும் பண்பையும், எடை கூடிய மரப் பண்பையும் பெறக்கூடிய 107 வீரிய ரக யூகிலப்டஸ் மரக் கன்றுகளையும், 15 வீரய ரக சவுக்கு ரகங்களையும், 12 வீரிய ரக சூபாபுல் ரகங்களையும் கண்டுபிடித்து அவற்றைப் பணக்கார விவசாயிகளுக்கு கன்று ஒன்றுக்கு ரூ.5 என்ற விலையிலும் ஏழை விவசாயிகளுக்கு ரூ.1 என்ற விலையிலும் வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் இரண்டு சிறிய காகிதத் தொழிற்சாலைகள் உள்ளன. தனியார் துறையில் ஈரோடு சேஷசாயி, அரசுத் துறையில் புகளூர் டி.என்.பி.எல். இவர்களும் விவசாயிகளுக்கு ஒப்பந்த முறையில் கன்றுகள் வழங்கி வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

2009-இல் 1 டன் மரம் ரூ.1,500 முதல் ரூ.2,000 என்று விற்கப்பட்டவை இன்று ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை விற்கப்படுகின்றன. "மரப் பயிரும் பணப் பயிரே' என்ற கருத்தை மனத்தில் இருத்தி லட்சக்கணக்கான விவசாயிகள் வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தில் இறங்கி லாபத்துடன் வன வளர்ப்பும் செய்து காகித உற்பத்தியுடன் விலையில்லா ஆக்சிஜன் உற்பத்தியையும் செய்து வருகின்றனர்.

வீரிய ரக யூகிலப்டஸ், சவுக்கு ரகங்களை வளர்த்தால் 4 ஆண்டுகளில் 25 முதல் 30 டன் வரை அறுவடை செய்து, சுமார் 1.5 லட்ச ரூபாய் வருமானம் பெறலாம்.

மர சாகுபடியில், மரம் 6 அடி வளரும் வரையில் ஆள் தேவை. நட்டு வளர்ந்த இரண்டாம் ஆண்டிலிருந்து காவல்தான் தேவை. இம்மரங்கள் சுயமாக வளர்ந்து வரும். அதிகம் நீர்ச் செலவு இல்லை. சொட்டு நீர்ப் பாசனம் போதுமானது. காற்றில் உள்ள ஈரப்பதமே வாழ வைக்கும். லாபமும் கொழிக்கச் செய்யும்.

சுவடிகள் எழுதப்பட்ட அந்தக் காலத்தில் பண மரமாயிருந்த பனை மரம் இன்று ஏழையாகிவிட்டது.

காகிதங்கள் புழங்கும் இந்தக் காலத்தில், தலைவலியை தீர்த்து வைக்கும் தைல மரமான யூகிலப்டஸ், பண மரமாக வளர்ந்து அறிவுப்பசியைத் தீர்த்து வைக்கிறது.

கட்டுரையாளர்:இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.